/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சுத்துார் திருவிழாவில் கிராமிய விளையாட்டுகள்
/
சுத்துார் திருவிழாவில் கிராமிய விளையாட்டுகள்
UPDATED : பிப் 04, 2025 09:13 PM
ADDED : ஜன 30, 2025 08:46 PM

மைசூரின், சுத்துார் திருவிழாவில், இந்திய கிராமிய விளையாட்டுகள் நடந்தன. இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கர்நாடகாவில் பல்வேறு கிராமிய விளையாட்டுகள் காணாமல் போய்விட்டன. இத்தகைய விளையாட்டுகளுக்கு, திருவிழாக்களில் புத்துயிர் அளிக்கப்படுவது, ஆறுதலான விஷயமாகும். கிராமங்களில் திருவிழாக்கள் நடக்கும்போது, கபடி, குண்டு கல்லை துாக்குவது, மல்யுத்தம் என, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடப்பதை காணலாம்.
மைசூரின் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றான சுத்துார் மடத்தில், திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம், கிராமிய விளையாட்டு போட்டிகள் நடந்தன. இளைஞர்கள் நான், நீ என போட்டி போட்டு பங்கேற்றனர்.
குண்டு எறிதல், அதிக எடையுள்ள குண்டு கல்லை துாக்குவது போன்ற விளையாட்டுகள் நடந்தன. இளைஞர்கள் பீமனை போன்று, பெரிய குண்டு கல்லை தோள் மீது துாக்கி வைத்து வீசி எறிந்து, சுற்றி இருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தனர்.
விவசாயிகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், பொருட்கள் நிரப்பப்பட்ட மூட்டைகளை துாக்கி கொண்டு, ஓடும் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. 30க்கும் மேற்பட்ட இளம் விவசாயிகள், மூட்டையை தோள் மீது சுமந்து கொண்டு ஓடினர்.
சேறு நிறைந்த வயலில் ஓடும் விளையாட்டு, ஏற்பாடு செய்யப்பட்டது. இளைஞர்கள் உற்சாகத்துடன் சேற்றில் ஓடினர். போட்டி முடிவில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- நமது நிருபர் -

