/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கார்த்தியின் பகல் கனவு பலிக்காது!
/
கார்த்தியின் பகல் கனவு பலிக்காது!
PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM

என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் கூனிக்குறுகி நிற்கக் கூடாது. 2026 சட்டசபை தேர்தலுக்கு பின், நாம் தமிழக அமைச்சரவையில் நிச்சயம் இடம் பெற வேண்டும்' என்று தன் அபிலாஷைகளை வெளிப்படுத்தி இருக்கிறார், சிவகங்கை காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம்.
இவரது பேராசையை பார்க்கும் போது, 'ஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் காங்கிரசின் 35 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், 96 எம்.எல்.ஏ.,க்களையே வைத்திருந்த தி.மு.க., ஐந்தாண்டு ஆட்சியை நடத்தி முடித்தது. அப்போது, 'மாநில அரசில் பங்கு வேண்டும்' என இங்குள்ள காங்., தலைவர்கள் கரடியாக கத்தியும், டில்லியில் சோனியாவுடன் பேசி அவர்களது வாய்க்கு பூட்டு போட்டு விட்டார், அப்போதைய முதல்வர் கருணாநிதி.
அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி அரசை, 'மைனாரிட்டி தி.மு.க., அரசு' என விமர்சித்தார். மேலும், 'தி.மு.க., அரசு ஐந்தாண்டு நீடிக்காது' எனவும் அடிக்கடி கூறுவார்.
ஆனால், அதை எல்லாம் முறியடித்து, தன் அமைச்சரவையில் காங்கிரசாருக்கு இடம் தராமலேயே, ஐந்து ஆண்டும் தி.மு.க., ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார், ராஜதந்திரி கருணாநிதி.
இத்தனைக்கும், அப்போது மத்தியில் காங்., தலைமையில் நடந்த மன்மோகன் சிங் அரசில், தி.மு.க.,வைச் சேர்ந்த பலரும் மத்திய அமைச்சர்களாக வலம் வந்தனர். ஆயினும், மாநில அரசில் காங்கிரசுக்கு பங்கு தர கருணாநிதி திட்டவட்டமாக மறுத்து விட்டார். மேலிடமும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இதனால், காங்., கட்சியின் மேலிட தலைவர்களான சோனியா, ராகுலுடன் நல்ல நட்புறவில் இருக்கும் ஸ்டாலினும், 2026 சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்றாலும், தன் அமைச்சரவையில் காங்கிரசுக்கு கண்டிப்பாக இடம் தர மாட்டார். எனவே, கார்த்தி சிதம்பரம் பகல் கனவுகள் காணாமல், யதார்த்தத்தை புரிந்து நடக்க வேண்டும்.
மக்கள் நலனுக்கு எதிராக தமிழக ஜனநாயகம் !
ரா.உதய்
பாஸ்கர், வழக்கறிஞர், சென்னையில் இருந்து எழுதுகிறார்: உலகின் முதல் பெரிய
ஜனநாயக நாடு, இந்தியா. இதற்கடுத்து தான் அமெரிக்க ஜனநாயகம். இந்திய
ஜனநாயகத்துக்கு எளிய இந்திய மக்கள் பக்குவப்படுத்தப்படவில்லை என்ற ஒரு
கருத்து இருந்தது. ஆனால், நாளடைவில் இந்திய மக்கள் இன்று மிகவும்
பக்குவப்பட்டவர்களாகி விட்டனர்.
ஆனால், மக்கள் நலனுக்கு எதிராக
தமிழக ஜனநாயகம் தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது.
ஜனநாயகத்திற்கு பின்னால் அரசியல் கட்சிகளின் சூதாட்டம். கூடம் சரியில்லாத
போது தமிழக மக்களின் உண்மையான ஓட்டுகள் சோரம் போய் விடுகின்றன.
தி.மு.க.,வின்
திராவிட மாடல் ஆட்சியில் நீட் உட்பட சி.ஏ.ஏ.,வை நடைமுறைப்படுத்த மாட்டோம்
என பல்வேறு தேச விரோத தமிழக விலக்கு சட்டசபை தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டுள்ளன.
இது தமிழக நலனுக்கு எதிரானது ஆகும். ஆனால்,
தி.மு.க.,வினை எதிர்க்கும் அ.தி.மு.க., - தி.மு.க.,வுடன் சேர்ந்து கொண்டு,
ஒட்டு மொத்த தமிழக சட்டசபையும் ஒன்றிணைந்து தமிழக நலனுக்கு எதிராக
செயல்படுகின்றனர்.
ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரு பார்லிமென்ட்
தொகுதியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், தி.மு.க.,வின் தேச விரோத தமிழக
விலக்குகளுக்கு உடந்தையாக நிற்கின்றன. ரஷ்யாவையும், சீனாவையும் பேச்சுக்கு
பேச்சு எடுத்துக்காட்டும் தமிழக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், மொழி
வெறி, இனவெறி கோட்பாடுகளுடன் இணைந்து சட்டசபையினில் ஓட்டளிக்கின்றன. தமிழக
அரசியல் கட்சிகள் இந்திய ஜனநாயகத்துக்கு பக்குவப்படவில்லையா. இது அரசியல்
மோசடிகளின் அறங்கேற்றக்களமா.
தமிழக மக்கள் தொடர்ச்சியாக திராவிட
கட்சிகளால் இந்தியாவில் சுய புறக்கணிப்பு செய்யப்படுகின்றனர். தி.மு.க.,
திராவிட மாடல் ஆட்சி என, மத்திய அரசுடன் திராவிட மோதல்களை தொடர்ச்சியாக
செய்து வருகின்றது.
தமிழகத்தின் வளர்ச்சி இதனால் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது. கஞ்சா, கள்ளச்சாராயம், படுகொலைகள் செய்ய தி.மு.க.,
ஆட்சி பெருவாரியாக தேர்தலில் வெற்றி பெறுகிறது. இது ஒரு ஜனாநாயக மோசடி.
அ.தி.மு.க.,
தனித்து நின்று தி.மு.க.,வை பெரு வெற்றி எனும் மாயையை உருவாக்கியது.
அ.தி.மு.க.,வின் ஜனநாயகத்திற்கு பக்குவப்படாத அரசியல் முதிர்ச்சியற்ற
போக்கு, இன்று தி.மு.க.,வின் வெற்றிகள்.
வன்னியர்களை பா.ம.க.,
ஜனநாயகப்படுத்துவதே இல்லை. தொடர்ச்சியாக தேர்தலில் பங்கெடுக்காமல் வன்னிய
மக்களை பின்னோக்கி இழுத்து செல்கிற ஜனநாயக துரோகத்தினை பா.ம.க., செய்து
வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வினை பெருவாரியாக வெற்றி பெறச்
செய்ததே பா.ம.க., தான்.
தி.மு.க., - எம்.பி.,க்கள்
பார்லிமென்ட்டில் வீண் என்பதால், தமிழக பிரதிநிதித்துவம் வீணானது. மேலும்
எதிர்காலத்திலும் வீணாகும். தி.மு.க., அரசின் நாளுக்கொரு மாயை திட்டங்கள்
பெரும்பான்மை மக்களுக்கு பயனில்லாதவை. ஒரு சோதனை ஆட்சி தமிழகத்தில்
வெற்றிகரமாக நடைபெறுகிறது.
சீமானா, திருமாவா, விஜயா?
பி.வி.ரவிக்குமார்,
சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த லோக்சபா
தேர்தலில், 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., படுதோல்வி அடைந்ததற்கான காரணத்தை,
நிர்வாகிகளிடம் கேட்டறிந்தாராம் பொதுச் செயலர் பழனிசாமி; அவர்களும், பலமான
கூட்டணி இல்லாததே காரணம் என கண்டு பிடித்து சொல்லிவிட்டார்களாம்.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான், சில தொகுதிகளில் டிபாசிட் தொகையை தக்க வைக்க முடிந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
மேலும், 2026 சட்டசபை தேர்தலுக்கு, மெகா கூட்டணி அமைக்கலாம் என்று ஆலோசித்துள்ளனர்.
சீமானா, திருமாவளவனா, விஜயா... யாருடன் கூட்டணி?
ஒற்றைத்
தலைமையாக இருந்து சாதிக்க முடியும் என்று கனவு கண்ட பழனிசாமிக்கு, தலையில்
இடி விழுந்து விட்டதால், இப்போது, பன்னீர்செல்வம், சசிகலா தவிர்த்த
அ.தி.மு.க.,வோடு, கூட்டணிக்கு கிளம்பப் போகின்றனர்.
கடுமையாக சாடிய
கண்ணதாசன், மதுரை முத்து மற்றும் ப.உ.ச., போன்றவர்களை அரவணைத்து
கட்சியையும், ஆட்சியையும் எம்.ஜி.ஆர்., நடத்தினார். கடுமையாக சாடிய
காளிமுத்து, வீரப்பன் மற்றும் பி.எச்.பாண்டியன் என, எல்லாரையும்
அரவணைத்தவர் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, ஜெயலலிதாவால்
கட்டிக் காப்பாற்றப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தை, சுயநலத்தோடு
படுபாதாளத்தில் தள்ளிய புண்ணியவான்களை, தற்போதுள்ள நிர்வாகிகள் என்று
சொல்லிக் கொள்பவர்களை, தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
பிரிந்தவர்கள்
இணைந்தாலும், உடைந்த மனங்கள் இணையாது என்றார் மைத்ரேயன். 'கறந்த பால் மடி
புகாது; கருவாடு மீனாகாது; உடைந்த பானை ஒட்டாது' என்று, காளிமுத்து ஒரு
வசனம் சொல்லி இருக்கிறார்.
என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்!