/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வாடகை கார்களில் சென்று வசூல் செய்யும் அதிகாரிகள்!
/
வாடகை கார்களில் சென்று வசூல் செய்யும் அதிகாரிகள்!
வாடகை கார்களில் சென்று வசூல் செய்யும் அதிகாரிகள்!
வாடகை கார்களில் சென்று வசூல் செய்யும் அதிகாரிகள்!
PUBLISHED ON : ஜன 03, 2026 01:27 AM

''காசு இல்லாம காரியம் நடக்காது வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''பெரம்பலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆபீஸ்ல, ஒரு அதிகாரி இருக்காரு... இவர்கிட்ட, பணம் இல்லாம எந்த வேலையும் நடக்காது வே...
''கைநீட்டி பணத்தை வாங்கிட்டார்னா, 'பைல்'ல உடனே கையெழுத்து போட்டு குடுத்துடுவாரு... இல்லாட்டி, பைலையே காணாம ஆக்கிடுவாரு வே...
''சாலைகள் போடுறது, பாலம் கட்டுறது உள்ளிட்ட வேலைகளை செய்த கான்ட்ராக்டர்களுக்கு, முழு பில் தொகையும் குடுக்காம, 2 சதவீதம் வரை பிடிச்சி வைப்பாரு...
''திட்ட பணிகளுக்கு, முதல்லயே கான்ட்ராக்டர்கள் தரப்பு கமிஷன் குடுத்துட்டாலும், பிடிச்ச தொகையை விடுவிக்கவும், அதிகாரி தனியா, 'கட்டிங்' கேட்காரு... அப்படி குடுத்தால் தான் தொகையை விடுவிக்காரு... இவரை பத்தி, உயர் அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட புகார்கள் போயும், நடவடிக்கை இல்ல வே...'' என்றார், அண்ணாச்சி.
''ராஜா, தள்ளி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''கேக் வழங்கி, பிரசாரத்தை துவக்கிட்டாருங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டசபை தொகுதி, எப்பவுமே அ.தி.மு.க.,வுக்கு சாதகமானது... இங்க, எட்டு முறை அ.தி.மு.க., ஜெயிச்சிருக்குதுங்க...
''இப்ப, தி.மு.க., கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமது, எம்.எல்.ஏ.,வா இருக்காரு... இங்க போட்டியிட, அ.தி.மு.க.,வுல முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சின்னசாமி, சந்திரசேகர், மாவட்ட செயலர் குமார் ஆகியோர் ஆர்வமா இருந்தாங்க...
''ஆனா, முன்னாள் ஒன்றிய செயலர் பழனிவேலின் மகன் டாக்டர் விஜயகுமாருக்கு, எட்டு மாசத்துக்கு முன்னாடி, அ.தி.மு.க., மருத்துவ அணியில், மாநில நிர்வாகி பதவி குடுத்தாங்க... இப்ப, போட்டியில் குமாரும், விஜயகுமாரும் இருக்காங்க...
''இதுல, விஜயகுமார், 30,000 காலண்டர்களை அச்சிட்டு, தொகுதி முழுக்க குடுத்திருக்காரு... கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி தொகுதியில் இருக்கிற கிறிஸ்துவர்கள், 20,000 பேருக்கு கேக் வழங்கி, பிரசாரத்தை துவக்கிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வாடகை கார்கள்ல போய் வசூல் பண்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூணு பேர், ஆய்வுங்கற பெயர்ல, தனியார் பள்ளிகளுக்கு அடிக்கடி போய் வசூல் வேட்டை நடத்தறா... குறிப்பா, அவிநாசி, உடுமலை, பெருமாநல்லுார் உள்ளிட்ட பகுதிகள்ல இருக்கற தனியார் பள்ளிகளுக்கு போய், மூணுல இருந்து, 4 லட்சம் ரூபாய் வரைக்கும் வசூல் பண்ணியிருக்கா ஓய்...
''அரசு வாகனங்கள்ல போனா தெரிஞ்சிடும்னு, வாடகைக்கு கார்களை எடுத்துண்டு போய் வசூல் வேட்டை நடத்தறா... இப்படி வசூலிக்கற பணத்தை, நாலா பிரிக்கறா ஓய்...
''அந்த நாலாவது பங்கு, யாருக்கு போறதுன்னு தெரியல... இவாளது வசூல் வேட்டையால, தனியார் பள்ளி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
எதிரில் வந்த நண்பரை நிறுத்திய அன்வர்பாய், ''வாங்க மணி மாறன்... உங்க பிரண்ட்ஸ் பார்த்தசாரதி, சத்தியமூர்த்தியை எங்கப்பா காணோம்...'' என பேச, மற்றவர்கள் நடையை கட்டினர்.

