/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாகி விடும்!
/
கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாகி விடும்!
PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM

ஏ.அப்துல் மாலிக், வேல்வார்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., முன்னாள் முதல்வர்களான பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் என இருவரிடமுமே பதவி ஆசையும், 'தான்' என்ற, 'ஈகோ'வும் தான் உள்ளதே தவிர, ஆளுமைத்திறன் துளி அளவும் இல்லை!
கடந்த 1972ல் தி.மு.க., ஆட்சியில் எங்கும் பசி, பஞ்சம் என்ற நிலையே இருந்தது. மக்கள் கப்பங்கிழங்கை காய வைத்து மாவாக அரைத்து, அதைக் காய்ச்சி குடித்து பசியாறிய கொடுமை எல்லாம் நிகழ்ந்தது.
அக்காலகட்டத்தில், தி.மு.க.,விலிருந்து விலக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அக்கட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்தி, இடைத்தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றதோடு அல்லாமல், 1977ல் வந்த பொதுத் தேர்தலில் மக்களின் பேராதரவைப்பெற்று, ஆட்சியைப் பிடித்தார்.
அவரது ஆளுமைத்திறன், அவரது இறுதிக்காலம் வரை தோல்வியே இல்லாமல் ஆட்சிபுரிய வைத்தது.
அவருக்குப்பின், எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகிக்கும், ஜெயலலிதாவிற்கும் போட்டி ஏற்பட்டு, அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்ட போது, 'தானே எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு' எனக் கூறி, சட்டசபையில், 28 இடங்களை பிடித்து, தன் ஆளுமைத்திறனை வெளிப்படுத்தினார், ஜெயலலிதா.
ராஜிவ் கொலை செய்யப்பட்டதை அடுத்து, தி.மு.க., ஆட்சி களைய, 1991ல் நடந்த பொதுத்தேர்தலின்போது, மக்களின் பெறும் ஆதரவோடு ஆட்சியை பிடித்தார், ஜெயலலிதா.
பின், இரு கழகங்களும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்தாலும், தி.மு.க.,விற்கு தன் மரணம் வரை சிம்ம சொப்பனமாகவே இருந்தார், ஜெயலலிதா.
என்னதான் அவர் மீது ஊழல் வழக்குகள் நடந்தாலும், ஆளுமைத் திறனோடு, 'மக்களால் நான்; மக்களுக்காகவே நான்' என்ற கோஷத்தோடு கட்சியையும், தொண்டர்களையும் கட்டுக்கோப்பாக வைத்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சிக்கு வர முடியாமல், அவர்களது பதவி ஆசைக்கு குழி தோண்டி புதைத்தார்.
இதெல்லாம், ஜெயலலிதாவின் ஆளுமைத் திறன் என்றால் மிகையாகாது; அவருடைய மறைவிற்கு பின், 'ஆளுமைத்திறன்' என்றால் என்னவென்று பழனிசாமியும் அறியவில்லை; பன்னீர்செல்வதிற்கும் புரியவில்லை.
தலைமை தள்ளாடுவதைப் பார்த்து, தொண்டர்கள் தவிக்கின்றனர்; கூட்டணி பலத்துடன் இருக்கும் தி.மு.க.,வோ வெற்றியை அறுவடை செய்யும் கனவில் மிதக்கிறது.
அ.தி.மு.க., கரைசேர வேண்டும் என்றால், பிரிந்தவர்கள் ஒன்றுசேர வேண்டும்; ஒற்றுமை எனும் சிறு ஆயுதம் தான், ஆளுமைத் திறனை அதிகரிக்கச் செய்யும் வஜ்ராயுதம்!
இதை, பழனிசாமியும், பன்னீர்செல்வமும் புரிந்து கொள்ளாவிட்டால், கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயம் போல் அ.தி.மு.க., காணமல் போய்விடும்!
அரசு பரிசீலிக்குமா?
சி.சிவ ஆனந்தன்,
சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு
போக்குவரத்து நிறுவனங்கள் புதிய பேருந்துகளை வாங்குவதும், ஓரிரு
ஆண்டுகளிலேயே அவை பயனின்றி போவதும் வழக்கமாக உள்ளது.
தனியார் பேருந்துகள் மட்டும் நன்கு பராமரிக்கப்பட்டு பல ஆண்டுகள் உழைப்பது எப்படி?
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் ஓடிய ஏசி வால்வோ பேருந்துகள் என்ன ஆயின என்றே தெரியவில்லை.
போக்குவரத்து
பணிமனை ஊழியர்கள் நியமனம் உட்பட தரமற்ற உதிரி பாகங்கள் கொள்முதல் என பல
சர்ச்சைகள் முடிவு இல்லாமல் தொடர்ந்து வருவது ஒருபுறம் இருந்தாலும்,
சாதாரண வீட்டு உபயோகப் பொருட்களுக்கே இத்தனை ஆண்டுகள் என, பராமரிப்பு
ஒப்பந்தத்தை நிறுவனங்கள் வழங்குகின்றன.
அப்படி இருக்கும்போது, பேருந்துகள் மட்டும் எப்படி சில ஆண்டுகளிலேயே பயன்பாட்டுக்கு தகுதியில்லாமல் போய் விடுகின்றன?
பேருந்து
தயாரிப்பு நிறுவனங்களிடம், இதுபோன்று ஆண்டு ஒப்பந்தம் ஏற்படுத்திக்
கொண்டால் பேருந்துகள் என்றும் புதிது போல் காட்சி அளிக்கும், செலவுகளும்
வெகுவாகக் குறையும்; உதிரி பாகங்கள் தரமானவையாக இருக்குமே!
அரசு பரிசீலிக்குமா?
பன்னீர்செல்வம் பேசலாமா?
டி.ஈஸ்வரன்,
சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறைந்த தமிழக
முதல்வர் அண்ணா துரை நினைவிடம் அருகில், சமீபத்தில், நிருபர்களுக்கு பேட்டி
அளித்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அண்ணாவின் கொள்கைகளை
கடைப்பிடித்திருந்தால், அ.தி.மு.க.,விற்கு தோல்வியே ஏற்பட்டு இருக்காது.
'ஒன்றிணைந்து செயல்பட்டு ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைத்தே தீருவோம்.
'இதை, எங்களை எல்லாம் ஆளாக்கிய அண்ணாவின் நினைவாக அவரது நினைவிடத்தில் சபதம் ஏற்கிறோம்' என, வீர உரை ஆற்றியுள்ளார்.
தமிழக
முதல்வராக அண்ணாதுரை பதவி ஏற்றபோது, 'மக்களின் எண்ணத்தையும்,
விருப்பத்தையும் நிறைவேற்ற ஊழல் மற்றும் லஞ்சமற்ற ஆட்சி அமைப்பதுதான் என்
கொள்கை' என்றார்.
இவரது கொள்கையை கடைப்பிடித்தவர் எம்.ஜி.ஆர்.,
ஒருவர் மட்டும் தான்; அதனால் தான் அவரது ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க.,
தோல்வியை சந்திக்கவில்லை.
இன்று அண்ணாதுரையின் கொள்கையை கடைப்
பிடிக்க சபதம் மேற்கொண்டுள்ள பன்னீர்செல்வமோ, தான் தமிழக முதல்வராக இருந்த
காலத்தில், தன் சொந்த ஊரான தேனியில் பழங்குடியினர் ஆணைய விதியை மீறி, 40
சென்ட் பஞ்சமி நிலத்தை வாங்கியுள்ளார்.
இதுகுறித்து பட்டியல்
மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு புகார் செல்லவே, சமீபத்தில், அந்த நில
பட்டாவை ரத்து செய்ய உத்தரவிட்டது ஆணையம்.
அரசு விதியை மீறி நிலம் வாங்குவதுதான், அண்ணாதுரையின் கொள்கையா?
முதல்வர்
ஆவதற்கு முன்பும், பின்பும் அண்ணாதுரையின் சொந்த ஊரான
சின்னகாஞ்சிபுரத்தில், அவருக்கு 4 சென்ட் நிலம் மட்டும்தான் சொந்தமாக
இருந்தது.
ஆனால், பன்னீர்செல்வம் பதவிக்கு வரும் முன், வந்த பின் அவரது சொத்து மதிப்பு வித்தியாசம் என்ன?
அண்ணாதுரையின் மனைவி, அரசு சோபாவில் ஒருமுறை அமர ஆசைப்பட்ட போது, 'இந்த சுகம் நிரந்தரமானது அல்ல; இதற்கெல்லாம் ஆசைப்படக் கூடாது.
'பின்னாளில்
நான் பதவியில் இருந்து இறங்கிவிட்டால், இது எல்லாம் பறிபோய்விடும்' என,
ஒரு சிறிய சோபாவில் அமர்வதற்கு கூட, தன் மனைவியை அனுமதிக்கவில்லை
அண்ணாதுரை.
ஆனால், பன்னீர்செல்வம் முதல்வரான பின், அரசு விதியை மீறி
பஞ்சமி நிலத்தை வாங்கியது மட்டுமல்லாமல், தன் மனைவி மற்றும் வாரிசுகளுக்கு
வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளார். அதற்கான வழக்கில் பெரிய
சட்டப்போராட்டமே நடத்தி வரும் இவர், அண்ணாதுரை கொள்கை குறித்து பேசலாமா?
இதில்,
'அண்ணாதுரையின் கொள்கையை கடைப்பிடித்து, ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்'
என சபதம் செய்துள்ளதை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது!
பதவிக்காக முட்டி மோதும் பன்னீர்செல்வம் இன்னும் என்னவெல்லாம் கதையளக்கப் போகிறாரோ!