/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தி.மு.க., - எம்.பி.,க்கள் மானத்தை 'பறக்கவிட்ட' துரை!
/
தி.மு.க., - எம்.பி.,க்கள் மானத்தை 'பறக்கவிட்ட' துரை!
தி.மு.க., - எம்.பி.,க்கள் மானத்தை 'பறக்கவிட்ட' துரை!
தி.மு.க., - எம்.பி.,க்கள் மானத்தை 'பறக்கவிட்ட' துரை!
PUBLISHED ON : ஏப் 08, 2024 12:00 AM

அ.ரவீந்திரன்,
குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தி.மு.க.,வின் மூத்த தலைவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரை
முருகன்,சென்னை, தி.நகரில் பிரசாரம் செய்தபோது, 'பாடத் தெரிந்தவன்
கச்சேரிக்கு போக வேண்டும்; ஆடத் தெரிந்தவன் மேடை ஏற வேண்டும்; பேச
தெரிந்தவன் பார்லி., செல்ல வேண்டும்.
'அங்கு பேச, ஆங்கிலம், ஹிந்தி
தெரிய வேண்டும். இரண்டும் தெரியவில்லை என்றால், வெற்றி பெற்று அங்கே
போயிட்டு, 'இந்த கட்டடத்தை எப்படி கட்டினாங்க...' என, மேலே பார்த்துவிட்டு,
'போலாமா காபி குடிக்க...' என சபையை விட்டு வெளி வர வேண்டியது தான்' என,
எதை மனதில் வைத்து பேசினார் என தெரியவில்லை... அவர் பேச்சு நியாயமானதே!
நம் தமிழக எம்.பி.,க்களுக்கு, தமிழே தத்து பித்து; இதில் ஆங்கிலம், ஹிந்தியா!
இன்று தமிழகத்துக்கு வரும் அரசியல்வாதிகள், தமிழை துாக்கிப் பிடித்துப் பேசி வருவது, தி.மு.க.,வை கதிகலங்க வைக்கிறது.
கருணாநிதி
காலம் முதலே, டில்லியில் அரசியல் பண்ணும் தி.மு.க., தமிழகத்தில் ஹிந்தி
நுழையக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்யும் கட்சியின் மூத்த
தலைவரின் பேச்சு, நகைப்புக்குரியதே.
'ஏதுடா இது... நாம இப்படி
பேசுறோமே... பார்லி.,க்கான தேர்தலாச்சே இது... ஹிந்தி தெரிஞ்சா தானே அங்கே
பேச முடியும்... நம்ம கட்சி அதற்கு எதிர்ப்பாச்சே...' என, எந்த
சுரணைப்படும்படியான யோசனையும் அவரிடம் தென்படவில்லை.
'ஹிந்தி
தெரியாம அங்கே போயி, அண்ணாந்து பார்த்துட்டு, டீ காபி குடிச்சிட்டு
வர்றோம்' என்பது போல் பேசி விட்டார். வாழ்க தி.மு.க., - எம்.பி.,க்களின்
மானம்!
உள்ளதும் போகுமோ நொள்ளக் கண்ணா?
டி.ஆர். ஷியாம்சுந்தர், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல், ஈரோட்டில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் துவங்கியபோது, வழக்கமாக திராவிட மேடை கச்சேரிகளில் பாடும் பழைய பல்லவிகளான ஹிந்தி திணிப்பு, சமூக நீதி இட ஒதுக்கீடு ஆகியவை பற்றியே பாடி உள்ளார்.
ஹிந்தி திணிப்பு பற்றி பேசும் இவர், ஹிந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தவுடன், 'கமலஹாசன்' என்ற தன் பெயரையே, 'கமல்' என்று மாற்றிக் கொண்டு, பின் தமிழ்ப் படங்களிலும், கமல் என்று ஆகிவிட்டார்.
இட ஒதுக்கீட்டு திட்டத்துக்கு எதிராக, பா.ஜ., இருப்பதாக, கமல் கூறி உள்ளார்.
கடந்த, 27.06.1961 அன்று, அன்றைய பிரதமர் நேரு, மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்வதைக் கடுமையாக எதிர்த்தார். அதிலும், அரசு பணிகளில்- இட ஒதுக்கீட்டை, கடுமையாக எதிர்த்தார்.
இந்த விஷயத்தை, காங்., கட்சியின் முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ், தன், 'நேரு: கேசிங் அட் டுமாரோ' என்ற புத்தகத்தில், தெளிவாக எழுதி உள்ளார்.
காங்கிரசுடன் கூட்டணி உள்ள தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் கமலுக்கு, இந்த விவகாரம் தெரியுமா?
சமூக நீதி பற்றி பேசும் கமலுக்கு, பா.ஜ., மாநில தலைவர் முதல் அகில இந்திய தலைவர் வரை பலர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர் என்பது தெரியுமா? திராவிட இயக்கங்களில் இதுவரை, தலைமை பொறுப்புக்கு, ஒரு தலித் கூட வரவில்லை என்பது, கமலுக்கு தெரியாதா?
'வெளி மாநிலங்களில் இருந்து பலர், தமிழகத்துக்கு வேலைக்கு வருகின்றனர். அங்கே வேலை இல்லை' என்று பேசி உள்ளார்.
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு பலர் வேலைக்கு செல்வது, உலக நாயகனுக்கு தெரியாதா? எந்த மாநிலத்தவரும் எந்த மாநிலத்திலும் வேலை பார்க்க தடை இல்லை என்பது, இந்த இந்தியனுக்கு தெரியாதா?
'மாணவர்கள் எழுத முடியாத தேர்வுகளை எல்லாம் திணிக்கின்றனர்' என்று, 'நீட்' தேர்வு பற்றி பேசி உள்ளார்.
பல விளிம்பு நிலை மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற்ற விஷயம் இவருக்கு தெரியாதா?
கட்சி துவக்கியபோது, சத்யா பட கமல் போல பொங்கி, தற்போது, 'சப்பாணி' கமல் போல பிரசாரம் செய்யும் இவரால், உள்ள ஓட்டும் போய் விடும் போல இருக்கிறதே!
சீமான் செய்வது சரியல்ல!
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாம் தமிழர்' கட்சி சீமானின் மேடைப் பேச்சுகளையும், பேட்டிகளையும் மிகவும் ரசிப்பேன். தடை செய்யப்பட்ட, விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தவிர, அவர் கூறும் பெறும்பாலான விஷயங்கள் நமக்கும் ஏற்புடையதே.
அவருடைய எளிமை, ஆவேசமான பேச்சு, காமராஜர் உட்பட சில நல்ல தலைவர்களை மட்டும் புகழ்வது, ஆட்சியாளர்களின் தவறுகளை துணிச்சலுடன் சுட்டிக்காட்டுவார்; சந்தோஷப்படுவேன்.
ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு வக்காலத்து வாங்கும், அவரது சமீபத்திய பேச்சை கேட்ட பின், அந்த எண்ணம் அடியோடு மறைந்து போனது. சீமானும், சராசரி அரசியல்வியாதி தான் என்ற எண்ணம் வந்து விட்டது. சீமானின் இமேஜ், 'டேமேஜ்' ஆகிவிட்டது.
ஜெயலலிதா, அரசியலுக்கு வந்தபோதே கோடீஸ்வரி. மேலும், அவர் தனிநபர் என்பதால் ஆட்சியில் ஊழல் செய்து மக்கள் பணத்தை கோடிகோடியாக கொள்ளையடிக்க வேண்டிய தேவையும் அவருக்கு இருந்ததில்லை.
தனியாகவே இருந்திருந்தால், நல்லாட்சி நடத்தி மக்களிடம் நல்ல பெயர் வாங்கியிருக்க முடியும். ஆனால், விதி யாரை விட்டது... கூடா நட்பு கேடாய் முடிந்தது.
ஆரம்பத்தில், சாதாரண வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலா, ஜெயலலிதாவின் அறிமுகத்திற்கு பின், பெரிய கோடீஸ்வரி ஆன வரலாறு, சீமானுக்கு மறந்து விட்டதா?
பா.ஜ., கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, சசிகலாவுக்கு ஆதரவாக சீமான் பேசுவது முறைதானா? கோடிகளை குவித்த சசிகலாவை முதல்வராக்கி இருந்தால், தமிழனுக்கு அதை விட தலைகுனிவு வேறில்லை.
எனவே, அந்த முயற்சியை தடுத்த நீதிமன்றம், கவர்னர், பா.ஜ., - தி.மு.க., என யாராக இருந்தாலும் அவர்களையும், சசிகலாவை அரசியலில் இருந்தே ஓரம் கட்டிய பழனிசாமியையும், பாராட்ட வேண்டியது தமிழர்களின் கடமை.
சீமான் செய்வது சரியில்லை.

