PUBLISHED ON : ஜூன் 19, 2024 12:00 AM

அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக இடைத்தேர்தல்களில், ஆளுங்கட்சி தான் வெற்றி அடைவது வழக்கம். அதிலும் நம் திராவிடக் கட்சிகளின் திருமங்கலம் பார்முலா முதல், கடைசியில் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தல் பார்முலா வரை, எப்படி எல்லாம் வாக்காளர்களை விலை பேசி வாங்கி ஓட்டுகளை குவிக்க முடிந்தது என்பதை நாம் அறிவோம்.
அந்த வகையில் தற்போது, விக்கிரவாண்டி இடைத் தேர்தலை, அ.தி.மு.க.,வும், அதன் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான தே.மு.தி.க.,வும் புறக்கணித்து விட்டதால், மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
இந்த தேர்தலில், அ.தி.மு.க., களம் கண்டிருந்தால், ஒவ்வொரு ஓட்டின் விலையும் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் வரை விலை போய் இருக்கும்.
ஈரோட்டில் வாக்காளர்களை பரிசு மழையால் குளிப்பாட்டி, தினசரி கறி விருந்து அளித்து, வாக்காளர்களை பட்டியில் அடைத்து பாதுகாத்த மாதிரி, காட்சிகள் அரங்கேறி இருக்கும். நல்லவேளை அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இதனால், விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு, குறைந்த அளவில் தான் பணம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
ஏனெனில், சீமானின் நாம் தமிழர் கட்சி எப்போதும், பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குவது கிடையாது.
தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பா.ம.க.,வும், தன் ஜாதிய ஓட்டு வங்கியை மட்டுமே நம்பி தேர்தலில் போட்டியிடுவதால், அதுவும் பணத்தை அதிகமாக செலவு செய்ய வாய்ப்பு இல்லை.
சென்ற லோக்சபா தேர்தலில், இந்த தொகுதியில் அ.தி.மு.க.,வுக்கு, 65,365 ஓட்டுகள் கிடைத்தன. தி.மு.க.,வுக்கு, 72,188 ஓட்டுகள் கிடைத்தன. வெறும், 6,000 ஓட்டுகள் தான், தி.மு.க., அதிகமாக பெற்று இருந்தது. பா.ம.க., 32,198 ஓட்டுக்கள் பெற்று இருந்தது.
இப்போது, அ.தி.மு.க.,வின் வன்னியர் ஓட்டுகள் மற்றும் மற்ற ஜாதியினர் ஓட்டுகள், அதிகளவில் பா.ம.க.,வுக்கு விழும் பட்சத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இடைத்தேர்தலில், ஆளுங் கட்சி தோல்வி அடைய வாய்ப்பு உண்டு.
அதே நேரத்தில் அ.தி.மு.க.,வின் ஓட்டுகளில் பெரும்பகுதி, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மாறினால் அது, தி.மு.க., எளிதாக வெற்றி பெற உதவியாக மாறி விடும். பா.ம.க.,வுக்கு பிரச்னையாகி விடும்.
ஆக மொத்தம், கூர்ந்து நோக்க வேண்டிய தேர்தல் ஒன்று வருகிறது!
'டர்ன் கோர்ட்' பச்சோந்திகள் தேவையில்லை!
சுப்ர.
அனந்தராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டாக்டர்
தென்காசி கணேசன் என்ற வாசகர் எழுதியிருந்த கடிதம், உண்மை நிலவரத்தைத்
தெரிவிக்கிறது.
பா.ஜ., உருவாவதற்கு முன், ஜன சங்கம் என்ற பெயருடன்
இயங்கி வந்த காலத்தில், நம் மாநிலத்தில், ஜனா கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு
மனிதர், அக்கட்சியின் ஒரே ஒரு பிரதிநிதியாக, ஒரு சில தமிழர்களால் மட்டுமே
அறியப்பட்டிருந்தார்.
அப்போது முதலே, ஜன சங்கமாகட்டும், பெயர்
மாறிய பா.ஜ., கட்சியாகட்டும், சட்டசபையிலோ, லோக்சபாவிலோ, ஒரு இடத்தைக் கூட
ஜெயித்தது இல்லை. இது, அந்த 'தேசிய' கட்சியின் சோக வரலாறு.
அதே கதை
தான், தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும்!
ஜனசங்கம் என்பது, வெறும் 'லெட்டர் பேடு' கட்சியாக தான் இருந்தது.
கர்நாடகாவில், கட்சியை வளர்த்தவர் எடியூரப்பா. அக்கட்சியை ஆட்சியில் அமர வைத்து சாதனை புரிந்தார்.
அம்மாநிலத்தில்
ஹோ.வே.சேஷாத்ரி, அனந்தகுமார் போன்ற, ஜனசங்க மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,
தலைவர்கள் ஜனசங்கத்தையோ, பின்னால் வந்த பா.ஜ.,வையோ, ஒரே ஒரு எம்.எல்.ஏ.,
சீட்டில் கூட வெற்றி பெறச் செய்ய முடியவில்லை.
எடியூரப்பா,
பா.ஜ.,வின் கர்நாடக முதல்வர் ஆனதும், மேலிடத்து சட்டாம்பிள்ளைகளான சுஷ்மா
ஸ்வராஜ், எல்.கே.அத்வானி ஆகியோரின் நெருக்கடியால், பணபலம் மிகுந்த சுரங்கத்
தொழில் பெருச்சாளிகளான ரெட்டி சகோதரர்கள், வலுக்கட்டாயமாக கர்நாடக
பா.ஜ.,வில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, எடியூரப்பாவும், தன் இயற்கையான
நேர்மையை இழந்து, ஊழல்களில் மூழ்கி, சிறை செல்லவும் நேர்ந்தது.
இப்போது,
கர்நாடக காங்கிரசை, 'வார் ரூம்' தொழில்நுட்பம் மூலம் தேர்தலில் ஜெயிக்க
வைத்து, ஆட்சியில் அமர்த்தியவர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், இன்னாள்
காங்., - எம்.பி.,யுமான சசிகாந்த் செந்தில்.
தமிழரான சசிகாந்த்
செந்தில், சமீபத்தில், திருவள்ளூர் தனித் தொகுதியில் வேட்பாளராகக்
களமிறங்கி, மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த
வேட்பாளர் என்று பெயர் பெற்றுள்ளார்.
அது போலவே, ஐ.பி.எஸ்.,
அதிகாரியாக இருந்த அண்ணாமலை, பதவியை உதறி, பா.ஜ.,வில் சேர்ந்து, அக்கட்சியை
12 சதவீத ஓட்டு வாங்கும் அளவுக்கு தமிழகத்தில் உயர்த்திக் காட்டினார்.
ஆனால்,
இதே கட்சியில், ஜனா கிருஷ்ணமூர்த்தி துவங்கி, இல.கணேசன்,
பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ெஹச்.ராஜா, வானதி சீனிவாசன்
உள்ளிட்டோர், அ.தி.மு.க., விலிருந்து தாவிய நயினார் நாகேந்திரன்,
சமீபத்தில் ஒட்டிக் கொண்ட எம்.ஜே.அக்பர் ஆகியோரால், கட்சியை மிகப் பெரிய
அளவில் வளர்க்க முடியவில்லை. காரணம், சுயநலமும் இவர்களுடன் ஒட்டிக் கொண்டது
தான்.
பதவி மோகம் இவர்களை, ஒரு கட்டத்திற்கு மேல் கட்சியை வளர்க்க உதவாமல் தடுத்து விட்டது.
எப்போதுமே, கட்சி மாறித் தாவும், 'டர்ன் கோர்ட்' பச்சோந்திகளால் பா.ஜ., வளராது.
வானதி
சீனிவாசன் என்ற பணக்கார வக்கீலை விடவும், சந்தர்ப்பவாத தமிழிசை
சவுந்திரராஜனை விடவும், அ.தி.மு.க.,விலிருந்து சமீபத்தில் ஒட்டிக் கொண்ட
சுயநல அரசியல் வணிகர்களை விடவும், அண்ணாமலையே சிறந்த தலைவராக
தென்படுகிறார்.
வீராப்பு பேசுகிறாரே பழனிசாமி?
கோ.ராஜேஷ்
கோபால், மணவாளக்குறிச்சி, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: முன்பு தமிழகத்தில் அசைக்க முடியாத கட்சிகளாக இருந்த
காங்கிரசை, தி.மு.க., வீழ்த்தியது. அதன் பின், காங்கிரசை ஓரந்தள்ளி
தனிப்பெரும் கட்சியாக வளர்ந்தது தி.மு.க., பின், தி.மு.க.,வை எதிர்த்து,
அ.தி.மு.க.,வைத் துவக்கிய எம்.ஜி.ஆர்., அசைக்க முடியாத சக்தியாக
உருவெடுத்தார்.
அதன் பின் வந்த ஜெயலலிதாவும், அந்த கட்சியை அசைக்க
முடியாத கட்சியாக கட்டிக் காத்தார். ஆனால் இன்று அந்த கட்சியின் நிலை...?
கட்சியை பிளவடையாமல் காப்பது எப்படி என்பதை, அந்த கட்சியின் அன்றைய
தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் பாணியில் கற்றிருக்க வேண்டாமா?
எல்லாவற்றையும் தொலைத்து, இன்னும் வீராப்பு பேசுகிறார் பொதுச் செயலர் பழனிசாமி.
ஒரு
எதிர்க்கட்சி உறுதியாக இருந்தால் தான், அந்த நாட்டில், ஆரோக்கியமான
அரசியலும், மக்கள் பணியும் சிறப்பாக நடைபெறும். அதுவே நாட்டிற்கு நற்பயன்
தரும்.

