தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/  அ.தி.மு.க.,விடம் 15; தி.மு.க.,விடம் 15 சீட் வாங்கலாமே!

 அ.தி.மு.க.,விடம் 15; தி.மு.க.,விடம் 15 சீட் வாங்கலாமே!

 அ.தி.மு.க.,விடம் 15; தி.மு.க.,விடம் 15 சீட் வாங்கலாமே!


PUBLISHED ON : பிப் 01, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2026 03:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்.முருகராஜ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதோ இல்லையோ, தே.மு.தி.க.,வின், 'பேரம் பேசும் களம்' களைகட்டத் துவங்கி விட்டது.

'தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள்; அவற்றுக்கு மாற்றாகத்தான் நாங்கள் வந்துள்ளோம்' என்று, நடிகர் விஜயகாந்த் அன்று சொன்ன வார்த்தைகள் எல்லாம், 'பழைய பேப்பர் கடை'க்குப் போய்விட்டன.

இப்போது, கொள்கை என்பது வெறும் பேச்சு; 'சீட்'என்பது தான் மூச்சு!

மாநாடு போட்டு கூட்டத்தைக் காட்டுவதெல்லாம் கொள்கைக்காக அல்ல; 'எங்களுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கு; அதனால இத்தனை சீட் கொடுங்க' என்று பேரம் பேசத்தான் என்பதை, பாமர மக்கள் கூட அறிவர்!

விஜயகாந்த் லட்சியத்திற்காகப் போட்ட பாதையை, இன்று, 'சீட்'களுக்காகப் போடப்படும், 'டீல்' ஆக மாற்றிவிட்டார், அவரது மனைவி பிரேமலதா.

'லஞ்ச ஒழிப்பு' குறித்து பேசிவிட்டு, அதே லஞ்சப் புகாரில் இருக்கும் கட்சிகளிடம் கையேந்தி நிற்பதுதான் இன்றைய தே.மு.தி.க.,வின், 'புரட்சிகர'அரசியல்!

எவர் பக்கம் சென்றாலும், அதற்கு ஒரு, 'பில்டப்'கொடுக்கத் தயாராக இருக்கிறார், பிரேமலதா.

அ.தி.மு.க.,வுடன் இணைந்தால், 'அம்மா ஆட்சி அமையப் போகிறது' என்பர்; தி.மு.க., பக்கம் போனால், 'மதச்சார்பற்ற கூட்டணி' என்பர் அக்கட்சியினர்.

இப்போதைக்கு யாருக்குமே, 'டாடா' காட்டாமல், இரண்டு பக்கமும், 'லைன்' போட்டு வைத்திருப்பதுதான் பிரேம லதாவின் தந்திரம்!

கடந்த முறை தேர்தல் நேரத்தில் ஒரு குழு அறிவாலயக் கதவைத் தட்ட, மற்றொரு குழு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டு வாசலில் தவம் கிடந்தது.

'எந்தக் கடையில் லாபம் அதிகம்?' என்று, ஒரே நேரத்தில் இரு கட்சியிடமும் பேரம் பேசிய, உலகப் புகழ்பெற்ற காமெடி, இன்றும் சமூக வலைதளங்களில், 'மீம்ஸ்'களாக உலா வருகின்றன.

எதற்கு இந்த குழப்பம்?

பேசாமல், தி.மு.க.,விடம், 15 சீட், அ.தி.மு.க.,விடம் 15 சீட் என மொத்தமாக, 30 சீட்டை இரு கட்சிகளிடம் கேட்டு வாங்கிக் கொண்டால், தே.மு.தி.க., யாருக்கு வேண்டும் என்றாலும் ஆதரவு கொடுக்கலாம் அல்லவா!

ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக கட்சி ஆரம்பித்து, இன்று, அதே ஊழல் கட்சிகளிடம், சீட்டுக்காக கையேந்தி நிற்பதற்கு பெயர் தான், 'புரட்சிகர' அரசியல்!

காந்தி விருப்பம் இப்போதாவது நிறைவேறட்டும்!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவின் முதல் உள்நாட்டு, 'மைக்ரோ பிராசஸர்' தயாரிப்புக்காக, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடிக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கடுமையாக ஆய்வு செய்து கண்டுபிடித்த, 'சக்தி' என்றழைக்கப்படும் இந்த பிராசஸர், பாதுகாப்புத்துறை மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பயன்படுத்தப்பட உள்ளது.

இத்தகைய ஆக்கப்பூர்வமான பணிக்காகத் தான், காமகோடிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதை கேரள காங்கிரசாரும், இங்குள்ள சில பிரிவினைவாத சக்திகளும், மாட்டு சாணம், கோமியம் குறித்து முன்பு அவர் பேசிய கருத்தை முன்வைத்து, 'அதற்காகத் தான் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது' என்று கிண்டல் செய்துள்ளன.

பா.ஜ.,வால் ஜனாதிபதி ஆக்கப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக, நாடே போற்றும் உத்தமர் அப்துல் கலாமையே விமர்சனம் செய்து அற்ப சுகம் கண்ட அதே கூட்டம், அதன், 'தரம்' மாறாமல், இப்போதும் எள்ளி நகையாடியுள்ளது.

விடுதலைக்காக போராடியவர் இருந்த காங்., இன்று, பிரிவினைவாதிகளின் கூடாரமாக மாறி விட்டது; அதனால், நாட்டிற்காக எவர் நன்மை செய்தாலும், இப்படித்தான் பேசும்.

பாகிஸ்தானுக்கு எதிராக நம் ராணுவம் நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துாரை' உலகமே வியந்து பார்த்த போது, சிறிதும் நாட்டுப்பற்று இல்லாமல், 'ஆதாரம் எங்கே?' என்று கேட்டு, பாகிஸ்தானுக்கு பல்லக்கு துாக்கியதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா?

தவளை தன் வாயால் கெடுவது போல், தேசத்திற்கு எதிராகவும், நாட்டிற்கு பங்களிப்போர் குறித்தும் இப்படி அவமரியாதையாக பேசியபடியே இருக்கட்டும்; அப்போதுதான், நாடு விடுலைக்கு பின், 'காங்., கலைக்கப்பட வேண்டும்' என்ற மஹாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறும்!

தேசிய கீதம் பாடுவதில் என்ன சிக்கல்?


பழ.சுந்தரமூர்த்தி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைக்கப் படாததற்கு அதிருப்தி தெரிவித்து, வழக்கம் போல் சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேற, '100 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க சட்டசபையின் மரபுகளை கவர்னர் மீறுகிறார்' என்று குதித்துள்ளார், திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின்.

மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளை எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை, தன் இஷ்டத்திற்கு சுருக்கி, திருத்தி அதை, 1970ல் மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளிலும் பாட வேண்டும் என்று உத்தரவிட்டார், முன்னாள் முதல்வர் கருணாநிதி.

ஆனால், சட்டசபை துவங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று, 1991ல் நடைமுறைப்படுத்தியவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அன்றிலிருந்து தான் தமிழ்த்தாய் வாழ்த்து சட்டசபையில் பாடுவது என்ற மரபு பின்பற்றப்பட்டு வருகிறது.

இதில் எங்கிருந்து வந்தது நுாற்றாண்டு கால மரபும், பாரம்பரியமும்?

அதேநேரம், 1971ல் கொண்டு வரப்பட்ட தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டம், கவர்னரின் உரை துவங்கும் முன்பும், வெளியே செல்லும் போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

இதை வலியுறுத்தி, அனைத்து மாநிலங்களுக்கும், 2018ல் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது, உள்துறை அமைச்சகம். அதை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநிலங்களில் கடமை; ஆனால், தமிழக அரசு தன் கடமையை செய்ய மறுக்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூடுதலாக தேசிய கீதத்தை பாடுவதில் என்ன குறை ஏற்பட்டு விடப் போகிறது?

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு, கவர்னரை அவமதிப்பதாக நினைத்து, தேசிய கீதத்தை அவமதிக்கலாமா?

இதில், 'சட்டசபையில் கவர்னர் உரை தேவை இல்லை; அரசியல் சட்டத்தை திருத்த தி.மு.க., முயற்சிக்கும்' என்கிறார், ஸ்டாலின்.

இவரின் எண்ணத்திற்கு ஏற்ப ஆட, மத்திய அரசும், நீதிமன்றமும் தி.மு.க., உடன்பிறப்புகளா என்ன!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us