PUBLISHED ON : செப் 01, 2024 12:00 AM

ஆர்.பாலமுருகன், மதுரையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு
துாக்குதண்டனை' என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் தைரியமான, துணிச்சல்
மிக்க நடவடிக்கை எல்லாரையும், முக்கியமாக பெண்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இதை
தாமதமாக செய்திருந்தாலும்,மிகச் சரியான ஒரு வேலையை செய்திருக்கிறார்
மம்தா. அவரோடு நிறைய விஷயங்கள் கருத்து முரண்பாட்டில் இருந்தாலும், அனைத்து
கட்சியினரும் இந்த விஷயத்தில் அவருக்கு முழு ஆதரவை தெரிவிக்கவே
விரும்புகின்றனர்.
இன்று பெண்கள் பாதுகாப்பு என்பது மாநிலத்திற்கு
மாநிலம் மிகவும் மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. வெளியே தெரியும்
குற்றங்கள் வெகு சில தான். மறைக்கப்படும் குற்றங்கள் எண்ணிக்கையில்
அடங்காமல் இருக்கும். இதற்கெல்லாம் காரணம் முதலில் மது; இரண்டாவது அதே
குடிகாரர்கள், கஞ்சா பழக்கத்திற்கு அடிமை ஆவது.
இந்த கஞ்சா
எங்கெங்கு விற்கிறது, யார் விற்கின்றனர் என்பது காவல்துறைக்கு நன்றாகவே
தெரியும். இருந்தாலும் தங்கள் சுய லாபத்திற்காக, அவர்களை எதுவும் செய்யாமல்
விட்டு விடுவது மிகவும் வேதனைக்குரிய விஷயம். அரசு அதிகாரிகள்
குடும்பங்களில் யாராவது ஒருவர் இதுபோன்று பாதிக்கப்பட்டால் அவர்கள் சும்மா
விடுவரா?
சாமானியன் எதுவும் கேட்க முடியாது என்ற அலட்சியத்தால்
தானே, குற்றவாளிகள் எதை செய்தாலும் இந்த அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
ஒருமுறை கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால், அதே தவறை மறுபடியும் வேறு
யாராவது செய்வதற்கு யோசிப்பரே!
இதை ஏன் மனித உரிமை ஆர்வலர்களும்,
அரசும் சிந்திக்க மறுக்கிறது. 'குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு
கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்' என்ற சட்டம் வந்தால் ஒழிய, மேற்கு
வங்கத்தில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் குற்றங்கள் குறையவே குறையாது.
'திருடராய்
பார்த்து திருந்தாவிட்டால்,திருட்டை ஒழிக்க முடியாது' என்பதுபோல, இந்த
சூழ்நிலை இன்று கிடையாது; திருடர்களையும், அயோக்கியர்களையும்,
குடிகாரர்களையும் நாம் தான் மாற்ற வேண்டும். அதற்கு நீதிமன்றங்கள் தான் வழி
வகுக்க வேண்டும்; அதற்கு அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.
பெண்
சமூகத்தை காப்பாற்ற கடுமையான சட்டங்கள் தேவை. அதற்கு மம்தா முதலில் விதை
போட்டு இருக்கிறார். இதை அனைத்து மாநில முதல்வர்களும், குறிப்பாக நம் தமிழக
முதல்வரும் உடனடியாக சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்து தமிழக மக்களையும்,
பெண்களையும் காப்பாற்ற வேண்டும்.
கஞ்சா பெருச்சாளிகள் சிக்குமா?
குரு பங்கஜி, சென்னையில்இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: சென்னை, கோயம்பேடு மற்றும் மாட்டான் குப்பம்பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 52 கிலோ கஞ்சா மூட்டைகளில், 30 கிலோ மூட்டைகளைபோலீஸ் ஸ்டேஷனில்,எலிகள் கடித்துத்தின்று விட்டதாக, போலீசார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், கைதான கஞ்சா குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்துள்ளது.அதே நேரம், கைதானவர்கள் தப்பி செல்ல ஏதுவாக, எலிகள் மீது போலீசார் பழி போடுவதாக சந்தேகம் உள்ளது என, 'தினமலர்' நாளிதழில்செய்தி வெளியாகிஉள்ளது.
ஒருவேளை, இப்படியும்நடந்திருக்கலாம். போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்ட கஞ்சா மூட்டைகளை, போலீசார் குற்றம் சாட்டிய எலிகள், கூடு விட்டு கூடு பாய்ந்து, சீருடை அணிந்த பெருச்சாளிகளாய் உருமாறி, கஞ்சா மூட்டைகளை, 'ஆட்டை' போட்டு விட்டதோ என்ற பெருத்த சந்தேகம், நமக்குள்எழுகிறது.
எது எப்படியோ, ஒன்று மட்டும் உறுதி... போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து, கஞ்சா மூட்டைகளை தின்று தீர்த்த களவாணி பெருச்சாளிகளை எலி வலை வைத்து பிடிக்க, உலகில் உள்ள சி.ஐ.ஏ., ஸ்காட்லாண்ட் யார்டு, மொசாட், சி.பி.ஐ., போன்ற எவ்வளவு பெரிய போலீசாராலும் முடியாது.
இனி ஒரு சி.ஐ.டி., சிகாமணி பிறந்து வந்தால் மட்டுமே, கஞ்சா மூட்டைகளை கபளீகரம் செய்து ஏப்பம் விட்ட பெருச்சாளிகளை, பொறியில் சிக்க வைக்க முடியும். இது, அதிகார அரிச்சந்திரர்கள் மீது ஆணை.
வயதானோரை கேலி பேச வேண்டாமே!
வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்கொளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சொல்லாத வார்த்தைக்கு விலை ஏதுமில்லை' என்பது முதுமொழி.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, 'ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடுவர். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமில்லை.
இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு செல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளனர். அமைச்சர் துரைமுருகன், கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர்'என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, 'வயதானவர்கள் எல்லாம் நடிப்பதால் தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது' என்றார்.அவரது இந்த கருத்து பேசுபொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம் அமைச்சர் துரைமுருகன் பேசியது குறித்து செய்தியாளர்கள்கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ரஜினி, 'துரைமுருகன் என் நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும்,எனக்கு வருத்தம் இல்லை. எங்கள் நட்பு எப்போதுமே தொடரும்' என்றார்.
இதனிடையே வேலுார் வி.ஐ.டி.,யில் நடைபெற்ற கருணாநிதி நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன்,செய்தியாளர்களிடம் கூறும்போது, 'என் நகைச்சுவையை, பகைச்சுவையாக யாரும் மாற்ற வேண்டாம். ரஜினிகாந்த் சொன்னதை தான் நானும் சொல்கிறேன். எங்களுடைய நட்பு தொடரும்' என தெரிவித்தார்.
வாழ்க்கை, அரசியல், நடிப்புத் துறை எதுவாக இருந்தாலும் முதியோர் வழிகாட்டுதல் மிகமிக அவசியம். ஆக, அனைத்து வயதானவர்களையும் கேலி பேசாமல் மதிப்போம்; மரியாதை கொடுப்போம்!