தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 'டொயோடா பார்ச்சூனர்' காரில் பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்

 'டொயோடா பார்ச்சூனர்' காரில் பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்

 'டொயோடா பார்ச்சூனர்' காரில் பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்

3


UPDATED : ஆக 30, 2026 02:19 AM

ADDED : ஆக 29, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 02:19 AM ADDED : ஆக 29, 2026 11:14 PM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

' செ ய்யும் தொழிலே தெய்வம்' என, முன்னோர்கள் கூறியுள்ளனர். உழைத்தால் மனம் போல வாழலாம் என்பதற்கு, துப்புரவு பணியாளர் சேஷப்பா, சிறந்த உதாரணம்.

தட்சிண கன்னட மாவட்டம், பண்ட்வாலில் வசிப்பவர் சேஷப்பா, 48. இவர் கடந்த, 1996ல் மாநகராட்சியில், துப்புரவு பணியாளராக பணிக்கு சேர்ந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், சம்பாதித்த பணத்தை வீணாக்கினார்.

இவருக்கு, 2005ல் அன்றைய எஸ்.ஐ., பெள்ளியப்பா, அறிவுரை கூறி நல்வழிப்படுத்தினார். அதன் பின் குடிப்பழக்கத்தை விட்டொழித்த சேஷப்பா, பணியில் முழுமையாக ஆர்வம் காட்ட துவங்கினார். இது, அவரது வாழ்க்கையை வளமாக மாற்றியது.

தினமும் அதிகாலை, 5:00 மணிக்கு, துப்புரவு பணியை துவக்குகிறார். பணி நேரம் முடியும் வரை, மாநகராட்சி அதிகாரிகள் கூறும் பணிகளை செய்கிறார். நகரை சுத்தப்படுத்துவதுடன், குப்பை வாகன ஓட்டுநர் பணியையும் செய்கிறார். மாநகராட்சி அலுவலகத்தை சுத்தம் செய்யும்படி கூறினால், மறுக்காமல் செய்கிறார்.

இவரது தந்தை சாமியாடி. எனவே, வம்சாவளியாக வரும் சாமியாடி சேவையையும் சேஷப்பா செய்கிறார். பணி முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் அவர் ஓய்வாக பொழுது போக்குவது இல்லை. கூலி வேலைக்கு செல்கிறார். பால் உற்பத்தியில் ஈடுபடுகிறார்.

ஓய்வின்றி பணியாற்றினாலும் சோர்வடைவது இல்லை. இதுவரை, அவர் எந்த விதமான மருந்தையும் சாப்பிட்டது இல்லையாம்.

தன்னை கடவுளே ஆரோக்கியமாக வைத்திருப்பதாக, அவர் நம்புகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டத்தை கண்டு, குடிப்பழக்கத்துக்கு ஆளானார். இவரது தந்தை காலமான போது, இறுதி சடங்கு செய்ய பணம் இல்லை. யாரும் உதவிக்கு வரவில்லை. தந்தையின் உடலை தானே சுமந்து சென்று, நேத்ராவதி ஆற்றங்கரையில் தகனம் செய்தார். இது அவருக்கு பாடமாக அமைந்தது.

உழைத்து முன்னேற வேண்டும் என, உறுதி பூண்டார். கடுமையாக உழைத்தார். வறுமை ஒழிந்தது. குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ்க்கை நடத்துகிறார்.

இவருக்கு கார்கள் என்றால், மிகவும் விருப்பம். தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமித்து கார் வாங்கினார். முதலில் சாதாரணமான கார் வாங்கினார். அதை விற்று விட்டு விலை உயர்ந்த காரை வாங்குவது, சேஷப்பாவின் பழக்கம்.

சமீபத்தில் பழைய காரை விற்று விட்டு, 35 லட்சம் ரூபாய் விலையுள்ள, 'டொயோடா பார்ச்சூனர்' காரை வாங்கினார். தினமும் இதில் தான் துப்புரவு பணிக்கு வருகிறார். மாநகராட்சி அலுவலகம் முன்பாக நிறுத்தி விட்டு, துப்புரவு பணியில் ஈடுபடுகிறார்.

கல்வி குறைவாக இருந்தாலும், கடினமாக உழைத்தால் வறுமையை விரட்டி அடிக்கலாம். வசதியான வாழ்க்கை வாழலாம் என்பதற்கு, சேஷப்பா உதாரணம். துப்புரவு பணியில் அவருக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது.

பால் உற்பத்தியில் மாதந்தோறும், 39,000 ரூபாய் சம்பாதிக்கிறார். துப்புரவு பணி மதியம், 12:00 மணிக்கு முடிந்த பின், கூலி வேலைக்கு செல்கிறார். பார்ச்சூனர் காரில் வந்தாலும், கையில் துடைப்பம் பிடிக்க தயங்கியதே இல்லை. தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us