PUBLISHED ON : ஏப் 25, 2024 12:00 AM

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேற்கு வங்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழித்து, தனிக்காட்டு ராணியாக பவனி வந்து கொண்டிருந்த மம்தா பானர்ஜிக்கு, மரண அடி கொடுக்கும் வகையில், கோல்கட்டா உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த, 2016ல் நடத்தப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு செல்லாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது, நடந்து கொண்டிருக்கும் லோக்சபா தேர்தலில், அக்கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு மாநில அரசு தேர்வாணையம், தேர்வுகளில் எப்படி எல்லாம் முறைகேடுகள் செய்யலாம் என்பதை, ஹரியானா மாநிலத்தில், இந்திய தேசிய லோக்தள் கட்சியைச் சேர்ந்த தேவிலால் முதல்வராக இருந்தபோது நடந்த சம்பவம் சாட்சி.
அந்த வழக்கில் சிக்கிய தேவிலால் மற்றும் உயர் அதிகாரிகள், உச்ச நீதிமன்றம் வரை சென்று தண்டனை உறுதி செய்யப்பட்டு, சிறை வாசம் அனுபவித்தது வரலாறு.
அந்த வரிசையில் தற்போது, மம்தாவின் அமைச்சரவையில் இடம் பெற்ற கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி முதல் உயர் அதிகாரிகள் வரை சிக்குவர் எனத் தெரிகிறது. தேர்வில் கலந்து கொள்ளாத, 25,753 பேர், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது எவ்வளவு பெரிய முறைகேடு!
மனசாட்சியே இல்லாமல் செய்யப்பட்ட இந்த முறைகேட்டால், மாநிலத்திற்கே அவமானம்.
'இப்படி குறுக்கு வழியில் ஆசிரியர் பதவி பெற்றவர்கள் கல்வி போதித்து, ஒழுக்கமான மாணவர்களை எப்படி உருவாக்கி இருக்க முடியும்?
மோசடியாக சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரின் சம்பளத்தையும், ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் அரசு வசூலிக்க வேண்டும்' என்று தீர்ப்பாகி உள்ளது சரியே.
பெண் அரசியல் கட்சித் தலைவர்களில், ஊழல் குற்றச்சாட்டில் பல பெண் முதல்வர்கள் சிக்கி, தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
உ.பி.,யில் தாஜ்மஹால் ஊழல் வழக்கில், மாயாவதி சிக்கினார். நம் மாநிலத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்கினார்.
இப்போது, மம்தா.தீர்ப்பு மக்கள் கையில்!
சிதம்பரத்தின் வயிற்றெரிச்சல்!
அ.ரவீந்திரன்,
குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அண்டை
மாநிலமான கேரளா பிரசாரத்தில் பேசும் போது, 'பா.ஜ., நீண்ட காலம் இருக்காது'
என, தெரிவித்துள்ளார்.
'பா.ஜ., இருக்கும் வரை காங்கிரஸ் கட்சி
ஆட்சிக்கு வர முடியாது' எனவும் புதிராக பேசியுள்ளார். தப்பி தவறி காங்கிரஸ்
தலைமையில், 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சி.ஏ.ஏ., என்ற
குடியுரிமை சட்டம் தடை செய்யப்படும் எனவும் பேசியுள்ளார்.
மேலும்,
'பா.ஜ.,வினர் மோடியை மையமாக வைத்தே அரசியல் பண்ணி வருகின்றனர். மோடி
வழிபாட்டு மையமாகி வருகிறார்' எனவும் வயிற்றெரிச்சலை கொட்டி உள்ளார்.
'காங்கிரஸ்,
தேசத்துக்கான கட்சி; காங்கிரஸ் இன்றி இந்தியா இல்லை' என மார்தட்டிய
காங்கிரஸ் கட்சியை சிதைத்து விட்டு, பா.ஜ., என்ற கட்சியும் ஒரு சாதாரண
மனிதர் மோடியும் பிரதமராகி இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர வைத்ததையும்,
இந்தியா வளர்ந்ததையும் காங்கிரஸ் கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை.
பா.ஜ.,
இருக்கும் வரை தன் போன்ற அதிமேதாவி அரசியல்வாதிகள் தலைதுாக்க முடியாது
என்பதையும் சிதம்பரம் உணர்ந்துள்ளார். தமிழகத்தில் தேய்ந்து வரும்
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த, ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத சிதம்பரம்,
பா.ஜ., எதிர்காலத்தை கணிப்பது காலக்கொடுமை என்று தான் சொல்ல வேண்டும்.
'ஜல் ஜீவன்' பணி ஆய்வு செய்யப்படுமா?
எஸ்.செபஸ்டின்,
சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
மத்திய அரசு, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கிராமப்புற ஏழை, எளிய
மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நல்ல நோக்கத்துடன், 'ஜல் ஜீவன்
மிஷன்' என்ற திட்டத்தை துவக்கி, அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு
செய்கிறது.
இத்திட்டம், ஊராட்சி ஒன்றியம் மூலமாக
செயல்படுத்தப்படுகிறது. ஆனால், பா.ஜ., ஆட்சி புரியாத மாநிலங்களில், ஜல்
ஜீவன் குடிநீர் திட்டத்தை மாநில அரசுகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஊர்
இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, இத்திட்டத்தில் சிலர்
பல கோடி ரூபாய் ஊழல் செய்வதாக மக்கள் பேசுகின்றனர். இதில் உண்மை
இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஊராட்சிகளில், ஜல்ஜீவன்
திட்டத்திற்காக புதிதாக எவ்வித நீர் தேக்கங்களோ பெரிய அளவில் குழாய்கள்
பதிப்பு வேலைகளோ செய்ததாக தெரியவில்லை.
ஏற்கனவே கிராமப்புற
தெருக்களில் பொது குடிநீர் குழாய்கள் இருந்தன. மேலும், 2022 - 23ம்
ஆண்டுகளில் ஊராட்சி ஒன்றியம் மூலமாக, 'உயிர் நீர் இயக்கம்' என்ற
திட்டப்படி, கிராமத்தில் தனிநபர் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன.
இதற்காக,
1,000 தனி நபர் குடிநீர் இணப்பிற்காக சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில்
ஊராட்சிகள் அனைத்திலும் பல ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. ஒரு
இணைப்புக்கு இல்லம்தோறும் தனி நபர்களிடம் 5,000 முதல் 10,000 வரை பணமும்
வசூல் செய்யப்பட்டது.
ஆனால், தற்போது இந்த குடிநீர் இணைப்புகளில்
ஜல் ஜீவன் மிஷன் இணைப்புகளை கொடுத்து விட்டனர். மேலும், ஏற்கனவே
தெருக்களில் போடப்பட்டிருந்த பொது குடிநீர் குழாய் இணைப்புகளை காலி செய்து
விட்டனர்.
தற்போது, ஜல் ஜீவன் திட்டத்தின் மூலமாக போடப்பட்ட அனைத்து
இணைப்புகளுக்கும் ஊராட்சி மூலமாக 1,450 முதல் 1,650 வரை ரசீது கொடுத்து
பணம் வசூல் செய்துள்ளனர். கல்வி அறிவு குறைவான ஏழை, எளிய கிராமப்புற
மக்களும் இந்தப் பணத்தை கட்டியுள்ளனர்.
எனவே, மத்திய அரசு, இந்த ஜல்
ஜீவன் திட்டத்தின் மூலமாக ஊராட்சிகளில் நடந்துள்ள அனைத்து பணிகளையும்
ஆய்வு செய்தால், மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.

