/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
நடிகர்கள், அரசியல்வாதிகள் உதவலாமே!
/
நடிகர்கள், அரசியல்வாதிகள் உதவலாமே!
PUBLISHED ON : மே 14, 2024 12:00 AM

ஜெ.மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊரக பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன், 5,000 நீர்நிலைகளை புனரமைக்க, தமிழக அரசு முடிவு என்ற செய்தி வெளியாகி உள்ளது.
நீரும், விவசாயமும் இரு கண்கள்.
மழைக் காலத்தில் பெய்யும் மழை நீரை சேமிக்க அணை உருவாக்கிய வெளிநாட்டவரான பென்னிகுவிக், தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் மற்றும் காமராஜர் உள்ளிட்ட தமிழக ஆட்சியாளர்களை நாம் மறக்க இயலாது.
ஆனால், அக்காலம் மறைந்து விட்டது. இப்போது அரசியல் செய்வது குறித்து ஆழ்ந்து யோசிப்பதிலேயே, முழு நேரத்தையும் அரசியல்வாதிகள் செலவழிக்கின்றனரே தவிர, மக்கள் நலன் குறித்தோ, எதிர்கால திட்டங்கள் குறித்தோ கவலைப்பட நேரம் ஒதுக்குவதில்லை.
கிட்டத்தட்ட, 35 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் செய்த தவறால், இன்று நாம் தண்ணீருக்குத் தவிக்கும் நிலை உருவாகி விட்டது. அதற்குத் தீர்வு காணக் கேட்டால், இப்போது நம்மையே சாலையில் இறங்கச் சொல்கிறது அரசு.
நாம் இறங்கினால் தான் வேலை நடக்கும் என்றால், அதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். அதற்கு முன்னதாக...
நாளுக்கு நாள் மீட்டர் போட்டு சம்பாதிக்கும் அரசியல்வாதிகளும், நடிகர்களும், நடிகையரும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? அவர்களின் பணத்தில், குறிப்பிட்ட தொகையை மாநிலத்திற்கு எனக் கொடுத்தால், மொத்த தமிழகமும் தலைநிமிருமே?
நீர்நிலைகளை புனரமைக்க, மக்களுக்கு அழைப்பு விடும் அரசு, முதலில் அரசியல் வாதிகளிடமும், நடிகர், நடிகையர், மிகப் பெரிய தொழிலதிபர்கள் என, பணம் படைத்தவர்களிடம் அல்லவா கோரிக்கை வைத்திருக்க வேண்டும்? இந்த அரசுக்கு, இப்படி எக்குத்தப்பாக யார் தான் ஆலோசனை சொல்கின்றனரோ தெரியவில்லை!
ஆலோசனை சொல்பவர்கள் கிடக்கட்டும்; தலைமை என்ன செய்கிறது? ஒன்றும் புரியவில்லையப்பா!

