PUBLISHED ON : ஜூன் 29, 2024 12:00 AM

எஸ்.ஆர்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் கட்சி, 'டெக்கான் ஹெரால்ட்' என்ற ஆங்கிலப் பத்திரிகையை ஆட்டையைப் போட்டு, கபளீகரம் செய்த விவகாரம் மட்டுமே, நாட்டு மக்களுக்கு தெரிந்து இருக்கிறது.
கடந்த 52 ஆண்டுகளுக்கும் மேலாக, முடிந்த வரையில் நாட்டை சூறையாடும் கைங்கர்யத்தை, காங்கிரஸ், கன கச்சிதமாக நடத்தி வந்திருக்கிறது. நாட்டிலுள்ள படிக்காத பாமர மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்து அனுப்பும் மக்கள் பிரதிநிதிகளுக்கு, விதவிதமான சலுகைகள் இருப்பது, இதுவரை மர்மமாக, மக்களுக்கு தெரியாமல் இருந்தது.
அந்த விதவிதமான சலுகைகளில் ஒன்று, மக்கள் பிரதிநிதிகள் வசிக்கும் வீட்டின் மின்சார பயன்பாட்டு கட்டணத்தை, அரசே கட்டிக் கொண்டிருப்பது தான்.
சில நாட்களுக்கு முன், பா.ஜ.,வின் அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வ சர்மா, இந்த சலுகையின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து, '2024 ஜூலை 1 முதல், மக்கள் பிரதிநிதிகள், அவர்கள் உபயோகிக்கும் மின் கட்டணத்தை அவர்களே கட்ட வேண்டும். அரசு கட்டாது' என்று அதிரடி அறிவிப்பு செய்தார்.
அடுத்த கட்டமாக, மத்திய பிரதேச பா.ஜ., முதல்வர் மோகன் யாதவ், 'இனி அனைத்து அமைச்சர்களும் வருமான வரியை, அவரவரே செலுத்த வேண்டும். இனி அரசு கட்டாது' என்று அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து அறிவித்து இருக்கிறார்.
கடந்த, 1972ம் ஆண்டு முதல் கடந்த 52 ஆண்டுகளுக்கும் மேலாக, அமைச்சர்களின் வருமான வரியை, அரசு தான் கட்டி கொண்டிருந்ததாம். காங்கிரஸ் கட்சி, நாட்டை எப்படி எல்லாம் சுரண்ட முடியுமோ, அப்படி எல்லாம் சுரண்டிக் கொண்டு இருந்திருக்கிறது.
மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், விவகாரங்கள் ஒவ்வொன்றாக வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது. வருமான வரி என்பது அவரவர் சம்பாதிக்கும் சம்பாத்தியத்துக்கு ஏற்ற வகையில், அரசுக்கு கட்ட வேண்டிய வரி.
நாம் அனைவரும் சம்பளம், சேமிப்பின் வட்டி என, அனைத்திற்கும் வரியோ வரி என கட்டியபடி உள்ளோம்.
நாட்டு நிலைமை இவ்வாறிருக்க, தங்கள் சம்பாத்தியத்தின் வருமான வரியையும், அரசே கட்ட வேண்டும் என்ற ஷரத்தை, அமலில் வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, வழிப்பறி கொள்ளைக்காரர்கள், கடற்கொள்ளைக்காரர்களை காட்டிலும் படு பயங்கரமான கொள்ளைக் கூட்டமாக இருந்து இருக்கிறது. இந்த கொள்ளைக்கார கும்பலையும் நம்பி வாக்களிக்கும் நாட்டு மக்களை பார்த்தால் பாவம், பரிதாபமாக உள்ளது!
ஜால்ரா கொட்டுபவரால் ஆபத்தில்லை!
அ.சேகர்,
கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சினிமாவில் உலக நாயகனாக
வலம் வந்த சகலகலா வல்லவன் கமல், அரசியலில் தான் ஒரு மண் குதிரை என்பதை, ஒரு
ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்காக, தன் கட்சியை தி.மு.க.,விடம் சரண்டர்
செய்தபோதே நாம் அறிந்து கொண்டோம்.
கட்சி ஆரம்பிக்கும்போது அவர்,
இந்தியன் பட தாத்தா போல, ஊழலுக்கு எதிராக பொங்கி எழுவதை போன்று, மேடைக்கு
மேடை பேசியதும், ஒரு முறை கோபத்துடன், 'டிவி'யை உடைத்ததும் நாம் அறிந்ததே.
தன் வேறொரு படத்தை வெளியிட இங்கே இடர் வந்தபோது, 'நாட்டை விட்டு ஓடி
விடுவேன்' என்றவர் இவர்.
இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக
வருவார் என்று, மக்கள் நினைத்திருந்தபோது, சமீபத்தில் முடிந்த லோக்சபா
தேர்தலுக்கு, தி.மு.க.,வோடு ஐக்கியமாகி, ஆதரவாக பிரசாரம் செய்தார். இதனால்,
ஆளும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்ட முடியாமல் போனது.
தற்போது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவில் தற்போது வரை, 64 பேர் உயிர் இழந்து
விட்ட நிலையில், ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டது.
பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கிறேன் என்று கிளம்பி, அங்கு கமல் உளறிய
உளறல்கள், வழக்கம் போல சர்ச்சைக்குரியதாகி விட்டன.
'மருந்து
கடைகளுக்கு அருகே, மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆலோசனை மையங்கள்
வைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். குபீர் சிரிப்பை வரவழைப்பதாக
இருக்கிறது இவருடைய அறிவுரை.
டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க, 'ரூம்'
போட்டு சிந்திக்கும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளுடன் மதுக்கூடங்களை இணைத்து
சரக்குகளை விற்பனை செய்யும் தமிழக அரசு, அந்த மதுக் கூடங்களில்
மதுப்பானங்களை அருந்தி விட்டு மோட்டார் வாகனங்களில் வீடுகளுக்கு
திரும்புபவர்களிடம், குடித்து விட்டு வாகனங்களை ஓட்டிச் சென்ற
குற்றத்திற்காக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கும் தமிழக அரசு, எப்படி
மதுக்கடைகளின் அருகே ஆலோசனை மையங்கள் அமைக்கும்?
'மதுக்கடைகளை மூட
வேண்டும்' என்று கூறாமல், 'மிதமாக குடிக்கலாம்' என்று இவர் ஆளுங்கட்சிக்கு,
'ஜிங்சாக்' என ஜால்ரா கொட்டுவது, காதை அறுக்கிறது.
சினிமாவில் யாரோ
எழுதி கொடுத்ததை படித்து நடித்து கைத்தட்டல் பெற்ற கமலால், உண்மையான
வாழ்க்கையில் சரிவர தன் கருத்துக்களை பகிர முடியாமல் தள்ளாடுகிறார்.
தனிப்
பெரும் தலைவராக உருவாகாமல், ஆரம்பத்திலேயே தி.மு.க.,விடம் விலை
போய்விட்டதால், இவரால் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏதும் வந்து
விடாது என்று உறுதியாக நம்பலாம்!
'ஸ்டீரியோடைப்' சிந்தனையை ஒதுக்கணும்!
சீனி
சேதுராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இலங்கையை
ஆண்ட எல்லாளன் என்ற அரசனின் மகன் வீதிவிடங்கன். அவன் தேரில் சென்றபோது,
பசுவுடன் படுத்திருந்த கன்றின் மீது தேர்ச் சக்கரம் ஏறி, கன்று பலியானது.
நீதி
கேட்டு பசு, ஆராய்ச்சி மணியை அடித்தது. விஷயத்தைக் கேள்விப்பட்ட எல்லாளன்,
பசுவின் கண்ணெதிரே தன் மகனைப் படுக்க வைத்து, தன் தேர்ச் சக்கரத்தை அவன்
கழுத்தில் ஏற்றி அவனைக் கொன்று, பசுவுக்கு நீதி வழங்கினான். அதற்காகவே
அவனுக்கு மனு நீதி சோழன் என்ற பெயர் கிடைத்தது.
நம்மூர் கள்ளச்சாராய
வியாபாரி கோவிந்தராஜ், 25 வருடங்களாக கள்ளச்சாராயம் விற்பது தான் தன்
தொழில் என்றும், அவ்வப்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமினில்
வெளிவந்து, மீண்டும் சாராய வியாபாரம் செய்வதாகவும், காவல் துறை
அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து விடுவதாகவும் கூறி இருக்கிறார்.
முதலில்
கருணாபுரம் கிராம நிர்வாக அதிகாரியை, பணி நீக்கம் செய்ய வேண்டும்.
ஏனெனில் கிராமத்தில் நடைபெற்று வந்த சமூக விரோத செயலை, வட்டாட்சியருக்கு
தெரிவிக்கவில்லை.
அடுத்ததாக, கருணாபுரம்கிராமத்தைக்
கட்டுப்படுத்தும் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரையும் பணிநீக்கம்
செய்ய வேண்டும். நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். கடும் தண்டனை
கொடுத்தால் தான், இத்தகைய மாபாதகங்கள் குறையும்.
சம்பந்தப்பட்ட
அரசியல்வாதிகள் மீது இந்நேரம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? மனு நீதி
சோழன் என தன்னைத் தானே நினைத்து, விசாரித்து ஆற அமர நடவடிக்கை
எடுப்பதற்குள், பொழுது விடிந்து, அடுத்த நாளுக்கு, 'டிக்கெட்' வாங்க பலர்
கிளம்பி விடுவர். 'ஸ்டீரியோடைப்' சிந்தனைகளைத் துரத்தி விட்டு,
ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் ஒழிய, நம் மாநிலம் தேறாது.