/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
காமராஜர் சமாதியை காங்., பராமரிக்கலாமே!
/
காமராஜர் சமாதியை காங்., பராமரிக்கலாமே!
PUBLISHED ON : மே 11, 2024 12:00 AM

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகை, சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து, 'மெரினா கடற்கரையில் உள்ள அரசியல் தலைவர்களின் சமாதிகள் தினமும் பராமரிக்கப்பட்டு, அழகாக அலங்காரம் செய்யப்படுகின்றன... ஆனால், கிண்டியில் உள்ள கர்மவீரர் காமராஜர் சமாதியை யாரும் கண்டுகொள்ளாமல், பராமரிப்பின்றி கிடக்கிறது' என குற்றம் சாட்டியுள்ளார். அதிலும், கவனமாக கூட்டணி கட்சியான, தி.மு.க., அரசு மீது குறை கூறாமல், அதிகாரிகள் மீது பாய்ந்திருக்கிறார்.
காமராஜர் தன்னலம் கருதாத பெருந்தலைவர். அவரது சாதனைகள் இன்றளவும் போற்றப்படுகின்றன. தமிழகத்தில் அவர் உருவாக்கிய கல்விக் கூடங்கள், தொழிற்சாலைகள், அணைகள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று அடுக்கி கொண்டே போகலாம். அவரது ஆட்சியை தமிழகத்தின் பொற்காலம் என்றே சொல்லலாம்.
காங்கிரசுக்கு தமிழகத்தில் இன்றளவும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், சொத்துக்கள் உள்ளது என்றால், அது காமராஜர் காலத்தில் வாங்கி போடப்பட்டவையே. அவர் கட்சிக்கு வாங்கி போட்ட நிலம், கட்டடங்களில் இருந்து காங்கிரஸ் அறக்கட்டளைக்கு மாதா மாதம் பல லட்சங்கள் வாடகை, குத்தகை பணம் வருகிறதே... அதிலிருந்து சிறிது எடுத்து, காமராஜர் சமாதி பராமரிப்புக்கு செல்வப் பெருந்தகை செலவழிக்கலாமே.
இன்று, உலகளவில் புகழ் பெற்றுள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய, மன்னன் ராஜராஜ சோழன் சமாதி அடையாளம் தெரியாமல் புதருக்குள் மறைந்து கிடக்கிறது. ஆனால், ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலை பார்க்கும் ஒவ்வொருவரும், ராஜராஜ சோழன் அருமை பெருமையை பேச தவறுவதில்லை.
அதுபோல் கர்மவீரர் சமாதியையும் அழகுபடுத்தி, பராமரித்து, அதை எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெ., நினைவிடங்கள் போல சுற்றுலா தலமாக்கி, அவரது புகழை செல்வப்பெருந்தகை பரப்பலாமே!
நாங்கள் யாரிடம் முறையிடுவது கலெக்டர்களே?
பா.ராம்குமார்,
திம்மாவரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: தமிழகத்தில், மணல் குவாரிகளில் அதிக மணல் எடுத்த விவகாரத்தில்,
மோசடி நடந்தது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த
விசாரணைக்கு, தமிழகத்தின் ஐந்து மாவட்ட கலெக்டர்கள் அமலாக்கத் துறை முன்
ஆஜராக மறுத்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி அவர்களுக்கு உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டது; அதன்படி கலெக்டர்களும் ஆஜராயினர்.
இது
சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில், தமிழக அரசு சார்பில் உச்ச
நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'அமலாக்க துறையினரால் மாவட்ட
கலெக்டர்கள் வெகு நேரம் காக்க வைக்கப்படுகின்றனர்,
அலைக்கழிக்கப்படுகின்றனர்' என்று குற்றம் சாட்டினார்.
இதை
தொடர்ந்து, 'கலெக்டர்களுக்கு வேறு பணிகள் இருக்கின்றன. அதனால், அவர்களை
காக்க வைக்கவோ, துன்புறுத்தவோ, அலைக்கழிக்கவோ கூடாது' என்று நீதிபதிகள்
உத்தரவிட்டுள்ளனர்.
ஒரு விசாரணை என்பது நாள் கணக்கில், வார கணக்கில்
தொடரும்; அது விசாரணை அதிகாரியை பொறுத்தும், வழக்கின் தன்மையை பொறுத்தும்
அமையும். ஏன் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் கூட, எத்தனை அரசு உயர்
அதிகாரிகள் நீதிமன்ற வராண்டாவிலும், மரத்தடியிலும் எத்தனையோ நாட்கள் காத்து
கிடப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
இத்தனைக்கும் மாவட்ட
கலெக்டர்கள், சென்னையில் அமலாக்க துறை விசாரணைக்கு வரும்போது, அரசு செலவில்
சொகுசு விடுதியில் தங்கி கொள்கின்றனர்; முதல் தரமான விரும்பிய உணவு வகைகளை
சாப்பிடுகின்றனர்; சொகுசு கார்களில் தான் விசாரணைக்கு சென்று வருகின்றனர்;
இவர்கள் விமானத்தில் சென்னை வந்து சென்றாலும், அரசு செலவு தான்.
அதே
நேரம், எத்தனையோ ஏழை மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் வாரக் கணக்கில்,
மாதக்கணக்கில் தங்களது குறைகளை முறையிட காத்து கிடக்கின்றனரே... ஏதோ,
கலெக்டர்கள் மட்டும் தான் வேலை செய்பவர்கள் என்றும், அரசு அலுவலகங்கள்
முன்பு காத்து கிடக்கும் பொதுமக்கள் வேலை, வெட்டி இல்லாதவர்கள் என்றும்
அர்த்தமா?
கடவுளை கூட பார்த்து விடலாம்; ஆனால், கலெக்டர்
அலுவலகத்தில் பார்க்கவே முடியாத எத்தனையோ அதிகாரிகள் இருக்கின்றனர்.
அங்குமிங்கும் அலைய விட்டதாகவும், மணிக்கணக்கில் காக்க வைத்ததாகவும், கோடி
கணக்கில் பீஸ் கொடுத்து வக்கீலை வைத்து உச்ச நீதிமன்றத்தில் உங்கள் குறைகளை
தெரிவித்துள்ளீர்கள்.
ஒரு ஏழையாக, பஞ்ச பரதேசியாக கலெக்டர் அலுவலக
வாசலில் ஆண்டுக் கணக்கில் காத்துக் கிடக்கும் பொது மக்களாகிய நாங்கள்,
எந்த நீதிமன்றத்தை நாடுவது?
தீ விபத்துகளை தவிர்ப்போம்!
வெ.ஸ்ரீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில்
பெரும்பாலான இடங்களில் கடும் வெயில் கொளுத்துகிறது. 100 - -110 டிகிரி
பாரன்ஹீட் வரை அடிக்கிறது. கோடை மழையும் பெரிதாக பெய்யவில்லை. வீடுகளில்
மின் விசிறிகள், குளிர்சாதன பெட்டிகள், 'ஏசி'க்கள் பகல், இரவு பாராமல்
இயங்கி கொண்டிருக்கின்றன. அதிக மின்சாரம் உபயோகத்தில் உள்ளது.
வீட்டுக்கு
வெளியிலும் வெப்பம், உள்ளேயும் வெப்பம். மின் கசிவு, வரும் மின்சாரத்தில்
ஏற்ற, இறக்கம் போன்றவைகளால் வீடுகளில், தொழிற்சாலைகளில், தீ விபத்துகள்
ஏற்பட வாய்ப்புகள் ஏராளம். கடும் வெப்பத்தால் காடுகளிலும் தீ விபத்துகள்
அடிக்கடி ஏற்படுகின்றன.
அரசு, வெயில் காலம் முழுதும் தீ
விபத்துகளை தவிர்க்கும் பணிகளுக்கு தயாராக இருக்க வேண்டும்.மின்வாரிய
ஊழியர்கள், தீயணைப்பு நிலையங்கள் போன்ற அமைப்புகள், தங்கள் தீயணைப்பு
உபகரணங்கள் அனைத்தையும் சரிபார்த்து, வேலை பார்க்கும் நிலையில் தயாராக
வைத்திருக்க வேண்டும்.
வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் தீ
அணைப்பு உபகரணங்கள், முதலுதவி பெட்டிகள், தண்ணீர் போன்றவை தயாராக
இருப்பதும் நல்லது. வனப்பகுதியை பார்வையிடும் சுற்றுலா பயணியர், சிகரெட்
துண்டு களை காய்ந்த சருகுகள் மீது எறியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்ட
துறைகளின் அதிகாரிகள் அடிக்கடி களஆய்வு செய்து, அனைத்து இடங்களிலும் தீ
விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், அப்படியே ஏற்பட்டாலும், அதை சமாளித்து,
விரைந்து கட்டுக்குள் கொண்டு வர, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்
இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதால், கடும் வெயிலின்
காரணமாகதீ விபத்துகள் ஏற்படுவதை தடுக்கலாம்; உயிர் சேதங்கள்,பொருள்
சேதங்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.