இடிந்து விழுந்த சமூகநீதி மாணவியர் விடுதி: காயமின்றி தப்பிய மாணவிகள்
இடிந்து விழுந்த சமூகநீதி மாணவியர் விடுதி: காயமின்றி தப்பிய மாணவிகள்
UPDATED : நவ 14, 2026 07:38 AM
ADDED : நவ 13, 2026 08:27 PM

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் அரசு சமூகநீதி பள்ளி மாணவிகள் விடுதியில் தண்ணீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்தது. குளியலறை, பொருட்கள் வைக்கும் அறை சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக மாணவிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மல்லாங்கிணரில் சமூக நீதி மாணவிகள் விடுதியில் 30 பேர் தங்கி உள்ளனர். இன்று (நவ.,13) காலை விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்தது. இதில் குளியலறை, ஸ்டோர் ரூம் சேதமடைந்தன. மாணவிகள் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்று சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும், தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிகள் அருகில் உள்ள கட்டடத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜான்சன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்:
மல்லாங்கிணர் மாணவியர் விடுதி இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக மாணவியர்களுக்கு எந்த காயமும் இல்லை. பாதுகாப்பை கருதி வேறு இடத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை பராமரிப்பு செய்தாலும் பயன்படுத்த முடியாது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், தாசில்தாரை வரவழைத்து ஆய்வு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கி, புதிய கட்டடம் கட்ட பரிந்துரை செய்யப்பட உள்ளது .
திருப்பதி, தாசில்தார்:
ஏற்கனவே இடிந்து விழும் நிலையில் இருந்தது. அடுத்த மழைக்குள் மாணவிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. எதிர்பாராத விதமாக இன்று இடிந்தது. யாருக்கும் காயம் இல்லை. அந்த பகுதி முற்றிலுமாக தடை செய்யப்பட்டது .
வேறு விடுதியில் தங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
