PUBLISHED ON : செப் 07, 2024 12:00 AM

நாட்டை அடிமையாக்க துடிக்கும் காங்கிரஸ்!
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:கிட்டத்தட்ட, 200 ஆண்டு காலம் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த பாரதம், நீண்ட போராட்டத்தில், லட்சக்கணக்கான உயிர்களை காவு கொடுத்தபின் விடுதலை அடைந்தது.
அதற்கு முதல் நாள், அகண்ட பாரதத்தில்இருந்து, குறிப்பிட்ட சில பகுதிகளை கிழக்கிலும், மேற்கிலும் பிரித்து, பாகிஸ்தான் என்ற நாட்டை பிரித்து கொடுத்தது.
அவ்வாறு பிரித்து கொடுத்த பின், இந்த பாரத நாட்டை, 'ஹிந்துஸ்தான்' என்று அறிவித்திருந்தால், கடந்த, 78 ஆண்டுகளில் நம் நாடு, எவ்வளவோ முன்னேற்றங்களை அடைந்து இருக்கும்.
லட்சக்கணக்கான ராணுவ வீரர்களின் உயிர்களை இழந்தும் இருக்காது. அவ்வாறு அறிவிக்காமல், மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்ததன் பயனை, இந்த நாட்டின்
ஒவ்வொரு மூலையிலும் வாழும் மக்கள் அனுதினமும், அனுபவித்து கொண்டிருக்கிறோம்.
அப்படியும் திருப்தி அடையாத காங்கிரஸ் கட்சியானது, இந்த நாட்டை, மீண்டும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்படுத்த அலைந்து கொண்டிருக்கிறது.
அதற்கு சாட்சியாக, காங்கிரஸ் கட்சியின் இளவரசனாக தன்னை அதிகாரப் பூர்வமாகஅறிவிக்காமல், ஆடிக் கொண்டிருக்கும்ராகுல், முன்னேற்பாடாக தனக்கு, பிரிட்டிஷ் குடியுரிமையை வேறு வாங்கி வைத்து கொண்டிருக்கிறார்.
உலகில் உள்ள எந்த நாட்டிலும், மற்றொரு நாட்டின் குடியுரிமையை வைத்து கொண்டிருக்கும் நபரை, பார்லி.,யிலோ, சட்டசபையிலோ
நுழையவே விட மாட்டார்கள்.நாமோ ராகுலுக்கு இந்திய குடியுரிமையும் வழங்கி, தேர்தலிலும் நிற்க அனுமதி கொடுத்து, தேர்ந்தெடுத்துக்
கொண்டிருக்கிறோம்.ஜம்மு - -காஷ்மீர் என்ற மாநில மக்கள்,
கடந்த மூன்றாண்டுகளாகத் தான்உண்மையான விடுதலை அடைந்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்க துவங்கி
இருக்கின்றனர்.பொறுக்குமா காங்கிரசுக்கு?மீண்டும் அந்த ஜம்மு -- காஷ்மீர் மக்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டு, அடிமைப்படுத்த தவித்து, துடித்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு ஆதரவாக, ஏற்கனவே அடிமைப்பட்டு கிடந்த ஜம்மு- - காஷ்மீரில் கோலோச்சி பதவி சுகம்
அனுபவித்து கொண்டிருந்த, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின், தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து,
காங்கிரஸ் கட்சி, 32 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பரூக் அப்துல்லாவின் கட்சிக்கு, 51 இடங்களை கொடுத்துள்ளது.
ஜம்மு - -காஷ்மீரில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் ராம்பான் மற்றும் அனந்தநாக் மாவட்டங்களில், நேற்று முன்தினம் பிரசாரத்தை துவக்கிய லோக்சபா
எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'பிரதமர் நரேந்திர மோடியை மனதளவில் உடைத்து விட்டோம். அதை, நான் பார்லிமென்டில் நேரில் பார்த்தேன். அவரது தலைமை
யிலான அரசை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றும் நாள் வெகு துாரத்தில் இல்லை' என்றும், 'ஜம்மு - -
காஷ்மீரில், துணை நிலை கவர்னர் என்ற பெயரில் மன்னர் ஒருவர் உள்ளார்.
மக்களின் நலன் குறித்து கவலைப்படாத அந்த மன்னர், ஜம்மு - -காஷ்மீரின்வளங்களை வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு வாரி வழங்குகிறார். இதையெல்லாம் நாங்கள்
தடுத்து நிறுத்துவோம்' என்றும் உளறி உள்ளார்.ஜம்மு - -காஷ்மீரின் துணை நிலை கவர்னராவது தன்னை மன்னராகத் தான் கருதிக் கொண்டிருக்கிறார். ஆனால், ராகுல் தன்னை மாமன்னனாக கருதிக் கொண்டல்லவா நடமாடிக் கொண்டிருக்கிறார்.
இப்போது கட்ட கடைசியாக, எந்த ஆங்கிலேயர்களிடம் இருந்து பாரதம் விடுதலை அடைந்ததோ, அந்த ஆங்கிலேயர்களிடமே அடிமைப்படுத்த
ஆவலாய் பறந்து திரிந்து உழன்று கொண்டிருப்பதை என்னவென்பது!
தவறு செய்யாதீர்கள் முருங்கை விவசாயிகளே!
ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டுமாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முருங்கைக் காய்,
முருங்கைக் கீரை என்று,முருங்கை மரத்தின் அனைத்துமே மனித ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக விளங்கு
பவை என்று அனைவருமே அறிவோம். மேலை நாடுகளில் முன்பு கிடைக்காமல் இருந்த முருங்கைக் காயும், கீரையும் தற்போது
தாராளமாகக்கிடைக்கின்றன.இந்த நிலையில், தமிழகத்தில் நல்ல விலைக்கு விற்றுக்கொண்டிருந்த முருங்கைக்காய், அதிக விளைச்சல்,வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற காரணங்களால், வெளி மாநிலங்
களுக்கும் அனுப்ப முடியாத சூழலில், விலை அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது!காய்களை உரிய முறையில் சேமித்து வைக்க போதிய
வசதிகள் இல்லாததாலும், உரியஅடிப்படை விலை நிர்ணயம் செய்யப்படாததாலும், மிகக் குறைந்த விலைக்கே காய்கள் வாங்கப்படுவதாலும் மனமொடிந்த விவசாயிகள், தங்கள் முருங்கைத்
தோட்டங்களை இயந்திரங்கள் கொண்டு அழித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
விளைச்சல் அதிகமாகி,விளைபொருட்களுக்கு மலிவான விலையே கிடைக்கும்போது, விளைவிப்போர் மதிப்புக்
கூட்டல் முறைகளைப் பின்பற்ற முயல வேண்டும்.முருங்கைக் காய்களை நன்கு முற்ற விட்டு, அவற்றின் விதைகளிலிருந்து முருங்கை எண்ணெய் தயாரிக்கலாம். அந்த எண்ணெய், பலவிதங்களிலும்
மனித வாழ்வுக்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளிலும் அந்த எண்ணெய்க்கு நல்ல, 'டிமாண்ட்' உண்டு.கஷ்டப்பட்டு பயிர்களையும், செடிகளையும், மரங்களையும் வளர்க்கும் விவசாயிகள், விளைபொருட்களை உரிய விலைக்கு விற்கும் நுட்பங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அவசரப்பட்டு மரங்களை அழிப்பதால்,ஒருவேளை சிறிதுநாட்களுக்குப் பின் நல்ல விலை ஏற்றம் காணப்பட்டால், அப்போது, 'அவசரப்பட்டு விட்டோமே' என்ற ஆதங்கம் மனதை அரிக்கும். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள் நல்லவையாக அமையாது. யோசித்துச் செயல்படுவதே புத்தி
சாலித்தனம்.முருங்கைக் காய் நல்ல விலைக்குப் போகவில்லையென்றால், அவற்றை முற்றிக் காய விட்டு எண்ணெயாக்கி, லாபம் பெறுங்கள்.
அதிகமாகப் பால் இருந்தால் தயிர், நெய் என்றோ, பால்கோவாவாகவோ மாற்றி விற்பனை செய்யுங்கள்.
நஷ்டமடையும் நிலையே வராது!மனமிருந்தால் மார்க்கமுண்டு! உழைப்பும், திறமையும் ஒரு நாளும் வீணாகாது.