/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
துாரிகையில் ஜாலம் காட்டும் காரிகை கலைத்துறை கதாநாயகியின் பயணம்
/
துாரிகையில் ஜாலம் காட்டும் காரிகை கலைத்துறை கதாநாயகியின் பயணம்
துாரிகையில் ஜாலம் காட்டும் காரிகை கலைத்துறை கதாநாயகியின் பயணம்
துாரிகையில் ஜாலம் காட்டும் காரிகை கலைத்துறை கதாநாயகியின் பயணம்
UPDATED : டிச 10, 2024 04:00 PM
ADDED : டிச 09, 2024 06:43 AM

ஓவியம், கலை துறைகளில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய காலம் கடந்து, இன்றைக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் கலைத் துறையில் கோலோச்சுகின்றனர். இந்த வரிசையில், பெங்களூரை சேர்ந்த பிரியதர்ஷினியின் கதையே இந்த கட்டுரை.
பெங்களூரில் உள்ள ராஜாஜி நகரில், கேசவன் ஆச்சாரி -- மஹாலட்சுமி தம்பதிக்கு 8வது மகள் தான், பிரியதர்ஷினி நவீன், 38. இவர் 'மிடில் கிளாஸ்' குடும்பத்தை சேர்ந்தவர். சிறு வயதில் பார்ப்பதை எல்லாம் ரசித்து உள்ளார்; ரசிப்பதை எல்லாம் வரைய துவங்கி உள்ளார். சிறுவயதிலே இவருக்கு கலை ஆர்வம் வர முக்கிய காரணம், இவரது தாத்தா எம்.எம்.மாரியப்பா ஆச்சாரி, தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக இருந்துள்ளார்.
கல்லுாரி பருவம்
பள்ளி பருவத்தில் ஓவியத்தின் மீதான ஈர்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது. இவருக்கு சிறுவயதில் ஓவியம் வரைவதற்கு யாரும் கற்று தரவில்லை. தானாகவே ஓவியம் வரைந்து, அதில் உள்ள தவறுகளை திருத்திக் கொண்டு கற்றுள்ளார். ஓவியம் மீதான அவரது காதல், கல்லுாரி பருவத்திலும் தொடர்ந்தது. இந்த நாட்களில், அவர் வரைந்த ஓவியங்களை பலரும் பாராட்டினர்.
இதை உத்வேகமாக எடுத்துக்கொண்டு, உள்துறை கட்டடக் கலை சார்ந்த படிப்பில் டிப்ளமோ, கலைத்துறையில் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ பெற்றார்.
இதன்பின், 2006ல் திருமணம். 2009ல் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இதன் பின்னர் இரண்டு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை பராமரித்துக் கொண்டு, வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் வேலையை விட்டு 2018ல் வெளியேறினார். மீண்டும் ஓவியத்தில் கவனம் செலுத்தினார்.
வீட்டருகே உள்ள மற்ற குழந்தைகளுக்கு ஓவியம் வரைய கற்று கொடுத்து வந்தார். ஓவியங்களை விற்கவும் செய்தார்.
வீட்டில் இருந்த நேரத்தில் மிகவும் பயனுள்ள வகையில், வீட்டை அலங்கரிக்கும் வகையில் கைவினைப்பொருட்கள், சாக்லேட், ஜாம் போன்றவை செய்வதை கற்றார். இவர் தயாரித்த பொருட்களை, வீட்டின் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் விற்க துவங்கினார்.
தன்னுடைய வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக, 'முத்ரா லோன்' மூலமாக 12 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார். அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, வியாபாரத்தை துவங்க காத்திருந்தார்.
இந்த சமயத்தில் தான், கொரோனா, அவர் வாழ்க்கையில் பேரிடியாக விழுந்தது. ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், வியாபாரம் செய்ய முடியாத சூழல் உருவாகி, பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.
இருப்பினும், மீனை பிடிக்க காத்திருந்த கொக்கு போல சரியான நேரத்திற்கு காத்திருந்தார். ஊரங்கு முடிந்தவுடன், தனது, 'வார்னியாஸ் ஆர்டிஸ்ட்ரி' நிறுவனத்தை பிரமாண்டமாக துவக்கினார்.
ஆனந்தம்
இவரது நிறுவனத்தில், வீட்டில் இன்டீரியர் ஒர்க்ஸ், சுவற்றில் படம் வரைதல், வர்ணம் பூசுதல், கட்டுமான பணிகள் போன்ற சேவைகள் இருக்கின்றன. மேலும், சாக்லேட், ஜாம், கைவினை பொருட்கள், பரிசு பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் போன்றவையும் விற்கப்படுகின்றன.
இருப்பினும், அவரால் பெரிய அளவில் வியாபாரத்தில் ஜொலிக்க முடியவில்லை. விடாமுயற்சியோடு தொடர்ந்து கடின உழைப்புகளை மேற்கொண்டார். தற்போது வியாபாரம் நல்ல நிலையில் இருக்கிறது. அவரது நிறுவனத்தில் நான்கு பெண்கள் வேலை செய்கின்றனர். மாதம் 50,000 ரூபாய் லாபம் மட்டுமே சம்பாதிக்கிறேன் என சிரித்த முகத்துடன் கூறுகிறார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஓவியம் மீது எனக்கு காதல் அதிகம்; அந்த ஓவியத்தை வைத்து பணம் சம்பாதிப்பேன் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எனக்கு பிடித்த வேலையை, எனது தொழிலாக மாற்றி விட்டேன். சிறுவயதில் ஓவியம் வரைய கற்று கொண்ட நான், தற்போது சிறுவர்களுக்கு ஓவியம் வரைய கற்று கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்திய கலாசாரம் சார்ந்த ஓவியங்களை வரைவதற்கு மதுரையில் கற்றுக்கொண்டேன். அந்த ஓவியங்கள், 15,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்று உள்ளேன்.
முதுகெலும்பு
எனது கணவர் தான் எனது முதுகெலும்பே. அவர் இன்றி நானில்லை, எனது தொழிலில் பண ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் எனக்கு நிறைய உதவிகள் செய்கிறார். அவரது நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டு, எனக்கும் உதவிகள் செய்து வருகிறார்.
என் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிகள் செய்து வருகிறேன். பெரிய அளவிலான கடை ஒன்றை திறக்க வேண்டும் என்பதே ஆசையாக உள்ளது. விளையாட்டுக்கும், ஆசைக்கும் என வரைய ஆரம்பித்த ஓவியங்கள், எனது வாழ்க்கையையே மாற்றும் என நான் யோசித்தது கூட இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். -நமது நிருபர்-