PUBLISHED ON : டிச 22, 2025 03:11 AM

மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேட்டை கண்டித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு தலைமையில், மதுரையில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசுகையில், 'துணை முதல்வர் உதயநிதி, அ.தி.மு.க.,வை, 'இன்ஜின் இல்லாத கார்' என, கேலி செய்துள்ளார்.
'இப்போதைய, தி.மு.க., ஆட்சியில் புதிய பாலம் திறப்பு விழா ஒன்று சமீபத்தில் நடந்தது. அப்போது, அதிகாரிகள், 'பாலத்தில் முதலில் வரும் காருக்கு பரிசு உண்டு' என கூறினர். பாலத்தை திறந்தவுடன், அதை திறந்து வைத்த, தி.மு.க., பிரமுகரின் குடும்பத்தினர் கார் தான் முதலில் வந்தது. விலை உயர்ந்த அந்த காருக்கான, 'ஆர்.சி., புக்' மற்றும், 'லைசென்சை' அதிகாரிகள் கேட்டனர்; அவை, அவர்களிடம் இல்லை. விசாரித்த போது, அது திருடப்பட்ட கார் என தெரிந்ததாம். அ.தி.மு.க., இன்ஜின் இல்லாத கார் என்றால், தி.மு.க., களவாணி கார்...' என்றார்.
இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'கார் கதையை வச்சே, உதயநிதிக்கு தக்க பதிலடி தந்துட்டாரே...' என கூற, அருகில் இருந்தவர்கள் கைதட்டி ரசித்தனர்.

