PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM

எஸ்.சுந்தாஸா, கும்பகோணம், தஞ்சை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: சென்னை, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், '211 பேராசிரியர்கள் வெவ்வேறு கல்லுாரிகளில் 2,500 பேராசிரியர்கள் இடங்களை நிரப்பி உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒருவர், 30 பதவிகள் வகித்துள்ளது தெரியவந்துள்ளது.
'கல்லுாரிகள் தணிக்கை நேரத்தில் மட்டும்இவர்களை முழு நேர பணியாளர்கள் போன்று காண்பித்திருக்கலாம்' என்றும் தெரிவித்துள்ளார். தனியார் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த குற்றம் வெளிவந்தது, அண்ணா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகிறது. சொல்லப் போனால் இந்த குற்றத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உயர்கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போலி மதிப்பெண் சான்றிதழ், போலி ஜாதி சான்றிதழ் போன்றவற்றை பெற்று, அரசு மற்றும் உயர் கல்லுாரிகளில் இடம் பெறுவதும், அரசு வேலையில், குறிப்பாக அரசு நடத்தும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் வேலை பெறும் அவலம் தொடர்கிறது.
கடந்த 2019ல் போலி முனைவர்சான்றிதழ் பெற்ற 11 அரசு கல்லுாரி பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமீபத்தில், போலி அனுபவசான்றிதழ் கொடுத்து ஒன்பது ஆண்டாக, உதவி பேராசிரியராக திருவள்ளுவர்பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவரை காவல்துறை கைது செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல பேராசிரியர்கள் இதுபோன்ற வழக்குகளில் சிக்குவதும், அவர்களை பணியிடை நீக்கம் செய்யும் நடைமுறையும் தொடர்கிறது. ஆனால், அதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது பொது தளத்தில் வெளியிடப்படுவதில்லை. குறிப்பாக, கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு என ஒரு வலைதளம் கூட இல்லாதது, இது சம்பந்தமான விஷயங்களை மேலும் இருட்டடிப்பு செய்கிறது.
எனவே, இதுபோன்ற வழக்குகளில் சிக்குபவரது சான்றிதழை சரிபார்த்த அதிகாரிகளையும் விசாரணை வட்டத்தில் இணைத்து, குற்றவியல் நடைமுறைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் வெளியிடும் சான்றிதழ்களில், 'கியூ ஆர் கோடு' நடைமுறை கட்டாயமாக்கப்பட வேண்டும்.
நிதி வ ளத்தை பெருக்க இலவச ஆலோசனை!
வெ.சீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: நிதி வளத்தைப்
பெருக்க, மாநில திட்டக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக
முதல்வர். ஒன்றா, இரண்டா... ஏகப்பட்ட வழிகள் உள்ளன.
மின் கட்டண
உயர்வை ரத்து செய்து விடலாம்; அரிசி, பருப்பு வகைகள், பால், பால்
பொருட்கள், நெய், சொத்து வரி, பத்திரங்கள் பதிவுக் கட்டணங்கள் போன்றவைகளின்
விலைகளை குறைத்து விடலாம். ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சி அடைவர்.
இவற்றுக்கு பதிலாக, இலவச பஸ் பயணத்தை நிறுத்தி, கட்டணத்தை ஓரளவு உயர்த்தலாம். மகளிர் மாத உதவித் தொகையை நிறுத்தி விடலாம்.
பள்ளிகளில்
அனைவருக்கும் இலவசஉணவுக்கு பதிலாக,உண்மையிலேயே படிக்க வேண்டும் என்று
ஆசைப்படும் மாணவர்களுக்கு, குறைந்த பட்சம் 60 சதவிகிதம் மதிப்பெண்களாவது
பெறுபவர்களுக்கு மட்டும் இலவச உணவு, மிதி வண்டி போன்றவை கொடுக்கலாம்.
படிப்பில்
நாட்டமில்லாதவர்களுக்கு, கத்தி, அரிவாள், போதைப் பொருட்களை பள்ளிகளுக்கு
எடுத்து வருபவர்களுக்கு, ஆசிரியர்களை தாக்குபவர்கள் போன்றோருக்கு இலவசங்கள்
கிடையாது என அறிவிக்கலாம்.
சாராய ஆலைகள், மணல் கொள்ளை
அடிப்பவர்கள், 2- - 3 மனைவியரை வைத்துஇருப்பவர்கள், சொகுசு பங்களாக்கள்,
மருத்துவ, பொறியியல் கல்லுாரிகள் நடத்துபவர்கள், நட்சத்திர விடுதிகள் பல
வைத்திருப்பவர்கள், தேர்தல்களில் நிற்பவர்கள், கோடிக் கணக்கில் செலவு
செய்து ஆடம்பர கல்யாணங்கள் செய்பவர்கள்...
பஞ்சாயத்து, வட்ட,
மாவட்ட, மாநில அரசியல் கட்சி நிர்வாகிகள், தலைவர்கள், வாரிசு
அரசியல்வாதிகளுக்கு சிறப்பு வரி, ஊழலாகப் பெற்ற தொகைகளின் மீது 30 சதவீத
வரி, வெளி நாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர், அடிக்கடி வெளிநாடுகள்
சென்று வருபவர்கள், தொலைக் காட்சிகள் நடத்துபவர்கள்,தனியார் பள்ளி
உரிமையாளர்கள் ஆகியோர் மீது உரிய வரிகளை விதித்தால், அரசுக்கும்வருமானம்
அதிகரிக்கும்.
ஏழை, எளிய, நடுத்தரமக்களையும் பாதிக்காது, இதை
மக்களும் வரவேற்பர். ஊழலும் சற்றே கட்டுக்குள் வரக்கூடும். எப்படி, ஒரே
கல்லில் இரண்டு மாங்காய் தானே! நடக்குமா?
கஷ்டத்திலும் நாம் சிரிக்க வேண்டுமோ?
ப.
ராஜேந்திரன், சென்னையில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:'சென்னையில்
எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்க தயார்' என்று, தன் தொகுதியான
கொளத்துாரில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட பின்,
முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
'சென்னையில் எங்கும் மழைநீர்
தேங்கவில்லை, சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என, ஓரிடத்தையாவது
எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும்' எனவும் தெரிவித்து உள்ளார்.
அவரது
தொகுதியான கொளத்துாரில் வேண்டுமானால் தண்ணீர் தேங்காமல் இருக்கலாம்; ஆனால்,
சென்னையின் இதர பகுதிகளில், வெப்ப காலத்தில் பெய்த இந்த மழைக்கே,
சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. போக்குவரத்து நெரிசல்
ஏற்படுகிறது. நகரின் பல பகுதிகள் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
எந்தவித
வளர்ச்சி பணிகளை எடுத்துக் கொண்டாலும், மழை வந்தால் எப்படி சமாளிப்பது
என்று யோசித்தே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். மெட்ரோ பணி,
மின்வாரிய பணி, வடிகால் பணி, இணைப்பு கால்வாய்களின் பணி முடியாமை போன்ற
காரணங்கள் ஏற்க முடியாததாக உள்ளன.
சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, அன்றாடபணிகளுக்கு செல்வோரை அல்லல்படுத்துகின்றன.
சில இடங்களில் இந்த பிரச்னை இருந்தால் பரவாயில்லை. ஒட்டுமொத்த சென்னை நகரமே மழைக் காலத்தில் சிறு குளங்கள் போலாகி விடுகின்றன.
எந்த வளர்ச்சி திட்டம் செய்தாலும், அவ்வப்போது வரும் மழையை எப்படி சமாளிப்பது என்பதையும் யோசித்து செயல்படுத்த வேண்டும்.
அலுவலகங்களுக்கு
செல்வோர், தங்கள் வாகனங்களை இயக்குவதும் பெரும்பாடாக இருக்கிறது. மழைநீர்
தேங்காத இடங்களே இல்லை. முதல்வர் சொல்வதை பார்த்தால், இந்த கஷ்டத்திலும்
நாம் சிரிக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறாரோ என்று தான் எண்ணத்
தோன்றுகிறது.