/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தேசிய கொடி நிறத்தையும் மாற்றணுமோ?
/
தேசிய கொடி நிறத்தையும் மாற்றணுமோ?
PUBLISHED ON : ஏப் 24, 2024 12:00 AM

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அனைத்தையும் காவிமயமாக்கும் சதி திட்டத்தின் முன்னோட்டமாக, துார்தர்ஷன் லோகோ நிறம் மாற்றப்பட்டுள்ளது' என்று ஆவேசப்பட்டு, ஆதங்கப்பட்டு, கண்டனம் தெரிவித்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
'உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு காவி சாயம் பூசினர். தமிழகத்தின் ஆளுமைகளின் சிலைகள் மீது, காவி பெயின்ட் ஊற்றி அவமானப்படுத்தினர். வானொலி என்ற துாய தமிழ் பெயரை, ஆகாஷவாணி என சமஸ்கிருத மயமாக்கினர். தற்போது துார்தர்ஷன் லோகோவிலும் காவி கறையை அடித்திருக்கின்றனர்' என்றெல்லாம் அங்கலாய்த்து இருக்கிறார், நம் முதல்வர்.
துார்தர்ஷன் என்பது மத்திய தகவல் ஒலிபரப்பு துறையின் கீழ், தன்னாட்சியாக இயங்கும் ஒரு அமைப்பு. அதில் எந்த நிறத்தை வைத்துக் கொண்டால் என்ன? வானில் தோன்றும் வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன; அதில் இரண்டாவதாக உள்ள நிறம் தான் ஆரஞ்ச். முதல்வர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், காவி.
வானவில்லில் உள்ள ஒரு நிறத்தை தான் துார்தர்ஷனின் லோகோவில் பொருத்தி இருக்கிறதே தவிர, வேறெந்த உள்நோக்கமும் அதற்கு உள்ளதாக நமக்கு தெரியவில்லை; ஆனால், முதல்வருக்கு தெரிகிறது.
ஆனால், திராவிட மாடல் கழக அரசு தான், கட்டடங்கள் முதல் கழனியில் விளையும் நெல் வரை - ஐ.ஆர்.கருணா - கருணாநிதியின் பெயரை சூட்டிக் கொண்டிருக்கிறது. அரசு கட்டடங்களில் கருணாநிதியின் சிலைகளாக திறந்து கொண்டிருக்கிறது.
இன்னும் கருணாநிதி கத்தரிக்காய், கருணாநிதி வெண்டைக்காய், கருணாநிதி அவரைக்காய், கருணாநிதி வெங்காயம், கருணாநிதி தக்காளி என்றெல்லாம் பெயர் வைப்பது மட்டும் தான் பாக்கி. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அவையும் வைக்கப்பட்டு விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பதைப் போல, ஸ்டாலினின் கண்களுக்கு ஆரஞ்சு நிறத்தை பார்த்தாலே, தேர்தல் தோல்வி பயம் வாட்டுகிறது.
போகிற போக்கை பார்த்தால், நம் இந்திய தேசிய கொடியிலுள்ள காவி நிறத்தை கூட மாற்ற வேண்டும் என, போர்க்கொடி துாக்கினாலும் துாக்குவர் போலும்!
மாமியார் வீடு செல்லும் மாப்பிள்ளைகள்!
-குருபங்கஜி,
சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வானில் வட்டமிடும்
வல்லுாறுகள், பிணம் தின்னி கழுகுகள், ரத்தம் உறிஞ்சும் அட்டை, மூட்டை
பூச்சி, கொசுக்கள் ஆகியவை கூட, இப்போதுள்ள ஊழல் அரசியல்வாதிகள் கால்
துாசிக்கு சமம்!
அலிபாபாவும், நாற்பது திருடர்களும் கதையில் வரும்
மர்ம குகை போல், ஊழலில் திளைக்கும் மந்திரி, தந்திரி ஏன் முதலமைச்சர்
அலுவலகங்களும், மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சும் பண்ணைகளாக மாறி வருகின்றன!
மக்கள்
திட்டம் எனும் போர்வையில், வரிப்பண சுரண்டல், கான்ட்ராக்ட், கமிஷன் போன்ற,
லஞ்ச லாவண்ய ஊழல்கள் புரியும் கூடாரங்களாய், அமைச்சர்கள் மற்றும்
உயரதிகாரிகளின் அலுவலக அறைகள் மாறி வருகின்றன.
வருமானவரித்துறை,
ஈ.டி., - சி.பி.ஐ. சோதனை, கைது படலங்கள் ஆகியவை, அன்றாட நிகழ்வுகளாகி
நீதிமன்றங்களால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள், ஏன் முதலமைச்சர்களும்,
சிறைக்குச் செல்லும் சுதந்திர போராட்ட தியாகிகளை போல, இரட்டை விரலை காட்டி,
சிறிதும் கூச்சமின்றி, சிரித்தவாறு ஜெயிலுக்கு போகின்றனர்!
மாமியார் வீடெனும் சிறைக்கு, மாப்பிள்ளைகளாக இவர்கள் பவனி போவது, கண் கொள்ளாக் காட்சி!
நாட்டு நடப்பை பார்த்தால், ஒன்று மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி போல், தெள்ளத் தெளிவாய் தெரிகிறது.
ஊழல்
புரிந்த முதல மைச்சர், அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளின் அலுவலகங்கள், இனி
வரும் காலங்களில், திஹார், புழல் போன்ற சிறைகளிலிருந்துதான் இயங்கப்
போகிறது! இதை கணித்து கூற, எந்த ஜோசியரும் தேவையில்லை!
ஏமாற்றம் தான்; சந்தேகமில்லை!
என்.
மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு சமமாக, தமிழக அரசு ஊழியர்களுக்கு
சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தது, அ.தி.மு.க., அரசு தான்' என்ற அப்பட்டமான
பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
உண்மையில் இதைச் செய்தவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டுமே.
காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த, தமிழக அரசு ஊழியர்களின் ரகசிய குறிப்பேடுகளை ஒழித்த பெருமைக்குரியவரும் கருணாநிதியே.
கருணாநிதியின் பொற்கால ஆட்சியில் தான், அரசு ஊழியர்கள், லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்டு செல்வச் செழிப்போடு வாழ ஆரம்பித்தனர்.
ஜெயலலிதா ஆட்சியில் வேலை நிறுத்தம் செய்த ஊழியர்கள் ஒரு லட்சம் பேரை ஒரே உத்தரவில் டிஸ்மிஸ் செய்து கதறவிட்டார்.
அதுமட்டுமின்றி,
தமிழக அரசின் வருவாயில், 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கு
போய்விடுகிறது என்று ஜெயலலிதா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ஸ்டாலினின்
ஆட்சியில், தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கேட்டது
கிடைக்கவில்லை. 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பழைய பென்ஷன் முறையை
அமல்படுத்துவோம்' என்று, ஆட்சிக்கு வருமுன் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி
வழங்கிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின், கைவிரித்துவிட்டார்.
அகவிலைப்படி உயர்வுக்கே போராட்டம் நடத்த வேண்டிய பரிதாப நிலையில் தான் அரசு ஊழியர்கள் இருக்கின்றனர்.
ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், ஜெயலலிதா ஈவு இரக்கம் இல்லாமல் கடுமையாக நடந்து கொண்டார்; ஸ்டாலின், கடுமையாக நடந்து கொள்ளவில்லை.
'இண்டியா
கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும் போது, தமிழகத்தின் மோசமான நிதிநிலை
நிச்சயம் மாறி விடும். அப்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கேட்டது எல்லாம்
தாராளமாக கிடைக்கும்' என்கிறார் ஸ்டாலின். வழக்கம் போல, தமிழக அரசு
ஊழியர்கள் ஆசிரியர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைவர் என்பதில் சந்தேகமில்லை.

