/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தொண்டர்களே... என்ன செய்ய போகிறீர்கள்?
/
தொண்டர்களே... என்ன செய்ய போகிறீர்கள்?
PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM

எம்.எஸ்.ரவி சங்கர், ைஹதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் தான் காணாமல் போய்விட்டனர் என, கனிமொழி கூறியிருக்கிறார்.
அழிக்கப்படுவதற்கு, தி.மு.க., எங்கே இருக்கிறது... அது தான் கருணாநிதியின் குடும்ப கட்சியாகி, 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதே!
கடந்த, 1969ல், கருணாநிதி முதல்வராக பதவியேற்றது, 1971ல் மதுவிலக்கு ரத்தானது, 1972ல் புரட்சித் தலைவரை தி.மு.க.,விலிருந்து வெளியேற்றியதுடன், 'சென்னையில் கருணாநிதி, டில்லியில் மாறன்' என, இவ்விரு குடும்பங்களின் கட்டுப்பாட்டில் கட்சி வந்தது, முதல் இன்னிங்ஸ்.
கடந்த, 1982ல் ஸ்டாலின், இளைஞர் அணித் தலைவர், 1984 முதல் எம்.எல்.ஏ., 1996 - 2003 காலத்தில், போனசாக சென்னை மேயர் பதவி, 2006ல் துணை முதல்வர் என்ற பெயரில் பதவி, இவருக்குப் போட்டியாக இருந்த வைகோ, கட்சியிலிருந்து வெளியேற்றம் என, இரண்டாவது இன்னிங்ஸ்.
ஒரு இடைச்செருகல்...
சுதந்திரம் கிடைத்த அடுத்த நாளே, நேருவைக் கூப்பிட்டு காந்தி, காங்கிரசைக் கலைத்து விடுமாறு அறிவுறுத்தினார். நேரு கேட்கவில்லை. கட்சியைக் கையகப்படுத்தினார்.
பின்னால் வந்த இந்திரா, கட்சியை தன் வசப்படுத்த, அதை இரண்டாகப் பிளந்து, 1969ல் 'மனசாட்சி ஓட்டு' என நாடகமாடி வெற்றி கண்டார். இப்போது, பேரன் ராகுல் வரை அது தொடர்கிறது.
இப்பொழுது, தி.மு.க.,வும் சரி, காங்கிரசும் சரி, 'கருணாநிதி குடும்ப முன்னேற்ற கழகம்' என்றும், 'நேரு சோனியா குடும்ப கட்சி' என்றும், தம் கட்சிப் பெயர்களை மாற்றி விடலாம்.
இந்த இரு கட்சித் தொண்டர்களே... நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
எல்லாரும் மூடர்களே!
எஸ்.ராமசுப்பிரமணியன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பல ஆண்டுகளுக்கு முன்
மேஜர் சுந்தரராஜனையும், முத்துராமனையும் வைத்து, ஜெமினி பிக்சர்ஸ்
எல்லோரும் நல்லவரே என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வெளியிட்டது.
அதில்
மேஜர், கஞ்சன், கருமி, பிசினாரி, கொடூரன், மனசாட்சி இல்லாதவன் ஆகிய கல்யாண
குணங்கள் அனைத்தையும், ஒருங்கே கொண்டவராக நடித்து இருப்பார்.
ஊரே
அவரை வெறுக்கும். கடைசியில் அவர் இறக்கும் போது, அவரது சடலத்தை சுமக்கக்
கூட நான்கு பேர் இல்லாமல், ஒரு கட்டை வண்டியில் சடலத்தை கிடத்தி,
மயானத்துக்கு இழுத்து செல்வது போல, காட்சி அமைக்கப் பட்டிருக்கும்.
தற்போது, தமிழ்நாட்டில் நடக்க இருப்பது, லோக்சபா தேர்தல்.
தேர்தல்
என்று ஒன்று நடந்தால், அதை முன்னிட்டு, நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகள்
என்பதை வழங்குவதை, அரசியல் கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.
மகுடிக்கு மயங்கி ஆடும் நாகம் போல, அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு வாக்குறுதிகளுக்கு மயங்கி, நாமும் ஓட்டு போட்டு விடுவோம்.
தற்போதைய இரண்டே இரண்டு 'டுபாக்கூர்' வாக்குறுதிகளை மட்டும் எடுத்து அலசி ஆராய்வோம்...
'நாற்பதும் நமதே! நாடும் நமதே!! நமது கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு
முழுதும் உள்ள மகளிர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும்'
என்பது.
உ.பி., - ம.பி., - இ.பி., - ராஜஸ்தான், மே.வங்கம்,
பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் இருக்கும் மகளிர்க்கு, எந்த நிதி
ஆதாரத்தை வைத்து உரிமைத்தொகை வழங்குவர்?
'எள்ளு எண்ணெய்க்கு காயுது;
எலிப்புழுக்கை எதற்கு காயுது?' என்ற ஒரு சொலவடை உண்டு. தமிழ்நாடே 8
லட்சத்து சொச்சம் கோடி கடனில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்த
நிலையில்காஷ்மீர் முதல் குமரி வரையிலுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை
வழங்குவராம்.
நாடு முழுதும் உள்ள டோல்கேட்கள் அகற்றப்படுமாம்.
டோல்கேட்டுகள்
என்பவை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் வருபவை. ஒரு மாநில அரசால், நாடு
முழுதும் உள்ள டோல்கேட்டுகளுக்கு மூடு விழா நடத்திட இயலுமா? யப்பா... கண்ணை
கட்டுதே!
'இண்டியா' கூட்டணியில் 28க்கும் மேலான கட்சிகள் உள்ளன.
அவற்றில் தள்ளுபடியானது போக மீதி எத்தனை என்பது, தேர்தல் முடிந்த பின்னர்
தான் தெரியவரும். 'இண்டியா' கூட்டணியே பிரதமர் வேட்பாளர் என்ற திருவாய்,
அந்த பிரதமரை 'மியூசிக்கல் சேர்' வைத்து தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற
ரகசியத்தைப் பின்னால் சொல்லும், கேட்டுக் கொள்வோம்!
எல்லாரும் மூடர்களே!
நியாயம் கூறுங்களேன்!
ஏ.அஸ்மாபாக்
அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
வாகனங்களை வாங்கும்போதே, ஆயுட்கால சாலை வரியாக, ஆயிரக்கணக்கில் அரசு வசூல்
செய்கிறது. நாட்டின் எந்த இடத்துக்கும், தடையின்றி சென்று வரவே, சாலை வரியை
மக்கள் செலுத்துகின்றனர்.
இது தவிர, ராமேஸ்வரம் போன்ற
ஊர்களுக்குள் நுழைய, கார்களுக்கு ஒவ்வொரு முறையும், 100 ரூபாய் நுழைவு
கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாகூர் நகருக்குள் செல்ல, நுழைவு
கட்டணம்வசூலிக்கப்படுகிறது.
இப்படி பல ஊர்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் நுழைவு வரி விதிப்பது வாடிக்கையாகி விட்டது.
இது
ஒரு புறமிருக்க, தமிழக நெடுஞ்சாலைகளில், 63 இடங்களில் டோல்கேட் அமைத்து,
மிக அதிகமான ரூபாய், கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுகிறது. வாகன
உரிமையாளர்கள் மீது விதிக்கப்படும் அபராதமாகவே இதைக் கருத வேண்டியுள்ளது.
இது
போதாதென்று, தமிழகத்தில் மேலும் 20 இடங்களில், டோல்கேட் அமைக்க அரசு
திட்டமிட்டுள்ளதாக, நாளிதழ்களில் செய்தி படித்து, அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழகத்தை
காட்டிலும்அதிக கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை உள்ள மஹாராஷ்ட்ரா
மாநிலத்தில், தமிழகத்தை காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் டோல்கேட் உள்ளது,
கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயம்.
நம் மாநிலத்தைப் பற்றிச்சிந்திக்கும்போது, 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகள் மூலம் தோராயமாக 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்படுகிறது.
எரியும்
நெருப்பில் எண்ணெய் விட்டது போல், ஏப்ரல் 1 முதல் டோல் கட்டணம் உயரப்
போகிறது என்ற செய்தி, மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. நல்ல வேளை...அது
தள்ளிப்போகிறது.கட்டணம் உயர்த்துவது நியாயமா?

