/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
'கப்சா' அடித்தால் ஓட்டு அம்பேல் தான்!
/
'கப்சா' அடித்தால் ஓட்டு அம்பேல் தான்!
PUBLISHED ON : செப் 04, 2024 12:00 AM

எல்.மகேஷ், சென்னையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு கிராமத்தில் உள்ள வயல்களில்,
அந்த கிராமத்திலுள்ள உழவர்கள் உழுவது, நாற்று நடுவது, விதை விதைப்பது, களை
பிடுங்குவது, நீர் பாய்ச்சுவது போன்ற இன்னபிற கழனிப் பணிகளை செய்து
கொண்டிருந்தனர். வயல் வெளிக்கு அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது
உட்கார்ந்து கொண்டிருந்த, அந்த கிராமத்தைச் சேர்ந்த வேலை வெட்டியில்லாத
சிறுவன் ஒருவன், திடீரென்று, 'புலி வருது, புலி வருது' என்று
கூச்சலிட்டான்.
வயல் வெளியில் கழனிப் பணிகளை செய்து
கொண்டிருந்தவர்கள் அனைவரும்,செய்து கொண்டிருந்த பணிகளை அப்படியே போட்டு
விட்டு, உயிர் தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்து கொண்டனர்.
ஆனால்,
புலி எதுவும் வந்ததாக தெரியவில்லை. மரத்தின் மீது அமர்ந்து கொண்டிருந்த
சிறுவன் மட்டும், 'அஹ்ஹஹ்ஹா... அஹ்ஹஹ்ஹா...' என்று சிரித்து
கொண்டிருந்தான். சில பெரியவர்கள் மட்டும் மரத்தின் அருகில் சென்று, 'ஏண்டா
சிரிக்கிறாய்?' என வினவினர். அதற்கு அந்த சிறுவன், 'ஏமாந்தீங்களா! நல்லா
ஏமாந்தீங்களா! புலியும் வரலை; ஒரு புண்ணாக்கும் வரலை. ஒங்களை எல்லாம்
ஏமாத்துறதுக்காக நான் தான் அப்படி பொய் சொல்லி கூச்சலிட்டேன்' என்றான்.
அவர்கள்
மறைவிடத்திலிருந்து வெளியே வந்து, அந்த சிறுவனை திட்டியபடியே, தத்தம்
பணிகளை தொடரத் துவங்கினர். இது போன்று இரண்டு மூன்று தடவை, அவர்களை
ஏமாற்றி, அந்த சிறுவன் மகிழ்ந்து கொண்டிருந்தான்.
உண்மையிலேயே ஒரு
தடவை புலி வந்த போது, இவனது கூச்சலை ஒருவரும் பொருட்படுத்தாமல், அவரவர்
வேலையை தொடர்ந்து கொண்டிருந்தனர். இந்த சிறுவன்மட்டும் உயிர் பயத்தில்,
மரத்திலிருந்து இறங்கி, ஓடத் துவங்கினான். பசியோடு வந்த புலி, ஓடிக்
கொண்டிருந்த சிறுவனை துரத்தி சென்று, அடித்து கொன்று முழுங்கி ஏப்பம்
விட்டது.
சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை பல காலம் ஏமாற்றலாம்.
ஆனால், எல்லாரையும் எப்போதுமே ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்று ஒரு
பொன்மொழி உண்டு. இப்படியே, ஆட்சி காலம் முழுதும், முதலீடு வருகிறது,
முதலீடு வருகிறது என்று, 'கப்சா' விட்டு கயிறு திரித்து கொண்டிருந்தால்,
உண்மையிலேயே வெளி நாடுகளில் இருந்து முதலீடுகள் வந்தால் கூட, ஒருவரும் நம்ப
மாட்டார்கள். ஓட்டெல்லாம் அம்பேல் தான்!
துாங்குகிறதா தீயணைப்புத்துறை?
ஆர்.உதய் பாஸ்கர், சென்னையில் இருந்து எழுதுகிறார்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மக்களுக்கு பிராமணாள் கபே, உடுப்பி ஹோட்டல், முருகன் கபே, அய்யங்கார் காபி என,அகண்ட சாலைகளின் இருமருங்கிலும் பாதுகாப்பான ஹோட்டல்கள் இருந்தன.
ஹோட்டலுக்குள் சென்று, சூடான இட்லி, காபி சாப்பிட்டு வர உள்ளம் புத்துணர்ச்சிகளில் ததும்பும்.
இன்று வீதிகள் தோறும் விதவிதமான பெயரில் பெரிய பெரிய பிரியாணி கடைகள், அக்கடைகளுக்கு போட்டியாக நகர் முழுதும் மலிவு விலை அசைவ கடைகள் உருவெடுத்துள்ளன.
இத்தகைய கடைகள் நடைமேடைகள் முழுதையும் ஆக்கிரமித்து, அடுப்புகளை வைத்துள்ளன. அவற்றை கடந்து உள்ளே சாப்பிட செல்வதற்கு, கோவில் தரிசன வரிசை போன்ற அளவில் தான் வழி அமைத்திருப்பர்.
திடீரென தீ விபத்து ஏற்பட்டால், கடைக்கு வந்தவர்கள் எல்லாம், 'சுட்ட கோழி' போல், பொசுங்க வேண்டியதுதான். பல நடைமேடைகள் இவ்வாறு தான் உள்ளன. ஆபத்தான சூழ்நிலையில் அசைவ பிரியர்களும் இதை பெரிதாக கண்டுக்கொள்வதில்லை. ஒரு அசம்பாவிதம் நடந்தால் தான், நடவடிக்கைக்கு அரசு முன்வருகிறது; முன் கூட்டியே தடுப்பதற்கு வருவதில்லை.
இதேபோல், துரித உணவுக்கடைகளில் பல, வாகனங்கள் ரெடிமேடாக சாலையோரத்தில் திறந்தவெளி அடுப்புகளை வைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் செயல்படுகின்றன. தீயணைப்புத்துறை துாங்குகிறதா என்ற சந்தேகம் எழுகிறது!
நுாறு கலாம் வேண்டும் இவர்களை திருத்த!
கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் இளைஞர்களின் கனவு கதாநாயகன் அப்துல் கலாம் பிறந்த தமிழகத்தில் இன்று, நம் இளைய சமுதாயத்தினர், போதைக்கும், மதுவுக்கும் அடிமையாகி விட்டது, வருத்தத்தை அளிக்கிறது.
தமிழக முதல்வர் சமீபத்தில், சென்னையில் கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் இடையே பேசியபோது, போதைக்கு எதிரான உறுதிமொழியை அனைவரையும் எடுக்க வைத்தார்.
ஆனால், போதை ஒழியவில்லை என்பது, கல்லுாரி மாணவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் நடந்த ரெய்டில் வெட்டவெளிச்சமாகி விட்டது.
இன்று, ஆண் - பெண் பேதமின்றி, பள்ளி மாணவர்களே மது அருந்தவும், கஞ்சா பயன்படுத்தவும் துவங்கி விட்டனர். இவர்களே கல்லுாரிகளுக்கு செல்லும் போது, விலை உயர்ந்த போதைப்பொருள்களை உட்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். தமிழகம் முழுதும் இதே நிலை தான்.
நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்களை வழிநடத்த, சிறந்த தலைவர்கள் இல்லை என்பதையே இது காட்டுகிறது. கலாம் உயிருடன் இருந்திருந்தால், இத்தகைய போக்கைக் குறைக்க அரும்பாடு பட்டு, வெற்றியும் கண்டிருப்பார்.
அந்த கதாநாயகன் கனவை நிறைவேற்ற, நம் இளைய சமுதாயத்தினரிடம் இன்று பரவியுள்ள போதைப் பழக்கத்தை துரத்தியடிக்க, நமக்கு உடனடியாக தேவை பல நுாறு அப்துல் கலாம்கள்.
அமைச்சரின் தலையாய கடமை!
ஜி.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்நடைபெற்ற, ராஜேந்திரசோழனின் பிறந்த நாள் விழாவில் தமிழக அமைச்சர் சிவசங்கர் பேசும்போது, 'ராமர் இருந்ததற்கான, ஆதாரமும் சரித்திரமும் இல்லை; ஒரு அவதாரம் பிறக்க முடியாது. ஆகையால், ராமர் அவதாரமே அல்ல' என, திருவாய் மலர்ந்து ஹிந்துக்களை புண்படுத்தியுள்ளார்.
அப்படியானால், உண்மையான 'அக்மார்க்' அவதாரங்கள் யார் யார் எனும் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் தலையாய கடமை, அமைச்சர் சிவசங்கருக்கு உள்ளது.
ஹிந்து கடவுளை புண்படுத்தும் புனித செயலை, சிரமேற்கொண்டு செவ்வனே செய்யும் அமைச்சர்பெருமான் சிவசங்கர்,மதச்சார்பின்மை மகானின் அவதாரமா?
லஞ்ச லாவண்யம், வரி ஏய்ப்பு, கனிமவள கொள்ளை, மக்கள் வரிப்பண சுரண்டல்களில் ஈடுபடும் அமைச்சர், அரிச்சந்திரனின் அவதாரமா?
தமிழகத்தில், போதை மருந்து, மதுக்கலாசாரத்தை பேணிப் பாதுகாக்கும் அமைச்சர்களில் ஒருவரான சிவசங்கர், வள்ளலாரின் அவதாரமா?
தன் விரலால் தன் கண்ணையே குத்திக் கொண்டது போல, சிவபெருமான் பெயர் கொண்ட அமைச்சர் சிவசங்கர் ஹிந்து கடவுளை அவமதித்ததால், இனி அவரை, கண் கொத்தி பாம்பின் அவதார வழி தோன்றல் என அழைக்கலாமா?
இதற்கெல்லாம் பதில் கூறிவிட்டு, ஹிந்துக்களை புண்படுத்தும் செயலை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் துவங்கட்டும்!