PUBLISHED ON : ஆக 07, 2024 12:00 AM

ரா. மூர்த்தி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை நகரிலுள்ள கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் தினசரி 25 கோடி லிட்டர் சாக்கடை நீர் கலக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை தவிர்க்க, அறிவார்ந்த தமிழக அதிகாரிகளையும், அறிவு கொண்ட அமைச்சர்களையும் குஜராத்துக்கு அனுப்ப வேண்டும்.
அங்குள்ள, சபர்மதி நதிக்கரைத் திட்டத்தை முழுமையாக புரிந்து கொண்டு, கூவம் மற்றும் அடையாறு ஆகிய ஆறுகளை அற்புதமாக மாற்றி அமைக்கும் வழிகளை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரிலிருந்து ரமேஷ் வெங்கடராமன் என்பவர் ஆதங்கப்பட்டு ஆலோசனை நல்கி, அனுப்பியிருந்த கடிதம் ஆக., 3ல் இப்பகுதியில் வெளியாகி இருந்தது.
அதெல்லாம் முடியாதுங்க என்பது தான் இங்குள்ள ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பதிலாக இருக்கும்.
ஏனெனில், குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் அந்த அரசியல் கட்சிக்கு அரசியலும் தெரியாது, கட்சி நடத்தவும் தெரியாது. எதற்கெடுத்தாலும் வெட்டி நியாயம் பேசிக் கொண்டு, நேர்மை, நாணயம், நீதி மற்றும் நாட்டுப்பற்று என்றெல்லாம் பேசி பொழுது போக்கிக் கொண்டிருப்பர். ஒரு அரசியல் கட்சி நடத்த வேண்டுமென்றால், பணம் வேண்டும்.
அந்த பணத்தை கமிஷன் அடித்துத்தான் செலவை ஈடுகட்டி, ஒப்பேற்ற முடியும். அதைத்தான் இங்கு திராவிடக் கட்சிகள் அரை நுாற்றாண்டுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருக்கின்றன.
அரசியல் கட்சி நடத்த வேண்டும் என்றால், அவ்வபோது திட்டங்களை தீட்டி, செலவு செய்ய அனுமதி பெற்று கமிஷன் அடித்து ஈடுகட்ட வேண்டும்.
உதாரணமாக சாலையை எடுத்துக் கொள்வோம். அரசு செலவில் போடப்படும் சாலை ஐந்தாண்டுகளுக்கு உறுதியாக நிலைத்து நீடித்து நிற்குமானால், அவர்கள் அரசியல் கட்சி நடத்த முடியாது. சாலையை குறைந்த பட்சம் ஐந்தாண்டுகளில் ஆறு அல்லது ஏழு முறையாவது மீண்டும் மீண்டும் போட்டுக்கொண்டும், செப்பனிட்டுக் கொண்டும் இருக்க வேண்டும்.
கூவம் ஆற்றையும், அடையாறு ஆற்றையும் ஆண்டுக்கொரு முறை 5,000 அல்லது 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தால் தான், இங்கு திராவிட கட்சிகள் சுருட்ட வேண்டியதை சுருட்டி கட்சி நடத்த முடியும்.
ஆக, அறிவார்ந்த தமிழக அதிகாரிகளும், அறிவு கொண்ட அமைச்சர்களும் அரசு செலவில் ஒரு நடை அந்த சபர்மதி ஆற்றையும், அதை சுத்தப்படுத்தி வைத்திருக்கும் முறையையும் ஒரு இன்பச் சுற்றுலாவாக சென்று வேடிக்கை பார்த்து விட்டு வேண்டுமானால் வருவரே தவிர, அந்த திட்டத்தை இங்கு செயல்படுத்த முயலவே மாட்டர் என்பதுதான் நிதர்சனம்.
அக்கறையுடன் செயல்பட்டவர் கருணாநிதி!
எஸ்.செபஸ்டின்,
சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில் அருந்ததியர் இன மக்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும்
முன்னேற்றம் பெறாமல் உள்ளனர். பட்டி யல் இனத்திற்கான 18 சதவீத இட
ஒதுக்கீடில், அவர்கள் பயன் பெறுவது மிகவும் குறைவாக உள்ளது என்பதை, அப்போதே
அறிந்திருந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.
இதனால், கருணாநிதி ஆட்சி காலத்தில், 2008ம் ஆண்டு ஐகோர்ட் ஓய்வு நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அதன்
பரிந்துரையின் படி, அதே ஆண்டு நவ., 27ல் அருந்ததியருக்கென 3 சதவீத
உள்ஒதுக்கீடு சட்டமாக கொண்டு வரப்பட்டது. அருந்ததியர் சமூகத்தினர் மேம்பாடு
அடைய வேண்டும் என்ற அக்கறையுடன் தனியாக உள் ஒதுக்கீட்டை ஏற்படுத்தி
கொடுத்தவர் கருணாநிதி.
இந்த உள்ஒதுக்கீட்டை பிற அரசியல்
கட்சியினரோ, பிற ஜாதி கட்சியினரோ பெரிதாக பாராட்டவில்லை. சிலர் இதை
கண்டுகொள்ளவில்லை. ஆனால், சிலர் இதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு
தொடுத்தனர்.
பல்வேறு தடைகளை தாண்டி, சமீபத்தில் உச்ச
நீதிமன்றத்தில், அருந்ததியருக்கான இந்த உள்ஒதுக்கீடு 3 சதவீதம் செல்லும்
என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த அருந்ததியர்
சமுகத்தினரின் முன்னேற்றத்திற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
ஆனால்,
இதையும் சிலர் அரசியல் செய்கின்றனர். அருந்ததியர் சமூக வளர்ச்சிக்கு
உள்ஒதுக்கீடு என்ற விதையை ஊன்றிய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை
பாராட்ட மனமில்லாமல் இன்னமும் சிலர் மவுனம் சாதிக்கின்றனர்.
தடுப்பணைகள் கட்ட வேண்டும்!
வி.எச்.கே.ஹரிஹரன்,
திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்: பிரேமலதா பேச்சை
கேளுங்க... காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட
ஆயத்தமாகிறது. அதை கட்டினால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்
குறைந்துவிடும் என்று, தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் கொந்
தளிக்கின்றனர்.
ஆவேசம் நியாயமானது தான் ஆனால், தமிழகத்தை கேட்காமல்
கர்நாடக அரசு தானாகவே முன்வந்து அணைகளை திறந்துவிட்டு, தமிழகத்துக்கு
தண்ணீர் தருகிறது.
இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த
நிகழ்வு புலப்படுத்துகிறது. ஒரு டி.எம்.சி., தண்ணீர் தினமும் தமிழகத்திற்கு
கர்நாடகம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும்,
உடன்படாத கர்நாடக அரசு இயற்கை அன்னையின் முன்னே மண்டியிட்டு உள்ளது.
ஒரு
டி.எம்.சி., தண்ணீர் தர மறுத்த கர்நாடக அரசு, ஒரு லட்சம் கன அடி தண்ணீரை
திறந்துவிட வேண்டிய சூழலை உருவாக்கி, இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து
அணைகளும் நிரம்ப செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் சென்றும் காவிரி பிரச்னையில் எதையும் சாதிக்க முடியாத தமிழக அரசு இனியாவது தண்ணீரை சேமிக்க வேண்டும்.
யாருடைய
தயவும் எதிர்பார்க்காமல் தொலைநோக்குப் பார்வையோடு நமக்கு கிடைக்கும்
தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் தடுக்க, ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்து
தண்ணீரை சேமிக்க வேண்டும்.
விவசாயத்துக்கும், குடிநீருக்கும்,
தொழில்களுக்கும் யாரிடமும் இனிவரும் காலங்களில் மண்டியிடாத தன்னிறைவு
பெற்ற நாடாக தமிழகத்தை மாநில அரசு ஆக்க வேண்டும் என்று தே.மு.தி.க.,
பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
மழைவெள்ளம்
வந்தால் அரசியல்வாதிகள், விவசாயிகள் வறட்சி காலத்தை மறந்துவிடுவர்.
தண்ணீர் மிகுதியாக இருக்கும் காலத்திலேயே தட்டுப்பாடு காலத்துக்கும்
வேண்டிய முன் எச்சரிக்கையை நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த சங்கமும், அரசியல்
கட்சியும் போராட்டம் நடத்துவது இல்லை.
பிரேமலதா ஆலோசனை
காலத்துக்கு ஏற்றது. ஏற்கனவே நீர் மேலாண்மை நிபுணர்கள்
வலியுறுத்தியுள்ளனர். சரியான இடங்களில் தரமான தடுப்பணைகள் அமைத்தால்,
எதிர்காலத்தில் அண்டை மாநிலங்களுடன் தண்ணீருக்காக மோத வேண்டாம்.