/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
விட்டு கொடுப்போர் கெட்டு போவதில்லை!
/
விட்டு கொடுப்போர் கெட்டு போவதில்லை!
PUBLISHED ON : ஆக 19, 2024 12:00 AM

என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில், பா.ஜ., அரசு, அவரது உருவம்பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவது பாராட்டுக்குரியது.
இதன் வாயிலாக தமிழக அரசியல் தலைவர்கள் யாருக்கும் கிடைக்காத பெருமை, கருணாநிதிக்கு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.மத்திய அரசுக்கும், திராவிட மாடல் அரசுக்கும் இடையே, எத்தனையோ முட்டல் மோதல்கள் இருக்கின்றன. அப்படி இருந்தும், எதையும் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி, தலைவர் கருணாநிதிக்கு பெருமை சேர்த்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
'இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்' என்று திருவள்ளுவர் சொன்னது போல, பிரதமர்மோடி நடந்து கொண்டிருக்கிறார்; அவரைப் பாராட்ட தான் வேண்டும்.
அதே போல், முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழக கவர்னருக்கும் இடையே எத்தனையோ கருத்து மோதல்கள் இருந்தாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல், கவர்னர் கொடுத்த தேநீர் விருந்தில், முதல்வர் கலந்து கொண்டதையும் பாராட்ட வேண்டும்.விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.
ஆவின் அராஜகம்!
பிரபு சங்கர், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: கடந்த 40 ஆண்டுகளாக மாதாந்திர சேவைக் கட்டணம் வழங்கி, ஓர் அன்பர் வாயிலாக ஆவின் பால் வாங்கி வருகிறோம்.
ஆவின் அலுவலகம் சென்று மாதா மாதம் பால் அட்டைகளை வாங்கி வந்த நாங்கள், கொரோனா பாதிப்புக்குப் பின், அட்டைகளுக்கான விலையைக் கொடுத்து அவரையே வாங்கித்தரச் சொல்கிறோம். இப்போது இரண்டு, மூன்று மாதங்களாக, அட்டைகளை இணைய வழியாக வாங்கிக் கொள்ளும்படி வாடிக்கையாளர்களை ஆவின் நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது. அதோடு, எங்கள் சேவையாளரிடம், அட்டை நேரடி விற்பனைக்குக் கிடையாது என்றும் சொல்லியிருக்கின்றனர்.
சரி, இவருக்கும் சிரமம்வேண்டாம் என்று இணையம் வாயிலாக, முதல் முறையாக இந்த மாதம் வாங்கினோம். ஒரு லிட்டர் அட்டைக்கான விலையோடு, சேவை கட்டணம் என்ற பெயரில்,18 ரூபாயும் சேர்த்து வாங்கிக் கொண்டது ஆவின் நிர்வாகம். பிறகு, இணையத்தில் ஆவின் அறிவுறுத்தியபடி அட்டை வாங்கிய ரசீதை ஒரு நகல் எடுத்து, எங்கள் சேவையாளரிடம் கொடுத்தோம்.
இங்கே தான் வந்தது வம்பு! அதாவது, அவர் அந்த நகலை, ஆவின் அலுவலகத்திடம் காட்டி, பால் அட்டைகளை வாங்கிக் கொள்ள வேண்டுமாம்; அதைவைத்து தான் பால் வாங்கிக்கொள்ள வேண்டுமாம்!இது என்னக் கூத்து? நேரடியாகவே அட்டைகளை வாங்கிக் கொள்ளும்பழைய நடைமுறையை, எதற்காக நிறுத்த வேண்டும்?
ஆவின் நிறுவன நஷ்டத்தைக் குறைக்க, இணையத்தில் வாங்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் 18 ரூபாய் வசூலிப்பதற்காக இந்த ஏற்பாடாம். சென்னை நகரில் 2 லட்சம் பேர் ஆவின் பால் நுகர்வோராகஇருந்தால், அவர்கள்அனைவரும் இணையத்தில்அட்டைகளை வாங்குவார்களானால், 36 லட்சம்ரூபாய் ஒவ்வொருமாதமும், ஆவின் நிறுவனத்துக்கு சும்மாவாச்சும் போகிறது!
இணையத்தைப்பயன்படுத்தவே தெரியாதவாடிக்கையாளர்கள் என்ன செய்வர் என்பது இன்னொரு கேள்வி!சரி, அலுவலகம் சென்று இணைய ரசீது நகலைக் காட்டி அட்டைகள்வாங்க வேண்டாம், நேரடியாக அந்த நகலை, பால் வினியோகிக்கும் முகவரிடம் காட்டிவாங்கிக் கொள்ளலாமே என்று பார்த்தால், முகவரால் அப்படிச் செய்ய முடியாது. ஏனென்றால், வாடிக்கையாளர் பால் வாங்கியதை அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் தேதியில்துளை போட்டுக் கொடுக்கும் பணிமுறை அவருக்கு!
அதோடு, எத்தனை நாள் வாடிக்கையாளர் பால் வாங்கவில்லையோ, அத்தனை நாட்களுக்குக்கணக்குப் போட்டு ஆவின் நிறுவனத்தில்இருந்து பணம் திரும்பப்பெறும் வாய்ப்புஇருக்கிறது.ஆக, ரசீது நகலை முகவரால் எப்படி கையாள முடியும்? எப்படி அந்தக் கணக்கைக் காட்ட முடியும்அல்லது வாடிக்கையாளரால் தான் பணத்தைத் திரும்பப் பெற முடியும்?
இதையெல்லாம் கைவிட்டு, 'அட்டைக்கு 10 ரூபாய் கொடுங்கப்பா...' என்றால்,கொடுத்து விட்டுப் போகிறோம்... இதைக் கேட்க, ஆவினுக்கு என்ன தயக்கம்? எந்த, 'அறிவுஜீவி' இத்தகைய ஐடியாவைக் கொடுத்தாரோ தெரியவில்லை.
சுடுகாடு சுரண்டல் தர்மமா?
வேலாமூர் கோபால்சாமி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்:
சாலை விபத்து, தற்கொலை, சந்தேக மரணம், உடல் நல பாதிப்பால் இறப்பு போன்றவற்றிற்கு பிரேத பரிசோதனை, இறப்பு சான்றிதழ், அமரர்ஊர்தி, மொட்டை அடித்தல், தகனம் எனும் பெயரில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள், இறந்தவர்களின் குடும்பங்களை கசக்கி பிழிந்து, 60,000 ரூபாய் வரை லஞ்சமாக பிடுங்கும்
அவலம் குறித்த செய்தி, நம் 'தினமலர்' நாளிதழில் அண்மையில் வெளியாகியுள்ளது, மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.வாழும்போது, ஊழல் லஞ்சம் வரி சுமை, விலைவாசி ஏற்றம், கள்ளச்சாராய மரணம் போன்றவற்றால் நிலைகுலைந்து போகும் விளிம்பு நிலை, நடுத்தர வர்க்கம், இறந்த பின்பும் கூட லஞ்சப்பேய்களின் கரங்களில் சிக்கிய அவர்களின் குடும்பங்கள், நிம்மதியற்று, நிற்கதியாய் தவிப்பது, எந்த விதத்தில் நியாயம்?
ஏழை எளிய நடுத்தர மக்கள் ரத்தத்தை உறிஞ்சி குடிப்பது தான், விடியலாட்சியின் லட்சணமா? மாடாய் உழைத்து, ஓடாய் தேய்ந்தவர்களை, இறந்த பின்பு கூட சல்லி காசு மிச்சம் வைக்காது, ஓட்டாண்டியாக்குவது தான் நல்லாட்சியா?
'தினமலர்' நாளிதழ் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் வெளியாகும் அவலங்களை களைந்தாலே, விடியல் ஆட்சி பிறக்குமே! ஆட்சியாளர்களின்சிற்றறிவிற்கு, இது கூடவா எட்டாமல் போகிறது?
இறந்தவர்களின் சடலத்தில் பணம் பிடுங்கும் ஈனச்செயல் கண்டு, பிணம் தின்னும் கழுகுகள், வானத்தில் வட்டமிடும் வல்லுாறுகள், ஓநாய் கூட்டங்கள்கூட வெட்கி தலைகுனியும்! அரசு அதிகார வர்க்கத்தினரிடம், இது அறவே இல்லாமல் போனது ஏன்? ஆள்வோர்களிடம், மக்கள் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான்... 'பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற பழமொழியைமெய்யாக்காமல், குவீர்களா?

