PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

எஸ்.யோகிராஜ், சேலத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., - எம்.பி., தயாநிதி தொடர்ந்த அவதுாறு வழக்கில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, 'வழக்கை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்' என்று தெரிவித்து விட்டு, அவரது வழக்கறிஞர் அய்யப்பராஜ் வாயிலாக, வயது மூப்பு மற்றும் உடல் நலம் கருதி, இந்த வழக்கில்நேரில் ஆஜராக விலக்கு கோரி, மனு தாக்கல் செய்து இருக்கிறார்.
வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பவர், வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு மனு அளித்துள்ளது தான் வேடிக்கையாக உள்ளது.வழக்கே இவரை எதிர்த்து தான்; இவரே நேரில் ஆஜராகாவிட்டால், தயாநிதியின்வழக்கறிஞர் யாரிடம் விசாரணைநடத்துவார்? பழனிசாமியின் வழக்கறிஞர் அய்யப்பராஜிடமா?பழனிசாமிக்கு, 70 வயதாகிறது; நம் பிரதமர் மோடியின் வயது, 74.மோடி, ஓய்வு ஒழிச்சலின்றி, சுறுசுறுப்பாக, வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பழனிசாமி, தன் வயது மூப்பைக் காரணம் காட்டுவது, 'கிச்சு கிச்சு' வேலை தான்!
பழனிசாமிக்கு வயதும் மூப்பாகிவிட்டது, உடல் நலனும் ஒத்துழைக்கவில்லை என்பது உண்மையானால்...
முதலில் அனாவசியமாக கட்சிக் கூட்டம், பொதுக் கூட்டம், மாநாடு, ஊர்வலம் என்று வெளியில் சுற்றமாட்டாரா?
தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் உடல் நலன் கருதி அறிக்கை விடுக்கவோ, பேட்டி அளிக்கவோ மாட்டாரா?
உணவு உண்பதற்கும், மாத்திரை மற்றும் மருந்து உண்பதற்கும் தவிர வேறு எதற்கும் வாயை திறக்கவே மாட்டேன் என்றும் ஒரு பத்திரம் எழுதி கையொப்பமிட்டு, கோர்ட்டில் கொடுப்பாரா?
பழனிசாமி சார்பாக அவரது வழக்கறிஞர் அய்யப்பராஜ் தாக்கல் செய்துள்ள மனுவானது, 'கொள் என்றால் வாயைத் திறக்குமாம்; கடிவாளம் என்றால்வாயை மூடிக் கொள்ளுமாம் குதிரை'என்ற சொலவடையைத் தான்நினைவூட்டுகிறது.
இந்த முயற்சியாவது வெற்றி பெறுமா?
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஆண்டு தமிழக முதல்வர்,முதலீடுகளை ஈர்க்கதுபாய் சென்றார். ஆனால்,குடும்ப உறுப்பினர்கள்,ஆடிட்டர்களை கூடவே கூட்டி சென்றதால், சர்ச்சை ஏற்பட்டது. லுாலுா குழுமம் மட்டும் ஏதோ முதலீடு செய்ய ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.
அடுத்து சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கும் இதே காரணத்திற்காக சென்று வந்தார். சொல்லிக்கொள்ளும்படியாக முதலீடுகள் வந்ததாக தெரியவில்லை. வந்திருந்தால் தான் பெரிதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பரே!
'பல லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளோம்' என, சமீபத்தில் கூறினர். ஆனால், புதிய தொழிற்சாலைகள் எவை, எங்கே அமைந்துள்ளன; என்ன தொழில், உற்பத்தி செய்கின்றனர்; ஒவ்வொரு தொழிற்சாலையிலும் எத்தனை பேருக்கு வேலை கிட்டியுள்ளது போன்ற விபரங்கள் குறித்து, எங்குமே வெளிப்படையாகத் தெரியவில்லை.
அந்த விபரங்களை யாரிடம் கேட்க வேண்டும் என்றும் புரியவில்லை. முதலீட்டுக்காக சென்றவர்கள், அதனால் ஏற்பட்ட பலன் குறித்த விபரங்களையும் கூடவே கொடுத்திருந்தால், எளிதில்புரிந்து கொள்ள முடியும்.இந்த விஷயத்தில் பா.ஜ., அண்ணாமலை, வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டுமென அடிக்கடிகேட்கிறார்; இதுவரை தமிழக அரசு வெளியிடவில்லை.
இந்த சூழலில் தான், முதல்வர் தற்போது மேற்கொண்டுள்ள அமெரிக்க பயணம்
முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இம்முறையும் சூழமும், நட்பும், அதிகாரிகளும் சென்றிருக்கின்றனர் போலும்!
பெரியளவில் முதலீடுகளை கொண்டு வந்து, இந்த அமெரிக்க பயணத்தையாவது வெற்றிகரமாக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.ஆனால் அதற்குள், முதல் நாள் போட்ட ஒப்பந்த நிறுவனங்கள் அனைத்தும் சென்னையைஒட்டி, ஏற்கனவே இருக்கின்றன என்று புரசலும் கிளம்பி விட்டது.இது போன்ற மக்களின்,எதிர்க்கட்சிகளின் பல கேள்விகளுக்கு பதில்
கூற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
முதல்வர் தன் இந்த முயற்சியிலாவது வெற்றி அடைய வேண்டும் என, இறைவனை பிரார்த்திப்போம்.
மதுவை முற்றிலும் ஒழிக்க வேண்டும்!
ஆர்.பாலமுருகன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் மது விற்பனைஎதிர்பார்த்ததை விட குறைந்ததால், 46 ஊழியர்கள் சஸ்பெண்ட், 84 ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். அரசின்பிரமாதமான இச்செயலை பார்த்தால்,கண்டிப்பாக நாமெல்லாம் குடித்தே ஆக வேண்டும் என்ற நிலை சீக்கிரம் வந்தாலும் வரலாம்.
பொதுமக்கள் அனைவரும் சிறிது சிறிதாக குடிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என, எச்சரிக்கை விட்டு இருக்கின்றனர்.இப்படி அருவருப்பாகநடந்து கொள்ள இந்த அரசுக்கு எப்படி மனம் வருகிறது? இவர்களுக்கு வருமானத்தை பெருக்க வழியில்லை என்றால், ராஜினாமா செய்து விட வேண்டியது தானே... வருமானத்தைபெருக்க உங்களுக்குதெரியவில்லை என்றால், அதைப்பற்றி அறிந்தவர்கள்தமிழகத்தை ஆளட்டும்; நாங்கள் அவர்களுக்குஒத்துழைப்பு தருகிறோம்.
இன்னும் போகப்போக குறைந்தபட்ச தொகைக்கு மது வாங்கினால் ஊக்கப்பரிசு எதுவும் கொடுத்தாலும் கொடுப்பர் போல.கோவையில் காவல்துறை விட்ட ஒரு அறிக்கை யில், ஓட்டுனருடன் வரும் நபர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யவேண்டுமாம். அப்போது தான் விபத்து நடக்காது என்பது காவல்துறைஎண்ணம். இது ஓரளவுக்கு நல்ல விஷயம் என்றாலும், இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தைஏற்படுத்த மாட்டார்களா?
மது என்னும் அரக்கனை ஒழிப்பதற்கு இன்னும் ஒரு தைரியமான நபர் வரவில்லையே என நினைக்கும் போது, மனம் மிகவும் புண்படுகிறது. மது அருந்தி சாலையில் கிடப்போரை கண்டால், அவர்கள் குடும்பங்களை நினைத்து மனம் மிகவும் பதறுகிறது.இவையெல்லாம் முதல்வர்கண்ணில் படாதோ... அவர்களுக்கு தேவை வருமானம்; அதை எப்படிவேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமே பிரதானமாக உள்ளது.
முதல்வர் அவர்களே... எங்களுக்கு இலவசங்கள்வேண்டாம்; பேருந்தில்,'ஓசி' பயணம் வேண்டாம்;சலுகைகள் கூடவேண்டாம்; தயவு செய்து மதுவை ஒழியுங்கள்... முற்றிலுமாக ஒழியுங்கள்... தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக மது ஒழிக்கப்படும் நாள்,உங்கள் சாதனை சரித்திரத்தில் மிகப்பெரிய ஒரு கிரீடமாக இருக்கும்... அதை செய்வீர்களா?