PUBLISHED ON : ஆக 27, 2024 12:00 AM

மரகதம் சிம்மன், கலிபோர்னியா,அமெரிக்கா நாட்டில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: நம் பிரதமர் நரேந்திரமோடி, ஒரு சமாதான துாதுவராகரஷ்யாவிற்கும், தற்போது உக்ரைனுக்கும் சென்று வந்திருப்பது, நாம் பெருமைப்படுவதற்குரிய விஷயமாகும். ரஷ்யாவுக்கும்,உக்ரைனுக்கும் கடும் போர் நடந்து, அதை உலகிலுள்ள அனைத்து நாடுகளும்வேடிக்கை பார்த்துக் கொண்டோ அல்லது எப்படி நடுவில் புகுந்து செயல்படுவது என்றோ தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் நம் பிரதமர் மோடி, தைரியமாக இரண்டு நாடுகளுக்கும் சென்று, 'போர் செய்வதால் எந்த பயனுமில்லை; எல்லாவற்றையும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்' என்று அவர்களுக்கு புரியும்படி எடுத்துக் கூறியது,மிகவும் வரவேற்க வேண்டிய செயலாகும்.
ரஷ்யா - உக்ரைன் போரில் தாய்லாந்து, இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் எந்த பக்கமும் சேராமல் நடுநிலை வகிக்கின்றன. சீனா ஒரு வல்லரசு நாடாக இருந்தும், இவ்விஷயத்தில் தலையிடவில்லை.
இந்த நாடுகள் செய்ய முற்படாத செயலை, சமாதானப் புறாவாக நம் பிரதமர் கையிலெடுத்து செய்வதை கண்டு நாம் பெருமைப்பட வேண்டும். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையில் துாதராக பகவான் கிருஷ்ணர்செயல்பட்டது போல நம் பிரதமர் செயல்படுகிறார்.
அதற்காக, ரஷ்யா, உக்ரைனை பாண்டவர்கள், கவுரவர்கள் என,குறிப்பிடவில்லை. கிருஷ்ணர் போல மோடி துாது சென்றுள்ளார் என்று தான் சொல்ல வருகிறேன். எப்போதும் இரண்டு பேர் சண்டை போடும்போது யார் முதலில்சண்டையை நிறுத்துவது என்று யோசிக்கத் தோன்றும்; இதை, 'ஈகோ' வந்து தடுக்கும்.
அப்போது, நடுவில் ஒரு பெரியவர் வந்து சமாதானம் செய்து வைத்தால்நன்றாக இருக்குமே என்று தான் தோன்றும்.நம் பிரதமர் மோடி தைரியமாக எடுத்துள்ள இந்த நடவடிக்கையால், இரண்டு நாடுகளும் சண்டையை நிறுத்தி, சமாதானத்தை நோக்கி முன்னேறும் என, நம்புவோம்.
நாம் தான் இறுதி செய்ய வேண்டும்!
வெ.சீனிவாசன், திருச்சியில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: கொள்கை ரீதியாக, தி.மு.க.,வும், பா.ஜ.,வும் வெவ்வேறு துருவங்கள்.
தேசம்,
தேசியம்,ஒற்றுமை, ஒருமைப்பாடு, வளர்ச்சி, ஊழலில்லா நிர்வாகம், தீவிரவாதம்,
பிரிவினைவாதத்தை அடியோடு ஒழித்தல் போன்ற கோட்பாடுகளில் பா.ஜ.,க்கு
நம்பிக்கை.
இனம், மொழி, மதம், ஜாதிகள், ஊழல்,ஹிந்துக்கள் விரோத,
சனாதன தர்ம அவமதிப்பு,மைனாரிட்டி தாஜா, மத்திய அரசு, ஆளுநர்விரோத போக்கு,
கடனுக்குமேல் கடன் வாங்கி இலவசங்கள், வாக்குக்குப் பணம், பிற
கவனிப்புகள்,மறைமுக பிரிவினைவாதம், குடும்ப ஆட்சி போன்றவைகளில்
தி.மு.க.,விற்கு நம்பிக்கை.
எனவே இருவரும், நேரடியாகவோ, ரகசியமாகவோ
இணைந்துபயணிக்க வாய்ப்பில்லை; அப்படியே சூழ்நிலைகள் காரணமாக இணைய வேண்டி
வந்தாலும், அது நெடுநாள் நீடிக்க வாய்ப்பில்லை.
அப்படி நடந்தால், தி.மு.க., கூட்டணி பிளவு படலாம். அ.தி.மு.க., இதை வைத்து அரசியல் செய்ய முயல்கிறது.
தொடர்ந்து
தோல்விகளையே அடைந்து வரும் அ.தி.மு.க.,விற்கு, 2026ல் வெல்ல வேண்டிய
கட்டாயம் உள்ளது. தமிழகத்தில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டால்,
அது மேலும் பெரிய பிரச்னைகளை உருவாக்கக் கூடும்.
மத்திய அமைச்சர்
ராஜ்நாத் சிங், கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்றுச் சென்றார்.
அமைச்சர் தன் கடமையைச் செய்துள்ளார்; அவ்வளவு தான்! அதற்குமேல் அதில்
அர்த்தம் கண்டுபிடிக்க முயல்வது சரியானது அல்ல.
வரும் 2026 சட்டசபை
தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படாமல்
அப்படியேஇருந்தாலும்கூட, ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்திஅலையால், கூட்டணி
வெற்றி அடையக்கூடிய இடங்கள் குறையலாம்.
நடிகர் விஜய் ஜோசப்பின்
புதிய கட்சி, அ.தி.மு.க.,வின் வாக்கு வங்கியைப் பாதிக்கக்கூடும். பா.ஜ.,
கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகும், எதிர்பார்த்த அளவு முஸ்லிம்கள்
வாக்குகள் கிட்டவில்லை.
எனவே வரும் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க.,
விற்கு அடுத்த இரண்டாவது பெரிய கட்சி, முக்கிய எதிர்க்கட்சி ஆகிய இடங்களை,
எந்த கட்சி பிடிக்கிறது என்பதை, நாம் தான் இறுதி செய்ய வேண்டும்.
கஞ்சாவை எதி ர்த்து போராடுவோம்!
பி.ராஜேந்திரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தஞ்சாவூர் மாவட்டம்,
பாப்பாநாட்டில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்செய்யப்பட்டதைக்கண்டித்து,
ஏராளமான மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட செய்தியைக் கண்டேன். வணிகர்கள் கூட
கடைகளையும் அடைத்து, உண்ணாவிரத போராட்டத்திற்கு தங்களதுஆதரவை தெரிவித்து
உள்ளனர்.
கஞ்சா பழக்கம் உள்ள ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த செயலில்
ஈடுபட்டிருக்கிறது; அதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்குசிகிச்சை அளிக்க மறுத்த பட்டுக்கோட்டை தலைமை அரசு
மருத்துவருக்கு விளக்கம் கேட்டு, ஒரத்தநாடு நீதிமன்றம் நோட்டீஸ்
அனுப்பிஉள்ளது. சரியானநடவடிக்கை எடுக்கவில்லை என, பெண் இன்ஸ்பெக்டர் சூரியா
என்பவரும்இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
கஞ்சா
பழக்கம் கொண்ட நபர்கள், ஒரு குரூப் ஆக சேர்ந்து இதுபோன்ற சமூகவிரோத
செயல்களில் இறங்குகின்றனர். கஞ்சா விற்கவேநகரத்தின் பல பகுதிகளில்,இதற்கென
நியமிக்கப்பட்ட ஆட்கள் நிற்கின்றனர். பணத்தை வாங்கி பொட்டலங்களை
கொடுக்கின்றனர். கல்லுாரிகளை ஒட்டி இருக்கும் சிறு கடைகள் கூட, சில
மாணவர்களுக்கு கஞ்சாவை வினியோகம் செய்கின்றன.
மாணவ சமுதாயத்தை
இதுபோன்ற பழக்கங்களுக்கு அடிமையாகாமல் காக்க, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது
போல், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக,
மதுவின் தாக்கத்திற்கு அடிமையானவர்கள் தான், இந்த கஞ்சாவில் அப்படி என்ன
போதை இருக்கிறது என்று தெரிந்து கொள்ள, நண்பர்களுடன் சேர்ந்து இந்த
பழக்கத்திற்கும் அடிமையாகின்றனர்.
ஆகவே, முதலில் மதுக்கடைகளை மூடி
அரசு இப்படிப்பட்ட மக்களை கரையேற்றாத வரை, கஞ்சா போன்ற போதை பொருட்களின்
ஆதிக்கமும் பெருகிக் கொண்டுதான் இருக்கும்.
பாப்பாநாட்டில் நடந்த
கூட்டு பலாத்காரத்தை எதிர்த்து போராடிய மக்களையும், வணிக அமைப்புகளையும்
பாராட்டுவோம். பாப்பா நாடு ஒரு முன்மாதிரி தான். கஞ்சாவின் ஆதிக்கம்
பெருகிக் கிடக்கும் இடங்களில் அனைத்து மக்களும் இதுபோன்று போராட
முன்வரவேண்டும்.

