ரூ.31 லட்சம் ஜிஎஸ்டி பாக்கி; காய்கறி வியாபாரி அதிர்ச்சி
ரூ.31 லட்சம் ஜிஎஸ்டி பாக்கி; காய்கறி வியாபாரி அதிர்ச்சி
ADDED : நவ 16, 2026 05:09 AM

குடியாத்தம்: காய்கறி வியாபாரி வசீம், 36, என்பவருக்கு, 31 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி., 'நோட்டீஸ்' வந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
வேலுார் மாவட்டம், தரணம்பேட்டையை சேர்ந்தவர் வசீம். இவர், தள்ளு வண்டியில் காய்கறி விற்பனை செய்கிறார். வேலை வாங்கி தருவதாக கூறி, கடந்த மாதம் அவரிடம் இருந்து, 'பான்' எண் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் பெறப்பட்டு, 'ஓ.டி.பி.,' எண்ணை வசீமிடம் சிலர் வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், நவ., 12ல் ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் இருந்து, 'நீங்கள், 7.50 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளீர்கள்; அதற்காக, 30 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் ஜி.எஸ்.டி., வரி பாக்கி செலுத்த வேண்டும்' என, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த வசீம், குடியாத்தம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்திய நிலையில், 'மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வசீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
