PUBLISHED ON : ஏப் 17, 2024 12:00 AM

எம். ஆசிர்வாதம், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சென்னையில், நுாற்றில் 40 பேர் ஓட்டுப் போட தயங்குகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில், தென் சென்னை, மத்திய சென்னையில், 58 சதவீதம் ஓட்டுப்பதிவு இருந்தது. வட சென்னையில், 64 சதவீதம் ஓட்டுப்பதிவு இருந்தது. தேசிய மற்றும் மாநில அளவை விட, சென்னையில் ஓட்டு சதவீதம் குறைந்து காணப்படுகிறது' என மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன் புலம்பி இருக்கிறார்.
வெறுமனே விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தி விட்டால் மட்டும் வாக்காளர்கள் அனைவரும் திரண்டு வந்து ஓட்டுகளை பதிவு செய்து விட மாட்டார்கள்.
அரசியல் கட்சிகள் தகுதியுடைய, நேர்மை யான, மக்கள் சேவை செய்ய ஆர்வமுள்ள வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
போட்டியிடும் வேட்பாளருக்கு குறைந்த பட்ச கல்வித் தகுதி இருக்க வேண்டும்.
வேட்பாளர்கள் மீது எந்த விதமான சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்களும் நிலுவையில் இருக்கக் கூடாது.
வழக்கு நிலுவையில் உள்ளது என்பது போட்டியிட தகுந்த காரணம் அல்ல.
வாக்காளர்கள் எதிர்பார்ப்பது அப்பழுக்கில்லாத மக்கள் சேவையாற்ற வருபவர்களை.
ஆனால், அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும், நீதி மன்றங்களும் என்ன செய்கின்றன... கிரிமினல் குற்றவாளிகளை வேட்பாளர்களாக நிறுத்துகின்றன.
தேர்தல் ஆணையமும் அந்த கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்காமல், கண்களை இறுக்க மூடிக் கொள்கிறது. நாட்டில் நேர்மையையும், நீதியையும் நிலை நாட்ட வேண்டிய நீதிமன்றங்களும் சமரச சன்மார்க்க இயக்க உறுப்பினர்களை போல, கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றன.
நேர்மையான வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க தயாராக இருக்கும் வாக்காளர்கள், கிரிமினல் குற்றவாளிகளை தேர்ந்தெடுக்க நிர்ப்பந்தித்தால், எப்படி வாக்கு சாவடிக்கு வருவர்? எந்த குற்றவாளிக்கு வாக்களிப்பர்?
அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் மூன்றும், முதலில் தங்களை திருத்திக் கொள்ளட்டும்; அதன் பிறகு 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து சிந்தித்து பார்க்கலாம்.
நீங்கள் இதே ரீதியில் அலட்சியமாக இருந்தால், அந்த 40 சதவீதம், கூடுமே தவிர குறையவே குறையாது!
ஒத்துழைப்பரா கோவை மக்கள்?
கே.ராமசுப்ரமணியன்,
பிரான்சிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., வில் அண்ணாமலை
ஜெயிக்கக் கூடாது என, சொந்த கட்சியினர் சிலரே வேலை செய்து வருவது, அனைத்து
மக்களுக்கும் தெரிந்து விட்டது.
கோவையில் இவர் வெற்றி பெற்று
விட்டால், தங்களது அரசியல் எதிர்காலம் பாழாய் போகும் என, பா.ஜ., -
அ.தி.மு.க., இன்னும் பல, 'நலம்' விரும்பிகள், கங்கணம் கட்டிச்
செயல்படுவதாகத் தெரிகிறது.
எல்.முருகனுக்குப் பிறகு, உண்மையிலேயே
கட்சிக்காக ராப்பகலாய் உழைக்கும் ஒரே நபர், அண்ணாமலை தான் என்பது, தமிழக
மக்களுக்கு மிக நன்றாகத் தெரிந்தும், உள்ளடி வேலைகளைத் தாண்டி அவர்,
கோவையில் வெற்றி பெற்று எம்.பி.,யாவாரா என்பது குறித்து யோசிக்க வேண்டி
உள்ளது.
எம்.பி.,யாகி விட்டால், தமிழகம் முழுக்க இருக்கும்
பிரச்னைகளைத் தானே முன்வந்து தீர்த்து வைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை
என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் வளர்த்துள்ளார். கோவை மக்கள் தான் இதற்கு
ஒத்துழைக்க வேண்டும்!
ஆசையை துாண்டி ஏமாற்றி விடுபவர் இவர்!
சுதாகர்,
மல்லுார், சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'மத்தியில் 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றவுடன், தமிழகத்தில் நிதி நிலைமை
சீராகும். சீரானவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்'
என்று, ஓட்டுகளை அள்ள, ஆசையைத் துாண்டி விடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
மாநில அரசின் நிதி நிலைமை சீராக்க வேண்டிய கடமை, மாநில அரசுக்கே உள்ளது.
நிதி
நிலைமை சீராக வைக்க சீர்திருத்தம் நடவடிக்கை மேற்கொள்ள வல்லுனர் குழுவை
அமைக்காமல், உரிமை தொகை, விடியல் பயணம் போன்ற இலவசங்கள் தந்து மக்களை
ஏமாற்றி வந்தால், நிதி நிலைமை எப்படி சீராக இருக்கும்?
ஒருவரை
ஏமாற்ற நினைத்தால், அவரது ஆசையை துாண்டி விட வேண்டும் என்ற பாணியில் பேசி,
வாக்குகளை அள்ள நினைக்கிறார் ஸ்டாலின். ஒவ்வொரு திட்டத்திற்கும், நிதி
பற்றாக்குறையால், பல லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டு, நிதி நிலைமை மோசம்
செய்து விட்டு, கடந்த ஆட்சியின் மீது குறை கூறுகிறார்.
முறையான
வரியை, நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து வசூலிக்காமல், பொய்க்
கணக்கு எழுத லஞ்சம் வாங்கி, ஊழலில் திளைத்தால், நிதி நிலைமை எப்படி
சீராகும்?
'எனக்குத் தெரிந்தே, 30,000 கோடி ரூபாய் ஊழல்
செய்துள்ளனர்' என அமைச்சர் ஒருவர் சொல்லப் போக, அவரை 'டம்மி' இடத்திற்கு
மாற்றி, 'அழகு' பார்த்துவிட்டார் ஸ்டாலின். சாத்தியம் இல்லாத, சிலிண்டர்
விலை, 500 ரூபாய்; பெட்ரோல் விலை 50 ரூபாய் என்று, வெற்று பொய்
வாக்குறுதிகளை நம்பி ஓட்டு போட்டால், நாம் வீணாகி விடுவோம்!
சட்டப்பிரிவு 123(1) மற்றும் 171பி தெரியுமா ?
ஸ்ரீதரன்,
விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஓட்டு போட பணம்
கொடுப்பது மற்றும் வாங்குவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு
123(1) மற்றும் இந்திய கிரிமினல் சட்டப் பிரிவு 171பி ஆகியவற்றின் கீழ்
தண்டனைக்கு உரியவை.
உழைக்காமல் கிடைக்கும் பொருள், சேவை, பணம் ஆகியவற்றின் மீது மனித மனம் ஆசைப்படுகிறது.
'நாமளா
போயி யாரிட்டயும் கையேந்தல, அவியளா தேடி வந்து கொடுக்காக... அவனவன்
கோடிக்கணக்குல கொள்ள அடிக்கான், நாம என்ன அம்புட்டு குத்தமா செய்யிறோம்...
இப்ப கொடுக்குறதோட செரி, இனி அஞ்சு வருசம் கழிச்சி தான் வருவாய்ங்க...
அவங்க ஊட்டு காசையா கொடுக்க போறாங்க; - கொள்ள அடிச்ச காசிதானுங்களே...
நாம
வாங்கினாலும், வாங்காம போனாலும் நம்ம பேர்ல எடுத்துடப் போறாங்க... இந்த
பணத்துல ஒத்த ரூபா கூட நாங்க எடுத்துக்க மாட்டோம்;- உண்டில போட்டிருவோம்...
நாம ஒருத்தர் மட்டும் வாங்காம விட்டுட்டா, தேர்தல் நியாயமா நடந்துட
போவுதா...' என, ஏராளமான சமாதானங்கள் முந்திக் கொள்கின்றன.
வீடு தேடி
கொடுக்கும் ஒருவரிடமும், விடாமல் வாங்கி, தாம் விரும்பும் நபருக்கு
சின்னத்துக்கு மட்டும் வாக்களிக்கும் போக்கு ஒரு புறம்.
கொஞ்ச நியாய
தர்மம் பார்ப்போர், கை நீட்டி வாங்கிய நன்றிக்காக, வீட்டில் உள்ள
ஒவ்வொருவரும் ஒரு சின்னத்துக்கு ஓட்டு போடுவர். கடும் வெயில் உள்ளிட்ட
காரணங்களை காட்டி, வாங்கியும் வாக்களிக்காதோர் அடுத்த வகை.
சட்டத்தால்
மட்டுமே நேர்மையை உருவாக்கி விட முடியாது; கைநீட்டி காசு வாங்கக் கூடாது
என்ற நேர்மை நம்மிடம் இருந்தால் தான், நேர்மையான அரசியல்வாதிகளைத்
தேர்ந்தெடுத்து, நம்மை ஆள்பவர்கள் என ஆக்க முடியும்.

