PUBLISHED ON : ஜூலை 30, 2026 05:04 AM

கோவை: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன், பஞ்சாபில் மீட்கப்பட்டு, தாயுடன் மீண்டும் இணைந்து உள்ளார்.
கோவை, நீலாம்பூரை சேர்ந்தவர் சுந்தரி. இவரது மூத்த மகன் பிரகாஷ், 2003ல், தன் 16வது வயதில் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக தவித்த பிரகாஷ் மீட்கப்பட்டு, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள தொண்டு நிறுவன காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருவது, சமூக ஆர்வலர் முத்தையா மூலமாக சமீபத்தில் சுந்தரிக்கு தெரியவந்தது.
உரிய அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே பிரகாஷை தமிழகத்திற்கு அனுப்ப முடியும் என, அங்குள்ள நிர்வாகம் தெரிவித்தது. சுந்தரியிடம் ஆவணங்கள் இல்லை. அதனால், கடந்த 13ல் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
இது குறித்து, கடந்த 14ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பிரகாஷின் ஆவணங்களை திரட்டவும், அவரை கோவை அழைத்து வரவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கடந்த 25ம் தேதி சுந்தரி, சமூக ஆர்வலர் முத்தையாவுடன் சண்டிகர் சென்றார். அங்கு மகனை பார்த்து கண்ணீர் மல்க ஆர தழுவினார்.
மகனை விரைவாக ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க உதவியதுடன், தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு சுந்தரி தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.
