sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

மக்கள் ஊமைகள் அல்ல!

/

மக்கள் ஊமைகள் அல்ல!

மக்கள் ஊமைகள் அல்ல!

மக்கள் ஊமைகள் அல்ல!


PUBLISHED ON : ஆக 26, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 26, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.எஸ்.குழந்தைவேலு, சங்ககிரி, சேலம் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: பார்லிமென்ட் கூட்டம் நடத்த ஒரு நிமிடத்திற்கு, 2.5 லட்சம் ரூபாய் செலவாகிறது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் வரி பணத்தில் சம்பளமும், சொகுசு வாழ்க்கையும் வாழும் உறுப்பினர்களின் நடவடிக்கைகளோ மெச்சும்படி இல்லை.

பார்லிமென்ட் ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்கும் இடமாகவும், மக்களின் உண்மையான பிரச்னைகளுக்கு முடிவை எடுத்து செயல்படுத்தும் இடமாகவும் தான் இருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக சபையை முடக்குவது அறிவார்ந்த செயல் அல்ல.

மக்கள் தங்கள் பிரதிநிதிகள் வாயிலாக, தங்களின் அதிகாரத்தை செலுத்தும் முதன்மை மன்றம் தான் பார்லிமென்ட் என்பதை ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மனதில் கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் பார்லிமென்ட், 30 ஆண்டு காலத்தில், 12 முறை தான் ஒத்தி வைக்கப்பட்டது. ஒத்தி வைப்பு நேரம் கூட சில நிமிடங்கள் தான். அமெரிக்கா பார்லிமென்ட் கடந்த 20 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஒத்தி வைக்கப்பட்டதில்லை.

ஆனால், இந்திய பார்லிமென்ட் உறுப்பினர்கள், சபை கூடியதும் வேண்டாத விஷயங்களை முன்னிறுத்தி, சபையை முடக்குகின்றனர்.

பார்லிமென்ட் நிகழ்வுகளில் மிக முக்கியமானது, கேள்வி நேரமும் மற்றும் உடனடி கேள்வி நேரமும் தான். எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதம் இல்லாமல், அனைவரும் அரசு நிர்வாகத்தை எதிர்த்து கேள்வி கேட்கலாம்.

ஆனால், கேள்வி நேரத்தின் மாண்பும், மதிப்பும் தெரியாமல் சபை கூடியவுடனேயே அதை ஒத்தி வைத்து, 'எங்கள் பிரச்னையை உடனே விசாரிக்க வேண்டும்' என எதிர்க்கட்சிகள் கூச்சலிடு வதும், ஆளுங்கட்சி இது தான் சமயம் என சபையை ஒத்தி வைத்து, எதிர்க்கட்சியினர் வர மாட்டார்கள் என்பதை புரிந்து, மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றுகின்றன.

கடந்த ஜூலை 21ல் பார்லிமென்ட் துவங்கிய சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சிகளின் அமளியால் சபை ஒத்தி வைக்கப்பட்டு, ஒரு வாரம் முழுதும் இப்படியே நேரமும், மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டன.

ஜூலை 28ம் தேதி, 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து, 16 மணி நேரம் விவாதம் நடக்கும் என்ற ஒப்புதலுடன், அவை அமைதியாக நடந்த நிலையில், எதிர்க்கட்சிகள் பீஹார் வாக்காளர் சிறப்பு தீவிர நிரந்தரப் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால், சபை ஒத்தி வைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியபோது, ஆளுங்கட்சி சார்பில், 'அனைத்து பிரச்னைகளையும் ஒவ்வொன்றாக விவாதிக்கலாம்; எதிர்க்கட்சியினர் சபையை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், இரு சபைகளையும் நடத்த விடாமல், பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம், தர்ணா என தொடர்ந்து நடத்தினர். இப்படி சபை முடக்கம் என்பது, ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்திய வாக்காளர்களில் பெரும்பான்மையோர் படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் முட்டாள்களோ, ஊமைகளோ அல்ல. மக்களாட்சியான ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை நம்முடைய அரசியல்வாதிகள் மறந்துவிடக்கூடாது!



நாய் அபிமானத்தை குறைத்து கொள்ளுங்கள்! ரா.கணபதிராமன், அம்பாசமுத்திரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வீட்டு விலங்குகள் வீட்டில் இருந்தால், மற்றவர்கள் கவலைப்பட தேவையில்லை. ஆனால், தெருவில் சுற்றுவதுடன், சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை அதனால் பாதிக்கப்படும் போது தான் பிரச்னை எழுகிறது.

நாய் நன்றி உள்ளதுதான்; ஆனால், சில சைக்கோ நாய்கள், சாப்பிடும் போது கையை நீட்டி தடவப் போனால் கடித்து விடும்.

குறிப்பிட்ட வாகனச்சத்தம் ஒவ்வாததால், வாகனங்கள் மீது பாயும். தெருவை அடைத்துக் கொண்டு நிற்கும். பகலிரவு பாராமல் குரைத்து பாதசாரிகளை விரட்டும். பணி முடிந்து வீட்டுக்கு வர முடியாது. டவல் மட்டுமே மேலுக்கு போர்த்திய நிலையில் நம்மைப் பார்த்து பழகிய நாய்கள், சட்டை போட்டால் கடிக்க வரும்.

ஆடு - மாடு, பன்றிகளை பட்டியில் அடைத்து வளர்ப்பது போல், தங்கள் செல்ல பிராணிகளையும் பட்டியில் அடைத்து வளர்த்தால், இப்பிரச்னைகள் இல்லை.

தெருவில் கண்டதையும் தின்று, நம்மை வழிமறித்து கடிக்கும் போதுதான் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, நீதிமன்றம் இப்போது வழங்கிய தீர்ப்பில் குறை சொல்ல ஏதுமில்லை.

அதனால், காங்கிரஸ் எம்.பி., ராகுல் உட்பட நாய் மீது விேஷச பற்று வைத்திருப்போர், தங்கள் நாய் அபிமானத்தை குறைத்துக் கொண்டு மனிதாபிமானத்தை மனதில் கொள்ளுங்கள்.

மனிதர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்!



வெட்கக் கேடு! எஸ்.ஆர்.த்ராவிட், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், சமீபத்தில் மாணவி ஒருவர், கவர்னரிடம் இருந்து பட்டம் வாங்க மறுத்தது அநாகரிகத்தின் உச்சம்!

இதற்காகத் தான் கல்விக் கூடங்களில் அரசியல் தலையீடு கூடாது என்று கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். மாணவர்களுக்கு அரசியல் நிலைப்பாடு தேவை தான். அதையும் விட பொது வெளியில், சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரிகம் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

அம்மாணவி, 'நான் திராவிட மாடலை பின்பற்றுபவள், எனக்கு பட்டம் அளிக்க முதல்வர், உயர்கல்வி துறை அமைச்சர் இருக்கின்றனர் அவர்கள் பார்த்துக் கொள்வர். கவர்னர் தமிழகத்திற்கு என்ன செய்தார்?' என்று கேட்டுள்ளார்.

கல்லுாரி என்பது தங்கள் அரசியல் சார்பை வெளிப்படுத்தும் இடம் அல்ல; அறிவை பெறும் இடம். கல்விக் கூடங்களுக்கு என்று சில ஒழுங்கு, நெறிமுறைகள், பண்புகள் உள்ளன என்பதை ஆராய்ச்சி மாணவியான அவர் அறிந்திருக்கவில்லை என்றால், அவர் இதுவரை என்ன கற்றார் என்று தெரியவில்லை!

பொதுவாகவே, திராவிட மாடல் பின்பற்றாளர்களுக்கு இந்த பண்பு நெறிகள் சுட்டுப் போட்டாலும் வராது. அதில் ஒருவர்தான் இப்பெண்.

இதில் வேதனை என்னவென்றால், மாணவி அறியாமையில் அவ்வாறு கூறினாலும், அது தவறு என்று எடுத்துக்கூறி, கவர்னரிடம் பட்டம் வாங்க அறிவுறுத்த வேண்டிய துணைவேந்தர், வாயெல்லாம் பல்லாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து பட்டம் கொடுத்தது தான்!

இதுகுறித்து முதல்வர் எந்த கண்டமும் தெரிவிக்கவில்லை. அம்மாணவியை பின்பற்றி வருங்காலத்தில், தி.மு.க.,வை பிடிக்காதவர்களும் முதல்வர் பங்கேற்கும் விழாவில், அதுபோன்று நடந்து கொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

உலகிற்கே நாகரிகத்தை போதித்தவன், சபை மாண்பு குறித்து இலக்கணம் வகுத்தவன் தமிழன். ஆனால், இன்று திராவிட மாடல் ஆட்சியில், தமிழனின் நாகரிகம் தொலைந்து, அநாகரிகமே தமிழனின் அடையாளமாக, பெருமையாக பார்க்கப்படுகிறது என்றால், அதை விட வெட்கக் கேடு என்ன உள்ளது?








      Dinamalar
      Follow us