/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கமலின் சுயமரியாதையாவது மிஞ்சட்டும்!
/
கமலின் சுயமரியாதையாவது மிஞ்சட்டும்!
PUBLISHED ON : ஏப் 05, 2024 12:00 AM
குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தன்னுடைய தன்னிகரற்ற நடிப்பால் தனி முத்திரை பதித்து, சகலகலா வல்லவனாக தமிழ் திரை உலகில், மூன்று தலைமுறையாய் ஜொலிக்கும் பத்மஸ்ரீ கமல்ஹாசனின், தற்போதைய நிலையை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும், மணம் உண்டு' என, பகுத்தறிவு, சுயமரியாதை, நாத்திகம் என பேசித் திரிந்த கமல், ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக தன்மானத்தை அடகு வைத்தது, வியப்பாகவும், விந்தையாகவும் உள்ளது!
இந்த விஷயத்தில் கமல், இசைஞானி இளையராஜாவிடம் பாடம் கற்றிருக்க வேண்டும்.
ராஜ்யசபா எம்.பி., பதவியானது, தன்னை தேடி வரச் செய்த இளையராஜா எங்கே... இலவு காத்த கிளியாக காத்திருந்து, ஒன்றிரண்டு எம்.பி., சீட்டுக்கு ஆலாய் பறந்து, மூக்குடைபட்ட கமல்ஹாசன் எங்கே!
இதுவரை கமலை நம்பி ஓட்டளித்த, படித்த வாக்காளர்களும், ஒரு சீட்டுக்காக மண்டியிடும் இவரை கண்டு நொந்து, கை கழுவி விடுவர்!
உலக நாயகனாக, உச்சாணிக்கொம்பில் இருந்த கமல்ஹாசன், இனியும் சுயமரியாதை, பகுத்தறிவு, தன்மானம் போன்றவற்றை பேசி, ஒரு புண்ணியமும் இல்லை!
சந்தி சிரிக்காமல் இருக்க வேண்டும் எனில், கலை உலகு இவரை மீண்டும் அரவணைக்க வேண்டும்.
வீழப் போவது யார்?
செ.
சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'பா.ம.க.,
தலைவர் அன்புமணி, வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணியை மாற்றி
வருகிறார்' என்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேசியுள்ளார்.
இவரது
பேச்சிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக தெரிய வருகிறது. பா.ம.க., நிறுவனர்
ராமதாசை தாக்காமல், அவர் மகன் அன்புமணியை மட்டும் குறி வைத்து
தாக்குகிறார் எனில், கூட்டணிக்கு அன்புமணி தான் தடையாக இருந்திருக்கிறார்
என்பது புரிகிறது.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., -
பா.ம.க., உட்பட பல கட்சிகள் தே.ஜ., கூட்டணியில் இருந்தன. 2019லும்
இக்கூட்டணி தொடர்ந்தது.
மனசாட்சிப்படி சிந்தித்துபார்த்தால்,
தற்போதும் இதே கூட்டணி தொடர்ந்திருக்க வேண்டும்; தற்போது விலகியது,
அ.தி.மு.க., தானே தவிர, பா.ம.க., அல்ல.
'தண்ணீர் இருக்கும் இடத்தை
தேடி பறவைகள் செல்லும்; அது போல கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டிய
அவசியமில்லை' என பழனிசாமி பேசியுள்ளது, நகைப்புக்குரிய விஷயம்.
ஏனெனில்,
இவர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, தாகம் தீர்க்க, பா.ஜ.,வை தான் நாட
வேண்டி இருந்தது. தற்போது தாகம் தீர்ந்து விட்டதாக நினைத்து, தனி
ஆவர்த்தனம் வாசிக்கிறார். இவரது இந்த ஆணவம், தி.மு.க.,வை வீழ்த்துகிறதா
அல்லது இவர் வீழ்கிறாரா என்பது தேர்தலுக்குப் பின் காணப் போகிறோம்!
செய்யலாமே புதல்வர்?
பொ.ருக்மணி
தேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்: நாமக்கல் மாவட்டம், படமுடிபாளையத்தில், 2010ல்
அ.தி.மு.க., ஆட்சியில், 74 பேருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. அதற்கு,
ஜெ., அம்மா நகர் என பெயரிட்டனர்.
அந்த வீட்டு மனைகளுக்கு
சமீபத்தில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், ஜெ., அம்மா நகர் என
வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றிவிட்டு, 'கலைஞர் கருணாநிதி நகர்'
என்று மாற்றி வைத்து விட்டனர்.
குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய்
வழங்கும் இலவச திட்டம், புதிய நுாலகம், மருத்துவமனை, கிளாம்பாக்கம்
பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு மைதானம், சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு
கேலரி உட்பட பலவற்றுக்கும் கருணாநிதியின் பெயரையே வைத்துள்ளனர். அதை
பொதுமக்கள் விரும்பவில்லை; ஆனால், கருணாநிதியின் புதல்வர் ஸ்டாலின்
ரசிக்கிறார்.
மக்கள் கருணாநிதியை மறந்துவிடக் கூடாது என்பதற்காக
எல்லா இடங்களிலும் கருணாநிதியின் பெயரை வைக்கிறார். ஒரு மகனாக அவர்
ஆசைப்படுவதில், எந்த தவறும் இல்லை. தாராளமாக வைக்கட்டும்.
தமிழகம்
முழுதும், 4,500 மதுக்கடைகளும், 4,500 பார்களும் உள்ளன. அவற்றுக்கும் அவரது
பெயரை வைத்தால், யாரும் குற்றம் குறை சொல்ல மாட்டார்கள். செய்யலாமே
புதல்வர்?
ஜம்மு-காஷ்மீர் செல்லுங்கள் முதல்வரே!
சரோஜா
சகாதேவன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்சி
கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,
ஜம்மு-காஷ்மீர் நிலை தான் நம் நிலையும்; ஜம்மு-காஷ்மீரை சிதைத்ததைப் போல
தமிழகத்தையும் சிதைத்து விடுவார்' என்று பேசினார்.
இந்தியா- -
பாகிஸ்தான் எல்லையில் என்ன நடக்கிறது; 2019லிருந்து இந்திய அரசால்,
ஜம்மு-காஷ்மீரில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன; தற்போதைய நிலை
அங்கு என்ன என்பதை அறியாமலேயே, ஒரு முதல்வர் பேசுவது வேதனைக்குரியது.
கடந்த,
2016 மற்றும் 2019ல், நம் நாட்டு ராணுவம் நடத்திய, 'சர்ஜிக்கல்
ஸ்டிரைக்'கால், பயங்கர வாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டு, தீவிரவாதிகளின்
சொர்க்கபுரியாக இருந்த இடங்கள் முழுவதும் தகர்க்கப்பட்டதால், எல்லையில்
பதற்றநிலை குறைந்தது; வெளியிலிருந்து வரும் பயங்கரவாத சக்திகள்
ஒடுக்கப்பட்டன.
கடந்த, 2019 ஆகஸ்ட்டில், ஜம்மு-காஷ்மீருக்கான
சிறப்பு அந்தஸ்து கொடுக்கும், இந்திய அரசி யலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ
நீக்கிய பின், அப்பகுதியின் நிலைத்தன்மை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தின்
உதவியுடன், மத்திய அரசின் முன்னெடுப்புகளால் அங்கு, அமைதியும்,
வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நடக்கும்அளவுக்கு, இயல்புநிலை
ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில், நான்கு சிறுபிள்ளைகள் உட்பட
என் நண்பர் குடும்பத்தினர், ஜம்மு -காஷ்மீருக்குத் தனிப்பட்ட முறையில்
சுற்றுலா சென்று வந்தனர்.
'காஷ்மீரில் எந்த இடையூறும் இல்லாமல்,
எல்லா இடங்களையும், பயமின்றிமகிழ்ச்சியாக சுற்றிப் பார்த்தோம்' என,
மகிழ்ச்சியாகக் கூறினர். தற்போது அங்கு, நிறைய சுற்றுலா பயணியரைப் பார்க்க
முடிகிறது என்றும், என் நண்பர் கூறினார்.
தேர்தல் முடிந்ததும், ஒரு நடை ஜம்மு-காஷ்மீர் சென்று வாருங்கள் முதல்வரே!

