/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படணும்!
/
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படணும்!
PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படணும்!
கி.ராமசுப்ரமணியன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:அண்ணாமலை லண்டன் சென்றுள்ளதால்,தமிழகம் அமைதியாக இருப்பதாகவும், பா.ஜ.,வினர் விடுதலை பெற்று மகிழ்வதாகவும் எள்ளி நகையாடி புளகாங்கிதம் அடைந்துள்ளார், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.
உண்மைதான்... ஆளுங்கட்சியினரின் அராஜகங்களையும், 'இந்த வார கொலை பட்டியல்' என்று 'தினமலர்' நாளிதழில் ஒரு புதிய பகுதியே உருவாகும் அளவில்,தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்களையும் கண்டித்து, தினம் தினம் அறிக்கை விடுவதோடு, பத்திரிகையாளர்களையும் சந்தித்துப் பேசி, தி.மு.க., அரசுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார் அண்ணாமலை.
சிங்கம் கர்ஜித்தால் சிறு நரிகளுக்கு குலை நடுங்கத்தானே செய்யும்!
கூடவே, தலைவன் கர்ஜிப்பால் அவர் பின்னால் தொண்டர்களும் தைரியமாக அணிவகுத்து, கட்சியின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்கின்றனர். இதன் காரணமாக, சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில்பா.ஜ.,வின் வாக்கு வங்கி சதவிகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அச்சமடைந்து தி.மு.க., அரசு அமைதியிழந்து உள்ளது.
அதே நேரம், ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டி, தட்டிக் கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவரான பழனிசாமியோ, தி.மு.க.,வுடன் கள்ள உறவு கொண்டு மவுனமாக உள்ளார். ஊழல் புகார் மற்றும் வழக்குகள் காரணமாக, 'மாஜி' அமைச்சர் எம்.ஆர்., விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் கைது போன்ற நடவடிக்கைகளால் மிரண்டு போன அ.தி.மு.க., நிர்வாகிகள், அரசின் தவறான செயல்பாடுகளை விமர்சிக்காமல், அண்ணாமலைக்கு அரசியல் முன் அனுபவம் இல்லை என்று புலம்பி வருகின்றனர்.
அ.தி.மு.க.,வின் இத்தகைய போக்கால், உண்மைத் தொண்டர்களை இழந்து, கட்சி கூடாரம் காலியாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை, அக்கட்சி நிர்வாகிகள் உணர்ந்து, பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக செயல்பட வேண்டும்.
பொறுத்திருந்து பார்ப்போம்!
என். வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: நடிகர்விஜய் துவக்கிய கட்சிக்கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு, தமிழக பகுஜன் கட்சித்தலைவர், 'எங்களுக்குஉரிய யானைச் சின்னத்தை எப்படி உங்கள் கட்சிக்கொடியில் பயன்படுத்தலாம்?' என்று கடுமையாகஆட்சேபனை தெரிவித்திருந்தார். இப்போது, நடிகர் விஜய் தன் கட்சி மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த மாநாடு நடத்த, முறைப்படி காவல்துறையின் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இது சம்பந்தமாக நடிகர் விஜய்க்கு, விக்கிரவாண்டி எஸ்.ஐ., 21 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பிஉள்ளார்.
அவர் எழுப்பி இருக்கும்கேள்விகளுக்கு, முன்கூட்டியே பதில் அளிப்பதுரொம்ப கஷ்டம் என்கிறார்விஜய் கட்சியின் நிர்வாகி ஒருவர். காவல்துறை அதிகாரிகள் ஆளுங்கட்சியான தி.மு.க., நடத்தும் மாநாடுகளுக்கு,இப்படி எல்லாம் தொந்தரவு தர மாட்டர்.
எத்தனை பேனர்கள்வைத்தாலும் கண்டுகொள்ளவே மாட்டர்.ஆனால், எதிர்க்கட்சிகள் நடத்தும் அரசியல் மாநாடுகளுக்கு மட்டும் தடைகளைஏற்படுத்த கிடுக்குபிடிபோட்டு பதில் சொல்ல முடியாத கேள்விகள் நிறைய கேட்பர்.
இதில், நீதிமன்றம் தலையிட்டு அனுமதி கொடுத்தால் மட்டுமே மாநாடு எந்த இடையூறும் இல்லாமல் நடத்த வழி பிறக்கும்.
எது எப்படியோ, நடிகர்விஜயின் சில படங்கள், ஏதாவது பிரச்னையில் சிக்கி திரைக்கு வரும்போது, அவை 'சூப்பர் ஹிட்' ஆவது வழக்கம்.
அந்த வகையில், மாநாடு வெற்றிகரமாக நடக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
பெற்றோர் கவனிக்க வேண்டும்!
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:இன்றைய மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் தங்காமல், கூட்டாக சேர்ந்து, தனியாக குடியிருப்புகளில் தங்குகின்றனர்.இதற்கு, சுதந்திரமாக எல்லாவற்றையும் அனுபவிக்கலாம் என்ற இளமை வேகம் தான் காரணம்.
இதை மெய்ப்பிக்கும் விதமாக, சமீபத்தில் செங்கல்பட்டுமாவட்டம், பொத்தேரியில்மாணவர்கள் குடியிருப்புகளில் போலீஸ், 'ரெய்டு' நடந்திருக்கிறது.
இதில் அதிர்ச்சி தரும் ஆபத்து என்னவென்றால்,போதைப் பொருட்கள் விற்பனை செய்த, 19 மாணவர்கள், அந்த குடியிருப்புகளில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தான் நாட்டின் வருங்கால துாண்களா என்ற வருத்தம் ஏற்படுகிறது.
இச்செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளிவந்தது.
அதில், உயர் போலீஸ் அதிகாரி, 'மாணவர்கள் நலனில் ஆசிரியர்களை காட்டிலும் பெற்றோருக்குதான் அதிக அக்கறை உள்ளது. எனவே தங்களதுபிள்ளைகளை கண்காணித்து, அவர்களது உடைமைகளை, அவர்களுக்கு தெரியாமல் சோதிக்க வேண்டும். அவர்களது வெளிப் பழக்கங் களையும்கண்காணிக்க வேண்டும்'என்று சொன்னதை, பெற்றோர் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
'எந்தக் குழந்தையும்நல்ல குழந்தை தான்மண்ணில் பிறக்கையிலே...அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே...' என்ற எம்.ஜி.ஆர்., பட பாடல் வரியை நினைவில்நிறுத்தி, பிள்ளைகள் வளர்ப்பில் இனியாவது பெற்றோர் அதிக அக்கறை கொள்வரா?
மானத் தை காப்பாற்றிய மாற்றுத்திறனாளிகள்!
என். மல்லிகை மன்னன்,மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரான்சின், பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கம், வெள்ளி வெண்கலம் என்று பதக்கங்கள் பெற்று அசத்தி வருகின்றனர். இதுவரை, மூன்று தங்கம், ஐந்து வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம், 14 பதக்கங்கள் பெற்று இந்தியாவுக்குபெருமை தேடித் தந்துள்ளனர்.
இன்னும் அதிகபதக்கங்கள் இவர்கள் பெற்றாலும் ஆச்சரியம் இல்லை. இதற்கு முன் பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, நான்கு வெண்கலம் என, மொத்தம் ஐந்து பதக்கங்களே கிடைத்தன.
ஒரு தங்கப்பதக்கம் கூட ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு பதக்கப் பட்டியலில்,73வது இடம் தான் கிடைத்தது.
இந்தியாவுக்கு ஏற்பட்டஇவ்வளவு மோசமான நிலையை, மாற்றுத்திறனாளிகள் தங்கள் கடின முயற்சியால் தகர்த்தெறிந்து, இதுவரை, 14 பதக்கங்கள் பெற்று நம் நாட்டின் மானத்தை காப்பாற்றி உள்ளனர்.
இவர்களது வெற்றியைப்பார்க்கும்போது, 'தங்கத்திலேஒரு குறை இருந்தாலும்அது தரத்தினில் குறைவதுண்டோ... சிங்கத்தின் கால்களில் பழுது பட்டாலும்அதன் சீற்றம் குறைவதுண்டோ...' என்ற பழைய திரைப்பட பாடல் தான் நம் நினைவுக்கு வருகிறது.
இந்தியாவின் மானத்தை பாராலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்று காப்பாற்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு நம் ராயல் சல்யூட்!