/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஜெ., ஹிந்துத்துவா தலைவர் இல்லையா?
/
ஜெ., ஹிந்துத்துவா தலைவர் இல்லையா?
PUBLISHED ON : ஜூன் 01, 2024 12:00 AM

கே.என். ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த ஹிந்துத்துவா தலைவராக இருந்தார்' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஏதோ, ஹிந்துத்துவா என்பது ஒரு கெட்ட வார்த்தை போலவும், ஜெயலலிதாவை அண்ணாமலை அவமானப்படுத்தி விட்டார் என்றும் கண்டன அறிக்கை விடுகின்றனர் அ.தி.மு.க., தலைவர்கள்.
தொலைக்காட்சிகளில் இது பற்றிய காரசார விவாதங்கள் வேறு நடந்தன. தமிழக அரசியல்வாதிகளுக்கு ஹிந்து மதம் பற்றிய சரியான புரிதல் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசியல்வாதி என்றால் மதச்சார்பின்மை என்று சொல்லியபடி, ஹிந்து மத நம்பிக்கைகளை இழித்தும், பழித்தும் பேசுவது தான் தமிழகத்தில் வாடிக்கை.
உண்மையை தானே சொன்னார் அண்ணாமலை? அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஜெயலலிதா ஆதரவு கொடுத்ததும், கரசேவைக்கு உதவியதும் உண்மை தானே! எம்.ஜி.ஆர்., காலத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த ஜெயலலிதா, 'அரசியல் சட்டம் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும்' என்று பேசியதையும், முதன் முதலாக மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்ததையும் அண்ணாமலை குறிப்பிடுகிறார்.
தன்னை ஹிந்துவாக ஒருவர் அடையாளப்படுத்திக் கொண்டால், மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பது, நம்ம ஊர் அரசியல்வாதிகளின் கணக்கு.
அரசியல் மேடைகளில், திரைப்படங் களில் ஹிந்து ஆன்மிக பெரியோர்களை இழிவாக சித்தரிப்பது, தமிழகத்தில் மட்டும் தான் நடக்கும். ஹிந்து மதத்தை இழிவாக பேசியதால் தான், வட மாநிலங்களில் தி.மு.க.,வை தேர்தல் பிரசாரத்துக்கு அழைக்க வில்லை என்பதை மறக்க வேண்டாம்.
பிரதமர் மோடி, தன்னை ஹிந்துவாக காட்டிக் கொள்வதில் பெருமையடைகிறார். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி என்பதே அவரின் கோஷம். சிறுபான்மை மக்களை ஓட்டு வங்கியாக மட்டும் கருதும் அரசியல் கட்சிகளின் சாயம் வெளுக்கும் காலம் வந்து விட்டது.
இனி யாரால் முடியும்?
வெ.சீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 2011க்குப்
பின், திரிணமுல் காங்., ஆட்சியில், மேற்கு வங்க மாநிலத்தில், சில
சமுதாயங்களை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அறிவித்தது.
'இது
அரசியல் சட்டத்திற்கு முரணானது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தை
கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு. எனவே, செல்லுபடியாகாது' என,
அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இது, திரிணமுல்
கட்சிக்கு மட்டுமல்லாமல், இட ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்யும் அனைத்து
கட்சிகளின் தலையிலும் வைக்கப்பட்ட குட்டு என்றே சொல்ல வேண்டும்.
மம்தா
அரசின் புதிய உத்தரவின்படி வழங்கப்பட்ட, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இதர
பிற்பட்ட வகுப்பினர் சான்றிதழ்கள், இந்த தீர்ப்பால் பாதிக்கப்படக் கூடும்
என கூறப்படுகிறது.
இட ஒதுக்கீடு என்ற பெயரில், ஜாதி, மத, இன, மொழி, இலவசங்கள், பிரிவினைவாத அரசியல் எல்லை மீறிச் சென்றபடி இருக்கிறது.
இட
ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட நோக்கம் என்ன; இவ்வளவு காலமாக அமல்படுத்தி அந்த
நோக்கங்களை நிறைவேற்றி விட்டோமா இல்லையா; இல்லை என்றால், ஏன்; தொடர
வேண்டிய அவசியம் உள்ளதா, இல்லையா; தொடர வேண்டுமென்றால் இன்னும் எத்தனை
ஆண்டுகள்...
அமலில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையில் மாறுதல்கள்
தேவையா; இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நல்ல வசதியோடு இருப்பவர்களுக்கும்
சலுகைகள் தொடர வேண்டுமா போன்ற காரணிகளை தீர ஆய்வு செய்து, அனைத்து
சமுதாயத்தினருக்கும், தேசத்தின் நலனிற்கும், முன்னேற்றத்திற்கும் ஏதுவான
முடிவை எட்ட வேண்டியது அனைவரின்கடமையும், பொறுப்பும் ஆகும்.
இதை
விடுத்து, பெரும்பாலான அரசியல் கட்சிகள், 'இட ஒதுக்கீடு முறை ரொம்ப
புனிதமானது; அதன் மேல் யாரும் கை வைக்கக் கூடாது; வைக்க விட மாட்டோம்;
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம்; எத்தனை
சதவீதம் மக்கள்தொகையோ, அத்தனை சதவீதம் உரிமை; நாட்டின் வளத்தில் இந்த
சமுதாயத்தினருக்கே முதல் உரிமை' என்றெல்லாம் பேசி வருவது, பிரசாரம்
செய்வது, ஓட்டு வங்கிக் கணக்கை மனதில் வைத்து தான்.
இதில், ஒதுக்கீட்டுக்குள் ஒதுக்கீடு, ஒதுக்கீடுக்கு வெளியே ஒதுக்கீடு போன்ற பித்தலாட்டங்கள் வேறு!
ஆட்சியைப்
பிடிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கில், 'எதை வேண்டுமானாலும் செய்வோம், அது
தேச நலனுக்கு, முன்னேற்றத்திற்கு எதிராக இருந்தாலும் கூட' என்ற
நிலைப்பாட்டோடு செயல்படும் அரசியல் கட்சிகளை மடைமாற்றித் திருத்தி, தேச
நலனுக்காக, மக்கள் நலனுக்காக மட்டும் உழைக்க வைக்க இனி யாரால் முடியும்
என்று தெரியவில்லை!
அவசிய கவனம் தேவை!
ராஜன்,
புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய ரயில்வே,
உலக அளவில் பல நாடுகளுக்கு போட்டியாக, பல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது.
இருப்பினும் சாதாரண மக்களும், நடுத்தர மக்களும் பயன்பெறும்வகையில்,
இன்னும் பல முன்னேற்றங்களை அடைய வேண்டியுள்ளது.
இன்று இயக்கப்படும்
பல ரயில்களில் உள்ள பிரச்னையே, முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவு
செய்யாத பயணியர் ஏறுவது தான். இதனால், பல ரயில்களில், பயணியரிடையே மோதல்
ஏற்படுகிறது.
நெரிசல் அதிகம் உள்ள தடங்களில், அந்தியோதயா போன்ற,
முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். ஏழை
மக்கள், அதிக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்வதை விட, குறைந்த கட்டணத்தில்
தங்கள் ஊருக்கு செல்வதையே விரும்புகின்றனர்.
முன்பதிவு வசதி உள்ள ரயில்களில், தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர், காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
முன்பதிவு
செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்தால், குறிப்பிட்ட தொகை பிடித்தம்
செய்யப்பட்டு, மீதம் உள்ள தொகை பயணியருக்கு திருப்பி அளிக்கப்படுகிறது.
அந்த இடங்கள், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு
அளிக்கப்படுகின்றன.
அதையும் தாண்டி, காத்திருப்போர் பட்டியலில்
அதிகம் பேர் காத்திருக்கின்றனர். பிரிமியம் தட்கல் முறையில் முன்பதிவு
செய்து, ரத்து செய்தால், எவ்வித கட்டணமும் திருப்பி அளிக்கப்படுவதில்லை.
ஆனால், அந்த இடங்கள் ரயில்களில் நிரப்பப்படுகின்றனவா எனத் தெரியவில்லை. தட்கல் முறையிலும், காத்திருப்போர் பட்டியல் உண்டு.
இது போன்ற, பயணியர் தொடர்பான முக்கிய விஷயங்களில் ரயில்வே நிர்வாகம் அவசிய கவனம் செலுத்த வேண்டும்.

