/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'சிப்ஸ்' பாக்கெட்டில் கருகிய நிலையில் பாம்பு
/
'சிப்ஸ்' பாக்கெட்டில் கருகிய நிலையில் பாம்பு
UPDATED : நவ 08, 2025 06:56 AM
ADDED : நவ 08, 2025 04:29 AM

தட்சிணகன்னடா: கர்நாடகாவில், சிறுமி ஒருவர், கடையில் இருந்து வாங்கிச் சென்ற சிப்ஸ் பாக்கெட்டில், எரிந்து கருகிய பாம்பு துண்டு இருந்ததை கண்டு, கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
கர்நாடகாவின், தட்சிணகன்னடா மாவட்டம், முன்டாஜே அருகில் உள்ள சோமந்தட்கா கிராமத்தில் வசிக்கும், 10 வயது சிறுமி, இரண்டு நாட்களுக்கு முன்பு, பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் இருந்த கடையில் சிப்ஸ் பாக்கெட் வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்தார். அதை பிரித்து சில சிப்ஸ்களை சாப்பிட்டார். அப்போது பாக்கெட்டுக்குள் எரிந்து கருகிய பாம்பின் உடல் இருந்தது. இதை தன் பெற்றோரிடம் கூறினார். பீதியடைந்த பெற்றோர், உடனடியாக மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
டாக்டர்கள், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து, 'எந்த பாதிப்பும் இல்லை' என, கூறிய பின் நிம்மதி அடைந்தனர்.
'சிப்ஸ் பாக்கெட்டுக்குள், பாம்பின் எரிந்த உடல் எப்படி வந்தது' என, கடைக்காரரிடம் விசாரித்தனர். அவருக்கும் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் கிராமத்தினர் கிலி அடைந்துள்ளனர். இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

