UPDATED : செப் 14, 2026 02:52 PM
ADDED : செப் 14, 2026 04:41 AM

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விதம் விதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சூழல் பாதிப்பை தவிர்க்க, இந்த முறை களிமண் கொண்டு தயாரான சிலை அதிகம் தயாரிக்கப்படுகிறது.
அந்த வரிசையில், நச்சுத்தன்மையற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பொம்மைகளை, '3டி பிரிண்டிங்' தொழில்நுட்பத்தில் தயாரிப்பது அதிகரித்துள்ளது.
பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுபாஷிணி, 'பாலிலாக்டிக்' அமிலத்தை(பி.எல்.ஏ.,) மூலப்பொருளாக கொண்டு வக்கீல் விநாயகர், சாய்பாபா, அய்யப்பன், இயேசு, திருவள்ளுவர் உருவங்களை 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரித்து வருகிறார்.
அவர் கூறியதாவது:
'பாலிலாக்டிக்' அமிலம் என்பது கரும்பு, சோள மாவு போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மக்கும் தன்மை கொண்டது. இதனால் தயாரிக்கப்படும் பொம்மைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
இந்த தொழில்நுட்பத்தில், வண்ண பொம்மைகளை ஒரு அடி வரை உருவாக்க முடியும். இதற்கென தனி மெஷின் உள்ளது. இதில் விரும்பும் உருவத்தை 'பீட்' செய்தால் சில நிமிடங்களில் தயாராகிவிடும். விரும்பும் கலர் கொடுக்கலாம்.
இந்தாண்டு வக்கீல் விநாயகருக்கு வரவேற்பு உள்ளது. வீட்டிலேயே 3டி பிரிண்டர் வாயிலாக நெகிழ்வான விலங்குகள், கார்ட்டூன் கதாபாத்திரங்களையும் உருவாக்குகிறேன். குழந்தைகள் விரும்பும் பொம்மைகளையும், இந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
