sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

எப்படி நன்றிக்கடன் செலுத்த முடியும்?

/

எப்படி நன்றிக்கடன் செலுத்த முடியும்?

எப்படி நன்றிக்கடன் செலுத்த முடியும்?

எப்படி நன்றிக்கடன் செலுத்த முடியும்?

5


PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 14, 2024 12:00 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெ.ஆத்மநாதன், சூரிக், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:இந்திய பெருங்கண்டத்தையே உலுக்கிப்போட்ட வயநாட்டு சோக மீட்புப் பணியை முடித்து, ராணுவத்தினர் தங்கள்பணியிடம் திரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரவு, பகல் பாராது, இருக்க இடத்தையும்பொருட்படுத்தாது, தங்கள் இன்னுயிரைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல், மக்களைக் காக்க மகத்தான பணி புரிந்து திரும்பும் அந்த சகோதரர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!

இப்படிப் புயல், வெள்ளம், சுனாமி, நிலச்சரிவு போன்ற பேரிடர்களில் சிக்கித் தவிக்கும்போது நமக்குப் பாதுகாப்பையும்,அவற்றின் கொடூர பிடிகளிலிருந்து நம்மை விடுவிக்கவும் உழைக்கும் அவர்களை, மற்ற நேரங்களில் நாம் அவ்வளவாக நினைத்துப் பார்ப்பது கூட இல்லை.

அதற்காக அவர்கள் கவலைப்படுவதும் இல்லை.

அவ்வளவு ஏன்... கொடி நாளில் எத்தனைபேர் தாராளமாக நிதி வழங்குகிறோம்?

ரிலீஸ் படங்களைப் பார்க்கவும், கிரிக்கெட் மேட்சைக் காணவும், ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் பலர், கொடி நாளை நினைவு கூர்வரா என்பது சந்தேகமே!

பள்ளி, கல்லுாரி விழாக்களில், திறப்பு விழாக்களில், அரசியல்வாதிகள் மற்றும் சினிமா நடிகர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நம் ராணுவத்தினருக்கு வழங்கலாமே! அவர்களை அழைத்து கவுரவிக்கலாமே!

ஆபத்தில் உதவுபவர்களுக்கு இதை விட நாம் வேறு எப்படி நன்றிக்கடன் செலுத்த முடியும்?



கும்பி எரியுது; குடல் கருகுது!


எஸ்.சயீது மாலிக், துபாய், சவுதி அரேபியாவிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: உரிய ஊதியம் கேட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர்,வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், பதவி உயர்வு தராமல்,தொகுப்பூதியம் கொடுக்கும்அளவுக்கு, அரசு ஊழியர்களுக்கு பழையஒய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு, அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இந்நிலையில், பார்முலா -4 கார் பந்தயம் தேவையா?

'உங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்காக கார் பந்தயம் நடத்தினாலும், அதை இருங்காட்டு கோட்டை, சோழவரத்தில் உள்ள பந்தய திடலில் நடத்தலாமே! மக்கள் பயணிக்கும் சாலையை மறித்து, யாரை மகிழ்விக்க இந்த பந்தயம்?' என நியாயமான வினாக்களைத் தொகுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.

'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்கிறார் ஐயன் திருவள்ளுவர்.

அந்த வகையில், சீமான் வினவியுள்ள வினாக்கள் ஒவ்வொன்றும் அர்த்தம் நிறைந்தவை; பொருள் பொதிந்தவை.

கடந்த, 1967ல் தமிழகத்தில்,பக்தவத்சலம் தலைமையில், காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்த போது, தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுதும் ஒரு பயங்கரமான அரிசி பஞ்சம் வந்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எல்லையில்சீனாவும், பாகிஸ்தானும்வேறு வாலை ஆட்டிக்கொண்டு, இந்தியாவை தாக்க முயன்று கொண்டுஇருந்தன.

கோடைக் காலத்தில்,தமிழக அமைச்சர்கள் சில நாட்கள் ஊட்டிக்கு சென்று ஓய்வெடுப்பது வழக்கம்.

ஆனால், 1967ல் எந்த அமைச்சரும் ஊட்டிக்கு சென்று ஓய்வெடுத்ததாக தகவல் இல்லை.

சமயம் பார்த்து, சட்டசபை பொதுத்தேர்தலும் வந்து சேர்ந்தது.

பஞ்சத்தையும், படையெடுப்பையும் முன்வைத்து, தேர்தலை ஒத்தி வைக்க முயலாமல், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேர்தலை எதிர்கொண்டது.

அந்த நேரத்தில், திராவிடமுன்னேற்ற கழகம் வீதிகள் தோறும் அச்சிட்டு ஒட்டிய சுவரொட்டிதான், இக் கடிதத்தின் தலைப்பில் நீங்கள் பார்த்த, 'கும்பி எரியுது! குடல் கருகுது! உனக்கு (தமிழக அமைச்சர்களுக்கு) குளுகுளு ஊட்டி ஒரு கேடா?' என்ற வாசகங்கள் கொண்ட தேர்தல் பிரசார சுவரொட்டி.

சீமான் சுட்டிக் காட்டியுள்ள கோளாறுகளையும்,அதை கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல், அவர்கள் விருப்பத்திற்காக நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்தையும் இணைத்து பாருங்கள்; உங்களுக்கே தெளிவாக விபரம் விளங்கும்.



அண் ணா வழி நடப்பரா?


அண்ணா அன்பழகன்,அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 1967, மார்ச் 6ல் தி.மு.க., முதன் முதலாக ஆட்சி பிடித்தபோது, அண்ணாதுரை முதல்வரானார்.

அவர் செய்த மகத்தான செயல்களைப் பாருங்கள்:

பதவியேற்பு விழாவுக்கு,தானும் செல்லப்போகிறோம் என்ற ஆசையில் தயாராகிக் கிளம்பி நின்ற மனைவி ராணியை கண்டுகொள்ளாமல், வீட்டில் விட்டுச் சென்றார்;உறவினர்கள் யாரும் பதவியேற்பு விழாவுக்கு வரக் கூடாது என தடை போட்டார்.

பதவி ஏற்றதும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரதுவீட்டுக்கு புதிதாக சோபா, நாற்காலிகள் வந்திறங்கின;அனைத்தையும் திருப்பி அனுப்பி விட்டார். மனைவி ராணியிடம், 'முதல்வர் பதவி நிரந்தரமல்ல. நாளைக்கே ஆட்சி போனால், இதையெல்லாம் எடுத்துச் சென்று விடுவர். திடீர் வசதிகளை இழக்கும்போது மனசு வலிக்கும்; இருக்கிற வசதியே போதும்' என்றார்.

தி.மு.க., உறுப்பினர் ஒருவர், போலீசிடம் தான் சொன்னதைச் செய்ய வேண்டும் என மல்லுக்கு நின்றார்; 'அதிகாரிகளை நேரடியாக அணுகி காரியம்சாதிக்கும் முறை, நம் ஆட்சியில் இருக்கக் கூடாது' என அறிவித்து, போலீசிடம், 'இப்படி ஒருவர் செய்தால் நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்களோ,அதே போல் தி.மு.க., வினர் மீதும் எடுங்கள்; இதற்காக என்னிடம் அனுமதி வாங்கத் தேவையில்லை' என்றார்.

ஒரு கோவிலில், அறங்காவலர் நியமனத்தில் சர்ச்சை எழுந்த போது, 'கட்சிக்காரர்களை கோவில் அறங்காவலர்களாக போடக்கூடாது' என்று உத்தரவிட்ட தோடு, 'கட்சிக்காரர்களுக்கு கோவில் ஐதீகம், விதிமுறைகள் தெரியாது; இது கோவிலுக்கு இழப்பு. கட்சிக்காரர்கள் அறங்காவலர்கள் ஆனால், அவர்கள் கோவிலில் கொடுக்கும் பொங்கலை சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கி விடுவர்; இது கட்சிக்கு இழப்பு' என்றார்.

ஒருமுறை, பள்ளி ஆசிரியராக இருந்த செ.அரங்கநாயகம், 'தி.மு.க.,சார்பு ஆசிரியர்களை ஒருங்கிணைத்து ஒரு சங்கம்ஆரம்பிக்கலாமா?' என்று கேட்டபோது, 'கல்வி, அனைவருக்கும் பொதுவானது. அதில் அரசியலை புகுத்தக் கூடாது' என்றார்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

வேதவாக்காக நிலைத்திருக்க வேண்டிய அண்ணா முன்மொழிந்த உறுதி மொழிகள், தொண்டர்கள் வழிமொழியாமல்,காற்றோடு கரைந்து, காணாமல் போயின.

காலம் தாழ்த்தினாலும், அண்ணாதுரையின் இது போன்ற கட்டளைகள் மறந்து போயிருந்தாலும், இனியாவது மீண்டும் நினைவுக்கு எடுத்து வந்து, தி.மு.க.,வினர் நடைமுறைப்படுத்தினால், தி.மு.க., ஜொலிக்கும்!








      Dinamalar
      Follow us