PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

ஆர்.பாலமுருகன், அலங்காநத்தம், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: நடிகர் பிரசாந்த், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக, அபராத தொகை விதித்துள்ளார், சென்னையைச் சேர்ந்த, தைரியமான காவல்துறை அதிகாரி ஒருவர். அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
ஆனால், முகநுாலில் இதற்கு, ஏகப்பட்ட கண்டனங்களை தெரிவித்துள்ளனர், அவரது ரசிக கண்மணிகள்.
'எல்லாருமே தலைப்பாகை அணிந்து விடுகின்றனரா? பிறகு ஏன் இவருக்கு மட்டும் அபராதம் விதித்துள்ளார், அந்த போக்குவரத்துக் காவல் துறை அதிகாரி? பிரபலமாவதற்காக செய்துள்ளார்' என்று எழுதி உள்ளனர்.
ெஹல்மெட் எதற்காக அணிகிறோம்? விபத்து நேர்ந்தால், தலையில் அடிபடாமல் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பெரும்பாலான விபத்துகளில், தலையில் அடிபடுவோர் இறக்கின்றனர்; அதைத் தவிர்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், காவல் துறை இத்தகைய கடுமையான விதிகளை விதித்துள்ளது.
சப்போஸ், இரு சக்கர வாகனம் ஓட்டும்போது பிரசாந்த் கீழே விழுந்து, தலையில் அடிபட்டிருந்தால், இதே துதிபாடிகள் என்னவென்று சொல்லி இருப்பர்... 'காவல்துறைக்கு கண்ணில்லையா? சாலையில் விபத்து ஏற்படுத்துவோரை, 'நைய'ப் புடைக்க வேண்டும்' என கொந்தளித்திருப்பர்; சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டமும் செய்திருப்பர்.
சற்றே மூளையைக் கசக்கி சிந்தித்த பின், இது போன்ற முட்டாள்தனமான எதிர்ப்புகளைத் தெரிவியுங்கள், ரசிகக் கண்மணிகளே!
பிரசாந்த் என்ன செய்திருக்க வேண்டும்? ரசிகக் கண்மணிகளுக்கு அறிவுரை கூறி, 'இப்படியெல்லாம் பேசாதீர்கள். காவல் துறையினர் என் மீது அக்கறை கொண்டு தானே இப்படி செய்திருக்கின்றனர். நான் பார்த்துக் கொள்கிறேன். அபராதம் கட்டி விடுகிறேன். இனி யாரும் ெஹல்மெட் போடாமல், இரு சக்கர வாகனம் ஓட்டாதீர்கள்' என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?
இனியாவது செய்யுங்கள் பிரசாந்த்!
பொறுப்பு என்னவெ ன்றே தெரிய வில்லையே?
வெ.சீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: மன்மோகன்சிங்
தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை, 2014ல் மோடி தலைமையிலான பா.ஜ., தோற்கடித்து,
ஆட்சியைப் பிடித்தது. தற்போது, மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி
செய்கிறது.
பெரும் ஊழல்கள் ஏதும் இல்லாமல், காங்கிரஸ் கட்சி செய்த பல சரித்திரத் தவறுகளையும் சரி செய்துள்ளது பா.ஜ., அரசு.
வேலையில்லாத்
திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவைகளில் அரசு இன்னமும் திறம்பட
செயல்பட்டிருக்கலாம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், நாட்டின் பொருளாதாரம்
திடமாக, வேகமாக வளர்ந்து வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த
லோக்சபா தேர்தலில், 'அரசியல் சாசனம் ஆபத்தில் உள்ளது; இட ஒதுக்கீடுகள்
நிறுத்தப்படும்' என்பது போன்ற தவறான பிரசாரங்கள் செய்தும், தேர்தல்
வாக்குறு திகளாக பல இலவசங்களை அறிவித்தும், காங்கிரஸ் 99 சீட் வரையே
கைப்பற்றியுள்ளது. இதை ஏதோ, தனக்கு மட்டுமே கிடைத்த மகத்தான வெற்றி என்ற
இருமாப்பில் காங்., அட்டகாசம் செய்கிறது.
நீட் தேர்வை
அறிமுகப்படுத்தியது, கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப்
பட்டியலுக்கு மாற்றியது, கச்சத்தீவை தாரை வார்த்ததுபோன்றவை,
காங்கிரஸ்ஆட்சியில் தான் நிகழ்ந்தன.
ஆனால் இப்பொழுது இதே கட்சியும், இதன் கூட்டணிகளும், நீட்டுக்கும், கல்விக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
நீட் தேர்வில் கடந்த முறை, சில முறைகேடுகள் நிகழ்ந்தது கண்டிக்கத் தக்கது;
தவிர்க்கப்பட வேண்டியது. உச்ச நீதிமன்றமும் இதைக் காரணம் காட்டி நீட்
தேர்வுகள் தேவையில்லை என்று கூறவேயில்லை; 'முறைகேடுகள் இல்லாததை உறுதி
செய்து தேர்வை நடத்த வேண்டும்' என்று தான் கூறியுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் நீட் தேர்வுக்கெதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.
இந்த
முறை லோக்சபாவில் உறுதிமொழி எடுக்கும் போது, பல எதிர்க்கட்சி
உறுப்பினர்கள், அரசியல் சாசன புத்தகத்தை துாக்கிப் பிடித்து, ஏதோ இவர்கள்
தான் இந்திய அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவதற்காகவே பிறவி எடுத்தவர்கள்
போல நடந்து கொண்டனர்.
ஆனால் உண்மையில், இவர்களின் ஆட்சியில் தான்,
அரசியல் சாசனத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டன; மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டன; அவசரநிலைப்
பிரகடனமும் செய்யப்பட்டது.
இப்பொழுது, 'பட்ஜெட்டில் பாரபட்சம்,
நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்காகவே போடப்பட்ட பட்ஜட்' என்று மற்றொரு
தவறான, பொய் பிரசாரம் நடக்கிறது. பார்லிமென்டை நடத்த விடாமல் அடிக்கடி
முடக்குவது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்குஎதிரான போக்கு,
மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று தாழ்மைப்படுத்தி அழைத்தல், நிடி ஆயோக்
கூட்டத்தைப் புறக்கணித்தல் போன்ற, ஜனநாயக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு
வருவதுதுரதிருஷ்டவசமானது, வருந்தத்தக்கது.
மக்கள் இவர்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை உற்று கவனித்தபடி இருக்கின்றனர்.
பார்லி.,யை
நல்ல முறையில் செயல்பட ஒத்துழைப்பது, விவாதங்களில் ஆக்கப்பூர்வமான
பங்களிப்பு, நல்ல விஷயங்களில் அரசைப் பாராட்டவும், தவறுகள் செய்யும்போது
கண்டித்து, நேர்வழிகளைக் காட்டவும், ஆளும் கட்சியோடு கைகோர்த்து நாட்டின்
முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டிய பொறுப்பிலிருந்து
எதிர்க்கட்சிகள் பிறழ்ந்து விட்டது,தங்களின் பொறுப்பே தெரியாமல் அவர்கள்
செயல்படுவதை அப்பட்டமாகக் காட்டுகிறது.
கவன ம் செலுத்துமா மத்திய அரசு?
இந்திரா சவுந்தரராஜன், மதுரையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: பணி நிமித்தம், நிறைய விமான பயணம் மேற்கொள்பவன் நான்.
மதுரை விமான நிலையத்தை அடைய, என் போன்ற நடுத்தட்டு வர்க்கத்துக்கு டாக்சி கார்கள் தான் தோது.
அந்த வகையில், மீட்டர்டாக்சிகள், மதுரையில் பரவலாக வளர்ந்து வருகின்றன; நானும் இவற்றையே பயன்படுத்துகிறேன்.
இந்த
டாக்சிகள், விமான நிலையம் என்ற உடனேயே, 'மீட்டருக்கு மேல் ஐம்பது ரூபாய்
கூடுதல்' என்கிற சுமையை, முதலிலேயே கூறி விடுகின்றனர். ஏன் என்று
கேட்டால், 'அது அப்படித்தான்' என்கிற பதிலே கிடைக்கிறது.
வேறு வழியின்றி பயணித்தால், விமான நிலையத்தின் உள்ளே நுழைய டோல் கட்டணம் 20 ரூபாய்; வெளியே வரும் போது 135 ரூபாய்!
இந்த கொடூர கட்டண முறை, சில மாதங்களாக அமலில் உள்ளது.
மதுரை
நகர பகுதியில் இருந்து விமான நிலையம், 11 கி.மீ., துாரத்தில் உள்ளது.
இதற்கான மீட்டர் கட்டணம், 200 ரூபாய் சொச்சம் என்றால் இந்த டோல் கொள்ளையோடு
சேர்த்தால், இரு மடங்காகி விடுகிறது. ஒவ்வொரு முறையும், போக வர, 400
ரூபாய்க்கு மேல் இழப்பு.
நான்கு ஹிந்திக்காரர்கள், அவ்வளவு விமான பயணியரையும், அம்பானிகளாக கருதுகின்றனர் போலும்.
திரும்பிய பக்கமெல்லாம் டோல் கொள்ளை. சாலை வரி கட்டப்பட்ட பிறகே வாகனங்கள் வாங்கப்படுகின்றன; அந்த வரி போக, இந்த டோல் வரி வேறு.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், சாலை மேம்பாட்டிற்கும் வரி அவசியமே; அதற்கு அளவு கிடையாதா?
மத்திய அரசு, சாமானிய மக்களை பாதிக்கும் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.