/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தடியால் அடித்தா இருளை விரட்ட முடியும்?
/
தடியால் அடித்தா இருளை விரட்ட முடியும்?
PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM

ரேவதி பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த தலைமுறை சிறுவர்கள், வாலிபர்கள் எல்லாரிடமும் ஒரே மாதிரியாக, பொறுமையின்மை, எரிச்சல், ஆத்திரம், கோபம் அதிகமாகக் காணப்படுவதை பார்க்கிறோம். எல்லா விஷயத்திற்கும் சச்சரவிடுதல், எல்லாரிடமும் சண்டைக்குப் போதல் என்று, நிதானமின்மையும் பதட்டமும் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது.
இந்த நிலைமை ஏன் என்று யோசித்தோமானால், எல்லார் வீட்டிலும், தகப்பன் போதையில் படுத்திருப்பான்; தாய் நாலு வீடுகளில் பாத்திரம் கழுவி கிடைக்கும் காசு, கைக்கும் வாய்க்கும் பற்றாமல், குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது, எப்படிக் காப்பாற்றுவது என்று ஒன்றும் புரியாமல், எப்போதும் ஒரு கையாலாகாத்தனத்தில் அங்கலாய்த்துக் கொண்டிருப்பாள்.
இந்த சூழ்நிலையில் வாழும் சிறுவர்கள், தங்களுக்கு வாழ்வில் எதுவும் சரிவர கிடைக்காத கோபத்தில், எப்போதும் மன அமைதியில்லாமல் கொந்தளித்தபடி இருக்கின்றனர்.
பஸ்ஸில் ஏறினால் நடத்துனரோடு சச்சரவு, சாலையில் நடந்து செல்லும்போதே யாருடனாவது வாய்ச்சண்டை, கைகலப்பு, போக்குவரத்து காவல் அதிகாரிகளுடன் மோதல் என்று இவர்கள், வெகு சுலபமாக வழி தவறி, 'அடங்காதவர்கள்' என்று முத்திரை குத்தப்படுகின்றனர்; கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப் படுகின்றனர்.
எத்தனை பேரை சிறையில் அடைப்பர் அல்லது சிறுவர் சீர்திருத்த நிலையங்களுக்கு அனுப்புவர்?
இருள் சூழ்ந்திருக்கிறது; அதை தடியால் அடித்து விரட்ட முடியுமா? அந்த இடத்தில் ஒரு சிறு விளக்கை ஏற்றிப் பாருங்கள்! அந்த வெளிச்சத்தில் இருள் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விடும்!
இளம் விதவைகள் உருவாவதை, நம்மால் தடுக்க முடியவில்லை. ஆனால், பிள்ளையைப் பெற்ற பெண்கள், தங்கள் குழந்தைகளை, நம் எதிர்கால தலைமுறையை, நல்லொழுக்கத்தோடு வளர்க்க முடியாமல் தற்போதைய சூழ்நிலையில் தடுமாறுகின்றனரே... அவர்களுக்கு தங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்த, சினிமாவில் ஹீரோக்களாக நடிப்பவர்கள் யாராவது வழி காட்டினால், பெண்களும் மனம் குளிர்ந்து வாழ்த்துவர் என்பது நிச்சயம்.
தடுப்பணைகளுக்கு தடை விதிப்பாரா பிரதமர்?
ஜெ.மனோகரன்,
மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பாலாற்றின் குறுக்கே
தடுப்பணை கட்டப் போவதாக, ஆந்திர முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின்
அருகில் உள்ள எல்லை மாநிலங்களான, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மூன்று
மாநிலங்களும், அவர்கள் மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை வர
விடாமல் தடுக்கும் விதமாக, தடுப்பணைகளை கட்டுவதில், மிகத் தீவிரம்
காட்டுவது, தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தான விஷயம்.
ஆனால்,
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடகாவின் மேகதாது தடுப்பணை
கட்டும் விவகாரத்தில், 'தமிழகத்தின் அனுமதி இல்லாமல் ஒரு செங்கல்லை கூட
அவர்கள் எடுத்துவைக்க முடியாது' என்று கூறுகிறார்.
கேரளாவில் மார்க்., கம்யூ., ஆட்சி நடப்பதால்,இங்குள்ள கம்யூ.,க்கள், அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தயக்கம் காட்டுவர்.
கர்நாடாகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடப்பதால், இங்குள்ள காங்., கட்சியினர், எதிர் குரல் கொடுக்க மாட்டார்.
அதுபோல, மத்திய அரசின் கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக, தமிழக பா.ஜ.,வினர் குரல் கொடுக்க மாட்டார்கள்.
எனவே,
பிரதமர் மோடி, நடுநிலையோடு, ஒட்டு மொத்தமாக மூன்று மாநிலங்களும்
தடுப்பணைகள் கட்டுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க முன்வர வேண்டும்.
நதிகளை
தேசியமயமாக்கும் சட்டத்தை நிறைவேற்ற, அமல்படுத்த மிகவும் காலதாமதம்
ஆகியபடி இருப்பதால், இதை மட்டுமாவது, பிரதமர் உடனடியாக நிறைவேற்ற
வேண்டும்.
மேலும், அரசியல் மாச்சரியங்களைக் கடந்து, தமிழகத்தில்
உள்ள அனைத்துக் கட்சியினரும், தமிழகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால
சந்ததியினர் நலனுக்காக பிரதமரை உடனடியாக சந்தித்து, இக்கோரிக்கைக்காக
வலியுறுத்த வேண்டும்.
அரசியலிலும் பண்ட மாற்று முறை!
அ.ரவீந்திரன்,
குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஒப்புக்கு சப்பாணியாக ஒரு
கூட்டணி அமைத்து, களமிறங்கி மண்ணை கவ்வியது தான் மிச்சம்...
எதிர்வரும்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி கிடைக்காது.
ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்ற எழுதப்படாத விதி இருப்பதால், எதற்கு வீண்
வேலை என அ.தி.மு.க., தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது.
இந்த
கால கட்டத்தில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள், சோர்ந்து போன
அ.தி.மு.க., அரசியலுக்கு ஊட்டச்சத்து டானிக்காக ஆகியுள்ளது. ஆளும்
தி.மு.க.,வுக்கு குடைச்சல் கொடுக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என களமிறங்கி
விட்டது.
கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய கையுடன்,
கள்ளச்சாராய சாவுகளுக்கு சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னையில் பழனிசாமி
தலைமையில் உண்ணாவிரதமும் இருந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, நாம்
தமிழர் கட்சி நிர்வாகிகள் வந்து ஆதரவு தெரிவிக்க, அ.தி.மு.க., தரப்பு
உற்சாகமாகி விட்டது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் களத்தில்
அ.தி.மு.க., போட்டியிடாததால், அவர்களது ஓட்டுகளை சிந்தாமல், சிதறாமல் நாம்
தமிழர் கட்சிக்கு அளிக்க பழனிசாமி முடிவு செய்திருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. அங்கு எப்படியும் தி.மு.க., தான் வெற்றி பெறும் என்பதில்
அணுவளவும் சந்தேகமில்லை.
ஆனால், இரண்டாவது இடம் யாருக்கு என்பதில்
தான் பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி நடக்கிறது.
பா.ம.க., இரண்டாவது இடத்துக்கு வந்து விட்டால், 2026 சட்டசபை தேர்தலில்
கூட்டணிக்கு வர கூடுதல் சீட்கள் கேட்டு நெருக்கடி தருவர். இதனால், நாம்
தமிழர் கட்சியை ஆதரிக்க பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
தி.மு.க.,வுக்கு
எதிரான அ.தி.மு.க., போராட்டத்துக்கு ஆதரவு தந்த நாம் தமிழர் கட்சிக்கு
கைமாறாக பழங்கால பண்ட மாற்று முறையாக இடைத்தேர்தல் களத்தில் அக்கட்சிக்கு
அ.தி.மு.க., ஓட்டுகளை திருப்பி விடுவது சரியான ராஜதந்திரம்.