/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
துப்பாக்கி பையை போலீசிடம் கொடுத்து 'ஜூட்' விட்ட இருவர்
/
துப்பாக்கி பையை போலீசிடம் கொடுத்து 'ஜூட்' விட்ட இருவர்
துப்பாக்கி பையை போலீசிடம் கொடுத்து 'ஜூட்' விட்ட இருவர்
துப்பாக்கி பையை போலீசிடம் கொடுத்து 'ஜூட்' விட்ட இருவர்
ADDED : மே 16, 2025 12:23 AM

கிருஷ்ணகிரி : போலீசார் வாகன சோதனையில் சிக்கிய இருவர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை, பையுடன் போலீசார் கையில் கொடுத்து விட்டு தப்பியோடினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளையும், வனவிலங்குகளை வேட்டையாடும் சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன. இதனால், மாவட்டம் முழுதும் கண்காணிப்பை பலப்படுத்தவும், வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீசார் வாகன சோதனையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த வகையில், போக்குவரத்து எஸ்.ஐ., ஜோதிபிரகாஷ் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே சென்னை சாலையில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காலை, 10:30 மணியளவில் அவ்வழியாக, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வந்த இருவர், போலீசாரை பார்த்தவுடன், நழுவி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மறித்து நிறுத்தி, விசாரித்தனர்.
இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவர்கள் வாகனத்தில் வைத்திருந்த பையில் என்ன இருக்கிறது என, போலீசார் கேட்டனர். உடனே பதற்றமான இருவரும், 'நீங்களே பாருங்க சார்' என, போலீசாரிடம் தாங்கள் கொண்டு வந்த பையை கொடுத்தனர். வேகமாக பைக்கில் இருந்தும் இறங்கினர்.
போலீசார் பையை திறந்து பார்ப்பதற்குள், தேசிய நெடுஞ்சாலையை கடந்து ஓட்டம் பிடித்தனர். வாகன போக்குவரத்து இருந்ததால், அவர்களை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.
அவர்கள் கொடுத்த பையில் ஒரு நாட்டு துப்பாக்கி, 50 துப்பாக்கி குண்டுகள், 100 கிராம் கருப்பு வெடி மருந்து பவுடர் ஆகியவை இருந்தன. எஸ்.ஐ., ஜோதிபிரகாஷ் புகார்படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், நாட்டு துப்பாக்கி, பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, 'சிசிடிவி' காட்சிகளை வைத்து விசாரித்தனர்.
பைக்கை விட்டுச் சென்றவர்களில் ஒருவர், பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளியைச் சேர்ந்த சேட்டு, 40, என தெரிந்தது. அவருடன் வந்த மற்றொரு நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். தப்பிய இருவரையும் தேடி வருகின்றனர்.