PUBLISHED ON : ஏப் 01, 2024 12:00 AM

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு பணம் வந்துள்ளது என்பதை, ஸ்டேட் பேங்க் வெளியிட்டு உள்ளது. இந்த விவகாரத்திற் காக, உச்ச நீதிமன்றத்தைப் பாராட்ட வேண்டும்.
அதிகபட்சமாக, பா.ஜ.,வுக்கு 7,000 கோடி ரூபாயும், காங்கிரசுக்கு, 1,397 கோடி ரூபாயும், திரிணமுலுக்கு 1,334 கோடியும் கிடைத்து இருக்கிறது.
நம் மாநில தி.மு.க.,வுக்கு 656.6 கோடி கிடைத்துஉள்ளது; இதில் ஒரு தனி நபரின் பங்களிப்பு, 500 கோடி ரூபாய்.
சூதாட்ட நிறுவனத்திடமிருந்து, தி.மு.க., நன்கொடை பெற்றிருப்பது வெட்கக் கேடு என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி விமர்சித்தார்.
அதற்கு, டி.ஆர்.பாலு, 'பா.ஜ.,வைப் போல, நாங்கள் யாரையும், மிரட்டியோ, ரெய்டு நடத்தியோ பணம் பறிக்கவில்லை' என்று பதில் சொல்லி இருக்கிறார். சிறுபிள்ளைத்தனத்தின் உச்சகட்டம் இது.
அன்போடு பெற்றாலும், அடித்துப் பிடித்து பெற்றாலும், இது முறைகேடான பணம் தான் என்பது, பாலுவுக்கு புரியவில்லையோ? பத்திரம் என்பது, கணக்கில் வரக் கூடிய பணம் தான் என்றாலும், யார் யாருக்கு, எவ்வளவு என்பது தான் இங்கே சூட்சுமம்.
'பா.ஜ.,வின், 'ஒயிட்காலர்' ஊழல் அம்பலமாகி இருக்கிறது' என்று, ஸ்டாலின் கூறி இருக்கிறார். சூதாட்ட நிறுவன உரிமையாளரை மிரட்டாமல் கொள்ளாமல், தான் பெற்ற பணம், 'ஒயிட் காலர்' பணம் தான் எனச் சொல்ல வருகிறார் போலும்!
கடந்த, 1939-ல் எட்வின் சதர்லேண்ட் என்ற குற்றவியல் நிபுணர் ஒருவரால் அறிமுகம் செய்யப்பட்ட, பொருளாதாரம் தொடர்பான முறைகேடுகளைக் குறிக்கும் வார்த்தை தான் 'ஒயிட்காலர்' ஊழல் என்பது.
தம்மைத் தாமே, 'ஒயிட்காலர் ஊழல் பேர்வழி' என, சிலர் ஒப்புக் கொண்டமைக்கு மிக்க மிக்க நன்றி!
வாயே திறக்கவில்லையே காம்ரேட்ஸ்?
பி. மோகன், ஒட்டன்சத்திரம்,
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில் உள்ள அரசு கல்லுாரிகள் மற்றும் பல்கலையில், உதவி பேராசிரியர்
பணிக்கான, 'செட்' தேர்வை நடத்த, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
இந்தத் தேர்வில், ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும்; தமிழுக்கு இடமில்லை என்று, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது பல்கலை.
மேலும்,
தேர்வில் விண்ணப்பிக்க, பொதுப் பிரிவினருக்கு 2,500 ரூபாயும்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2,000 ரூபாயும் தேர்வு கட்டணமாக
நிர்ணயித்து, அடுத்த அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.
இது, இந்திய அளவில், தேசிய தேர்வு முகமை நடத்தும், 'நெட்' தேர்வின் விண்ணப்பக் கட்டணத்தை விட, மூன்று மடங்கு அதிகம்.
கடந்த
ஆண்டு டிசம்பர் மாதம், தேசிய தேர்வு முகமை நடத்திய தேர்வில், மழை காரணமாக,
சென்னையைச் சேர்ந்த மையங்களில், நிறைய பேர் தேர்வு எழுத வரவில்லை. எனவே
அந்த தேர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று, கம்யூ., கட்சியைச் சேர்ந்த
மதுரை எம்.பி., வெங்கடேசன், பார்லி.,யில் முறையிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையும், பாதிக்கப்பட்ட சென்னை மையத்திற்கு மட்டும், மறுபடியும் தேர்வு வைத்து, முடிவை அறிவித்தது.
ஆனால்
இப்போது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை நடத்த இருக்கும், மாநில தகுதித்
தேர்வில், தமிழுக்கே இடமில்லை என்பது, தேர்வர்கள் மத்தியில் மிகுந்த
அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. மேலும் தேர்வு கட்டண உயர்வு பற்றி,
அரசியல்வாதிகள் யாரும் வாயை திறக்கவில்லை.
முக்கியமாக மத்திய அரசு
எதைச் செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து சுட்டிக்காட்டும் வெங்கடேசன்
போன்றோர், இது பற்றி வாயே திறக்கவில்லை.
அண்டை மாநிலங்களில்
எல்லாம், அந்தந்த மாநில மொழிகளில் மாநில தகுதித் தேர்வு நடத்தப்பட்டு
கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் மட்டும் ஆங்கிலத்தில் தான் தேர்வு
என்று அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்ட, இவர்களுக்கு தோன்றவில்லை
போலும்.
ஒருவேளை இதையே மத்திய அரசு செய்திருந்தால், வானத்திற்கும்
பூமிக்குமாக குதிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள், கூட்டணி
தர்மத்திற்காக, வாயை மூடி மவுனியாக இருக்கின்றனர்.
இனியும் தமிழகத்தில் உள்ள படித்த இளைஞர்களை ஏமாற்றாதீர்கள் அரசியல்வாதிகளே!
நாட்டுக்கு நல்லதல்ல!
சுப்ர. அனந்தராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான அமலாக்கத் துறையின் அதிகாரி ஒருவர், அதுவும் ரொம்ப சீனியர் அதிகாரி, புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில், ரெய்டு செய்யும் அதிகாரிகளில் ஒருவருடைய நடவடிக்கைகளை, வேவு பார்க்க ஏற்பாடு செய்தார் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது.
அந்த அதிகாரி, ஏகப்பட்ட கிரிமினல்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அவர்கள் மூலம் பல கோடி ரூபாய்கள் மதிப்பு---டைய, அசையும்மற்றும் அசையாச் சொத்துக்களைக் குவித்ததும் மேலும் அதிர்ச்சியான விஷயம்.
அத்தகைய ஆவணங்களை தான், ரெய்டின்போது, மற்ற அதிகாரிகள் கண்டெடுத்திருக்கின்றனர்.
ஏற்கனவே, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, இதே போல குற்றவாளிகளை மிரட்டி, கோடிக்கணக்கில் சம்பாதித்து, கையும் களவுமாக பிடிபட்டு, ஜெயிலில் இருந்து, தற்போது பெயிலில் வந்திருக்கிறார்.
இதே போல, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி., என, மற்ற ஆபீஸ்களிலும் எவ்வளவு கருப்பு ஆடுகள் உள்ளனவோ, தெரியவில்லை.
பாயக் கூடாத இடங்களில், லஞ்சம் பாய்ந்து விட்டது, நாட்டுக்கு நல்லதல்ல.
முற்றுப்புள்ளி வேண்டும்!
எஸ்.சுந்தரம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தலில் சுயேச்சைகள் போட்டியிடுவது அரசியல் அமைப்பு சட்டப்படி சரிதான் என்றாலும், அவர்களில் சிலர், ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் கேலிக்கூத்தாக்குகின்றனர் என்பது வருந்தத்தக்கது.
ஒருவர், 110 முறையோ, 210 முறையோ போட்டியிட்டதாகச் சொல்வதில், என்ன பெருமையோ தெரியவில்லை. விதவிதமான வேடங்களில் வந்து மனு தாக்கல் செய்வது, பாராட்டத்தக்கதாக இல்லை.
ஒருவர் டிபாசிட் தொகை முழுவதையும், 10 ரூபாய் நாணயங்களாக மாற்றி எடுத்து வந்து உள்ளார். 'அதிகாரிகளுக்கு வேறு வேலையில்லை; இதையாவது எண்ணட்டுமே' என்று வந்து விட்டார் போலும்!
டிபாசிட்டை 'டிடி' யாகத்தான் தர வேண்டும் என்று சட்டம் இயற்றலாம்.
இந்தக் கோமாளித்தனங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை!

