/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
இளம் குற்றவாளிகளை தடுப்பது எப்படி?
/
இளம் குற்றவாளிகளை தடுப்பது எப்படி?
PUBLISHED ON : ஜூலை 23, 2024 12:00 AM

அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில், 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த படுகொலைகளுக்கு பின், தமிழகத்தில் எங்கும் நீக்கமற கலந்துள்ள போதைப் பொருட்களும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.
அந்த வகையில், சில நாட்களுக்கு முன் கடலுார் நெல்லிக்குப்பம் அருகில் உள்ள காராமணி குப்பத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். ஒருவர் போதையில், அது மது அல்லது கஞ்சாவாக இருக்கட்டும். அதை உட்கொண்டதும் மிருகமாக மாறுவதால், எந்தவொரு கொடிய குற்றங்களையும் செய்ய துணிந்து விடுகிறார்.
நெல்லிக்குப்பம் மூவர் கொலையில் கூட சங்கர் ஆனந்த் என்ற குற்றவாளி, கொலை செய்ய செல்வதற்கு முன், கூட்டாளி சாகுல் ஹமீதுடன் மது குடித்து, கஞ்சா அடித்துவிட்டு தான் சென்றுள்ளார். இதன் காரணமாகவே, 10 வயது சிறுவனை கூட ஈவு, இரக்கமின்றி கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.
இந்த கொலை வழக்கை விரைவாக விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்த கடலுார் மாவட்ட காவல் துறையினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதே நேரத்தில், குற்றவாளிகள் இருவருக்கும் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது, தற்போது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறிய புள்ளி விபரங்கள் உண்மை என்றால், ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று கொலைகள் நடக்கின்றன. இதில் பெரும்பாலான கொலைகளை, குற்றவாளிகள் போதையில் தான் செய்கின்றனர்.
எனவே, போதையில்லா தமிழகம் உருவாக, முதல்வர் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், வீட்டுக்கு வீடு இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்க முடியாது.
சபாஷ் அரசே!
வி.சி.
கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்துார், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை
அனைவரும் விரும்பி உண்ணும் அன்றாட உணவு என்றாகி விட்டது, பானிபூரி. அதில்,
பெரிய அளவில் சுகாதார கேடு இருந்தது உண்மை.
அதற்கு தற்போது, பானிபூரி கடைகளுக்கு மருத்துவ சான்று, உரிமம் கட்டாயம் என்ற, உணவு பாதுகாப்பு துறையின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
உணவு
பாதுகாப்பு துறை சார்பில், தெருவோர உணவக உரிமையாளர்கள் மற்றும்
பணியாளர்களுக்கான மருத்துவ முகாம், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட
வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நடைபெற்றது.
இதில், 627 தெருவோர
உணவக வியாபாரிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு, தோல் தொடர்பான பிரச்னை ஏதேனும்
உள்ளதா என்பது போன்றவற்றை, மருத்துவ குழுவினர் பரிசோதித்து, பதிவு உரிமம்
மற்றும் புதுப்பித்தல் சான்றிதழ்களை வழங்கியுள்ளனர்.
மேலும் சென்னை
முழுதும் மண்டல வாரியாக முகாம் நடத்தப்படும் என்றும், சுகாதாரமான முறையில்
விற்பனை செய்வது குறித்த பயிற்சி, பதிவு உரிமம் பெறுதல், மருத்துவ பரிசோதனை
ஆகியவை நடத்தப்படும் என, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி
கூறியுள்ளார்.
தமிழக அரசின் இது போன்ற, சுகாதாரச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியன.
மேலும்,
பானிபூரி வியாபாரிகளுக்கு அரசே, பூங்காக்களின் ஒரு பகுதியில், சிறுகடையை
ஒதுக்கி, வியாபாரம் செய்ய அனுமதிக்கலாம். இதனால், தெருவோர சாக்கடைகள்
அருகில் இயங்கும் பானிபூரி கடைகள் மறைந்து, மக்களுக்கும் சுகாதாரமான
பானிபூரி கிடைக்கும்; பானிபூரி வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்காது.
காஷ்மீரில் தேர்தல் நடக்குமா?-------------
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த மூன்று
ஆண்டுகளில் மட்டும், ஜம்மு பிராந்தியத்தைச் சேர்ந்த ராணுவத்தினர் பலர்,
பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். 40 கி.மீ., காடுகளில்
கிட்டத்தட்ட 30 பயங்கரவாதிகள் பல்வேறு முனைகளில் குழுவாக பதுங்கி இருந்து,
அதிநவீன ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர்.
'காஷ்மீர்
பூகோள அத்து படியான அவர்களுக்கு, அடர்த்தியான மலைக்காடுகள் வசதியாக உள்ளன'
என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2018 ஜூன் முதல் ஜம்மு - காஷ்மீர்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. ஜம்மு - காஷ்மீர் யூனியன்
பிரதேச துணைநிலை கவர்னரின் அதிகாரங்களை அதிகரித்து, மத்திய அரசு சமீபத்தில்
விதிகளை திருத்தியது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி வரும் செப்.,
30க்குள் ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் மத்திய
அரசு, 'துணை நிலை கவர்னரின் அதிகாரங்களை இந்த நேரத்தில் அதிகப்படுத்தியது?'
ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சட்டசபை தேர்தல், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்தப்படுமா என, அம்மாநில மக்களிடமும் சந்தேகம் தோன்றியுள்ளது.
'மத்திய
அரசு, பயங்கர வாதிகள் தாக்குதல் வழக்கமான ஒன்று தான் என, சாதாரணமாக
நினைக்கிறது. பயங்கரவாதிகளின் தாக்கு தல்களை எதிர்கொள்ள, கவனமாக யுத்திகளை
மறு ஆய்வு செய்து, மதிநுட்பத்துடன் திட்டங்களை வகுக்க வேண்டும். வீராவேசமாக
பேசி, துணிச்சலான நம் ராணுவத்தினர் பலியாக விடக்கூடாது' என்று காங்கிரஸ்
தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
பொதுவாக,
ராணுவ நடவடிக்கைகளை விளம்பரம் செய்யக்கூடாது. அதேநேரம், எல்லைகளில்
பயங்கரவாதிகள் கொட்டமடிக்க முடியாது என்று மக்கள் நம்பும் வண்ணம், ராணுவம்
மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இதை மத்திய அரசும், ராணுவ
அமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்.-----------------
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!
என்.தொல்காப்பியன்,
மதுரை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' தேர்வை நாம்
கூட்டாக எதிர்ப்போம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அறைகூவல்
விடுத்திருக்கிறார் ராகுல்.
'கிராமப்புற மாணவர்கள் டாக்டர் ஆகத்
தடைக் கல்லாக நீட் தேர்வு இருக்கிறது; இது ஏழை மாணவர்கள் டாக்டர் ஆகும்
உரிமையைப் பறிக்கிறது' என, நீண்ட வியாக்கியானம் செய்திருக்கிறார்.
'நீட்' தேர்வு வேண்டும் என்று வாதாடியவர், காங்., மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவி நளினி. அப்படியெனில், அவர் குற்றவாளி தானே?
தன் மனைவி சார்பில், சிதம்பரம் மன்னிப்பு கேட்பாரா? ராகுல் அதை வலியுறுத்துவாரா?
இருவருமே
செய்ய மாட்டார்கள். ஏனெனில், 'நீட்'டால் தான் கிராமப்புற மாணவர்களும்
டாக்டருக்குப் படிக்க முடிகிறது என்ற பேருண்மை, அவர்கள் இருவருக்குமே
தெரியும்.
அதை தெள்ளத் தெளிவாக விளக்கிக் கூற, பா.ஜ.,வுக்குத்
தெரியவில்லை. எனவே, இத்தகையவர்கள் அதை அரசியலாக்கி குளிர் காய்கின்றனர்.
மக்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும்.