ADDED : நவ 03, 2026 01:29 AM

வாணியம்பாடி: பெண் தொழிலாளிக்கு, 4.75 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வந்ததால், அவர் அதிர்ச்சி அடைந்தார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, பாபு நகரை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சையத் காதர், 38. இவரது மனைவி யாஸ்மின், 33. வீட்டு வேலை செய்கிறார். நேற்று, யாஸ்மினுக்கு, சென்னை பூந்தமல்லி ஜி.எஸ்.டி., அலுவலகத்திலிருந்து, ஒரு 'நோட்டீஸ்' வந்தது.
அதில், சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில், 'டி.வி.எல். யாஸ் டிரேடர்ஸ்' என்ற பெயரில், நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தின், 2024 - 2025ம் ஆண்டிற்கான ஜி.எஸ்.டி., பாக்கி, 4 கோடியே, 75 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், அதை உடனடியாக செலுத்த வேண்டும் என இருந்தது. இந்நிலையில், அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.
யாஸ்மின், திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில், 'நான் எந்த நிறுவனமும் நடத்தவில்லை, என் பான், ஆதார் அட்டையை, யாரோ தவறாக பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
