/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
செல்கள் எப்படி மின்சாரம் தயாரிக்கின்றன?
/
செல்கள் எப்படி மின்சாரம் தயாரிக்கின்றன?
PUBLISHED ON : ஜன 08, 2026 07:27 AM

செல்களைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வுகளை, ஒரு பாதுகாப்பு வேலியாகவே அறிவியல் உலகம் கருதி வந்தது. ஆனால், டெக்சாஸ் பல்கலை ஆய்வாளர் களின் சமீபத்திய ஆய்வு, இந்தச் சவ்வுகள், தன்னிச்சையாக நுண்மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை எனக் கண்டறிந்துள்ளது.
செல்லுக்குள் இருக்கும் புரதங்கள் சவ்வு களைத் தொடர்ந்து அழுத்தி வளைத்துக்கொண்டே இருக்கின்றன. இந்த இயந்திரவியல் அழுத்தத்தின் காரணமாக 'பிளெக்ஸோ எலக்ட்ரிசிட்டி' எனும் இயற்பியல் விளைவு ஏற்பட்டு, மின்னழுத்தம் உருவாகிறது. சவ்வுகள் மின்னோட்டத்திற்கு வெறும் எதிர்வினை புரிவதுடன் நிற்காமல், சுயமாக அதை உருவாக்கவும் செய்கின்றன.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்னழுத்தத்துக்கு, நம் நரம்பு மண்டலத் தகவல்தொடர்பு சமிக்ஞைகளுக்கு இணையான வலிமை இருக்கிறது. இது நரம்பு செல்கள் அல்லாத, உடலின் இதர உயிரணுக்கள் எவ்வாறு மின்சார முறையில் தங்களுக்குள் தொடர்பு கொள்கின்றன என்பதற்கான நீண்டகால அறிவியல் தேடலுக்கு விடையை கொடுத்துள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்தக் கண்டுபிடிப்பு உயிரியல் துறையில், குறிப்பாக மருத்துவத் துறையில் உள்ள சில அடிப்படைப் புரிதல்களை, முற்றிலுமாக மாற்றி அமைக்கும். இது எதிர்காலத்தில் உயிரியல் முறையில் இயங்கும், புதிய ஆற்றல் தொழில்நுட்பங்களுக்கும், நவீன மருத்துவச் சிகிச்சைகளுக்கும் மிக முக்கியத் திறவுகோலாக அமையும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

