PUBLISHED ON : செப் 15, 2024 12:00 AM

எஸ்.ஸ்டீபன், கள்ளக்குறிச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., ஆண்டு கொண்டிருந்த போது, கைகளில் கருப்பு பதாகைகள் ஏந்தி, குடும்பத்தோடு, மதுக்கடைகளை மூட வேண்டும் என போராட்டம் நடத்தியவர் தான், இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து மூன்று முழு ஆண்டுகள் கடந்த பின்னரும், அது குறித்து சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல், மது விற்பனைக்கு, 'டார்கெட்' நிர்ணயித்து ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர் ஸ்டாலின். ஆனால், 'மதுக்கடைகள் நடத்துவதில், முதல்வருக்கு விருப்பமே இல்லை' என்று, டாஸ்மாக் நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சர் முத்துசாமி, ஒரு உருட்டு உருட்டி இருக்கிறார்.
அரசு, டாஸ்மாக் நடத்துவதில் ஸ்டாலினுக்குவிருப்பமே இல்லை என்பது உண்மையானால், பதவியேற்ற உடனேயே, மதுக்கடைகளை மூடுவதற்கு முதல் கையெழுத்தை போட்டு, தமிழக பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றி, கண்ணீரை துடைத்து இருப்பார்; 'படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும்' என்று, லிட்டர் லிட்டராக கதையளந்து கொண்டிருக்க மாட்டார்.
எனவே, சொம்மா பூச்சி காட்டாதீங்க சார்!
குறை கூறாமல் பாராட்டுவோம்!
சொ.முத்துசாமி,
பாளையங்கோட்டையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: பிரான்ஸ் தலைநகர்
பாரீசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், நம் நாட்டைச் சேர்ந்த
மாற்றுத்திறனாளி வீரர்கள், மொத்தமாக, 29 பதக்கங்களும், ஒலிம்பிக்
போட்டியில் மற்ற வீரர்கள், ஆறு பதக்கங்களும் பெற்றிருப்பதை, பலரும்
பாராட்டும் போது, பார்க்கவும், கேட்கவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
'இவ்வளவு
தானா?' என்ற முணுமுணுப்புகளும் ஆங்காங்கே இல்லாமல் இல்லை. அப்போதெல்லாம்
மனம் கொஞ்சம்பின்னோக்கிச் சென்று சில விஷயங்களை அசை போட்டுப்
பார்க்கிறது...
அது, சீன- - அமெரிக்கா பனிப்போர் உச்சத்தில்
இருந்த நேரம். உலக நன்மைக்காகவும், இந்தப் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு
வருவதற்காகவும், தான் சீனா செல்லவும் தயாராய்இருப்பதாக, அன்றைய அமெரிக்க
அதிபர் நிக்சன்பகிரங்கமாக அறிவித்தார்.
அப்போது, உலகின் அனைத்து விஷயங்களில் இருந்தும் சீனா ஒதுங்கி, இரும்புத் திரை நாடாக இருந்தது!
'அமெரிக்க
அதிபர் சீனா வருவதற்கு முன் இணக்கமான சீன- - அமெரிக்க நிகழ்வு ஏதாவது
இருந்து, பின் அதிபரின் சீன பயணம் இருந்தால் நன்றாக இருக்கும்' என, இரு
நாட்டு அரசுகளும் முடிவு செய்தன.
அதன்படி, நிக்சனின் பயணத்திற்கு
ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள், அமெரிக்க டேபிள் டென்னிஸ் வீரர்கள்.
அவர்களின், நட்பு ரீதியான டென்னிஸ் போட்டி தான், வெகு நாட்களுக்குப்
பிறகு சீனாவும், அமெரிக்காவும் ஒன்றாக இணைந்து நடத்திய இனிய நிகழ்ச்சி!
சில அரசியல் காரணங்களால் அது அதிகாரபூர்வமற்றதாக இருந்தது; அந்த நிகழ்ச்சிக்குப் பிறகே, நிக்சன் பயணம் நடைபெற்றது.
நாட்டின் மானம் காப்பதிலும் விளையாட்டு வீரர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
அர்ஜென்டினா,
பிரிட்டனின் காலனி நாடாக இருந்த கால கட்டம்அது. பிரிட்டனின் ஆதிக்கத்தில்
இருந்து வெளிவர வேண்டும் என்று, அர்ஜென்டினா இளைஞர்கள்போராடினர்; அந்தப்
போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது பிரிட்டன்.
இது நடந்து
கொஞ்ச நாளில், பிரிட்டன் - அர்ஜென்டினா கால்பந்து போட்டி
ஒன்று,அர்ஜென்டினாவில் அரங்கேறியது. இதில் பழிக்குப்பழி வாங்க எண்ணிய
அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர்கள், பிரிட்டனுக்கு எதிராக,எட்டு கோல்
போட்டு பழி தீர்த்துக் கொண்டனர்.அன்று, அர்ஜென்டினாவின் மானம் காத்த
வீரர்களாக நாட்டு மக்களால் அவர்கள் கொண்டாடப்பட்டனர்.
'அதிக பதக்கம்
பெறவில்லையே...' என்று குறை கூறுபவர்கள், நம் வீரர்கள் ஒலிம்பிக்
மைதானத்தில் போய் நிற்பதற்கே ஒரு தகுதி வேண்டும் என்பதை உணர வேண்டும்.
ஒலிம்பிக் மைதானத்தில் நிற்கும் தகுதி பெற்றாலே, பாதி வெற்றியைப் பெற்ற
மாதிரி தான்!
கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாட்டில், இன்றும் உலகளவில் நாம் தானே முன்னணியில் இருக்கிறோம்!
கையும்,
காலும் நன்றாக இருக்கும் நாமே, சில நேரங்களில் நம்மையும் அறியாமல்
வீட்டிற்குள்ளேயே, தட்டுத்தடுமாறி விடுகிறோம்; ஆனால்
மாற்றுத்திறனாளிகள்எதிர் கொள்ளும் சோதனைகளும், வேதனைகளும் சொல்லில்
அடங்காது.
வெளிநாட்டில், அதுவும்ஒலிம்பிக் கிராமத்தில், சாப்பாட்டு
மேஜையில்அமர்வதில் இருந்து உடல் கழிவுகளை வெளியேற்றுவது வரை ஒவ்வொரு
விஷயத்திலும் அவர்களுக்குச் சிரமம் தான்; சோதனை தான்.
மற்ற
வீரர்களுக்கும் பல சிரமங்கள் உண்டு தான்; அத்தனை சிரமத்திற்கு
மத்தியிலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் பாரத வீரர்கள்,ஆறு பதக்கங்களையும், அதே
பாரீஸ் பாராலிம்பிக்போட்டியில், மாற்றுத்திறனாளிகள், 29 பதக்கங்களையும்
பெற்று, பாரதத்தின் பெருமையை பார் அறியச் செய்துவிட்டு வந்திருக்கின்றனர்!
அவர்களை வாழ்த்தி, வரவேற்போம்!
காஷ்மீரி ல் விரைவில் விடிவெள்ளி!
வி.ஹரன்,
தேனியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜம்மு - காஷ்மீர் சட்டசபை
தேர்தல் மக்களிடையே ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் துாண்டி விட்டுள்ளது.
தனிமாநிலமாக அதை அங்கீகரிக்கும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளதால், மக்கள்
உற்சாகமடைந்துள்ளனர்.
அங்குள்ள மாநில கட்சிகள், 'ரத்து செய்யப்பட்ட அரசியல் சாசனம் பிரிவு 370ஐ மீட்போம்' என்கின்றன.
கூட்டணியில் உள்ள காங்கிரசோ, இச்சட்டம் குறித்து வாயே திறக்கவில்லை; மாநில அந்தஸ்து கொடுக்க மறைமுக ஆதரவு கொடுக்கிறது.
அதே சமயம், வெளிமாநிலத்தவருக்கு நில விற்பனை, வேலைவாய்ப்பு தருவதை, பரூக் அப்துல்லா கூட்டணியில் உள்ள காங்கிரசும் எதிர்க்கிறது.
முதல் இரண்டு கட்ட தேர்தல், 529 வேட்பாளர்களுடன், 50 சட்டசபை தொகுதிகளுக்கு நடக்க உள்ளது.
தீவிரவாத
அமைப்புகளுடன் தொடர்பில் இருந்து, தேர்தலை புறக்கணித்து வந்த ஜமாத் இ
இஸ்லாமி, சுயேச்சையாக, வடக்கு - தெற்கு காஷ்மீரில், வேட்பாளர்களை
நிறுத்தியுள்ளது.
பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் தேர்தல் களம்
இறங்கியுள்ளனர். காஷ்மீரின் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு, இது
வழிவகுக்கும்.
பழங்குடியினர், தலித், பஹ்ரி முஸ்லிம் ஓட்டுகளை அள்ள, பா.ஜ., 11 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.
இதுவரை இரண்டு குடும்பங்கள் ஆட்சி செய்து வந்த ஜம்மு - காஷ்மீரில், புதிய இளம் தலைவர்கள் புலப்படுகின்றனர்.
தேர்தல்
விதிமுறைகள் மீறல், மிரட்டல், ஓட்டுச்சாவடியை கைப்பற்றுதல் போன்ற
அடாவடிகள் இல்லாமல், அக்டோபர் மாதம், புதிய மாநிலம் பிறந்து விடும்.
தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும், இந்த ஜனநாயக விடியலை வரவேற்க வேண்டும்.