PUBLISHED ON : ஜூன் 20, 2024 12:00 AM

பி.ஜோசப், திருச்சியில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'ஜூலை 1ம் தேதியில் இருந்து, அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வீடுகளுக்கான மின்கட்டணத்தை தங்கள் சொந்த பணத்தில் இருந்து அவர்களே செலுத்த வேண்டும்' என, வடகிழக்கு மாநிலமான அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே அதி அற்புதமான, அருமையான, பாராட்டப்பட வேண்டிய அறிவிப்பு இது.
அரசியலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அமைச்சர்களோ, பார்லி., மற்றும் சட்டசபை உறுப்பினர்களோ அன்றாடங்காய்ச்சிகளோ, பஞ்சத்தில் வாடுபவர்களோ அல்லர்; அனைவருமே கோடீஸ்வரர்கள் தான்.
நாகர்கோவில் பா.ஜ., - எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி மாதிரி எங்காவது, ஏதாவது ஓரிரண்டு மக்கள் பிரதிநிதிகள் இருக்கலாம். 99 சதவீதம் பேர், கோடீஸ்வரர்களே!
தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்குள்ள சாதாரண வார்டு உறுப்பினர்கள் கூட, கோடிகளில் உழன்று கொண்டிருப்பவர்களே!
இத்தனை ஆண்டுகளாக, ஆண்டு கொண்டிருந்த அரசுகள் அனைத்தும், மக்கள் பிரதிநிதிகளின் பின்னணி குறித்து ஆராயாமல், சகட்டுமேனிக்கு பல்வேறு விதமான சலுகைகளை வாரிவாரி வழங்கிக் கொண்டிருந்தன.
அந்த சலுகைகளில் ஒன்று தான், அமைச்சர்களுக்கு வீடுகளையும் கொடுத்து, அந்த அமைச்சர்களின் வீடுகளுக்கான மின்கட்டணத்தையும் அரசே செலுத்திக் கொண்டிருந்தது.
அதிகாரிகளுக்கு அரசு, குடியிருப்புகள் ஒதுக்கும். அந்த ஒதுக்கீடு அவர்கள் பணிக்காலத்தில் இருக்கும் வரை தான்.
பணிக்காலம் முடிந்து இளைப்பாற துவங்கியதும், அந்த குடியிருப்பை, எப்படி இருந்ததோ அப்படியே திரும்பக் கொடுத்து விட வேண்டும்.
அரசியல்வாதிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவது, பிரம்ம பிரயத்தனம் தான். கடந்த ஆண்டு சோனியாவின் மகள் பிரியங்கா, புதுடில்லியில் குடியிருப்பை காலி செய்யாமல் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்ததை, அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது.
அரசு அதிகாரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் அரசு குடியிருப்பு வழங்கும் போது, அவர்களுக்கு எச்.ஆர்.ஏ., என்று சொல்லப்படும் வீட்டு வாடகைப் படி வழங்கப்பட மாட்டது. அதுமட்டுமின்றி, மின்வாரியத்தில் நிலைக் கட்டணம் என்று ஒரு தொகை வசூலிப்பது போல, 'ஸ்டாண்டர்டு லைசென்ஸ்' கட்டணம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை, அவரவர் அடிப்படை சம்பளத்துக்கு ஏற்றவாறு சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்வர்.
அமைச்சர்களுக்கும், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கும் இந்த கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறதா என்பது தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும், நல்ல சந்தர்ப்பத்தில், ஒரு நல்ல முடிவை அசாம் மாநில பா.ஜ., முதல்வர் ஹிமந்த் பிஸ்வ சர்மா எடுத்துள்ளார்.
இந்த நல்ல முடிவை, ஜம்மு- - காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரையிலான அத்தனை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும்.
மோடியின் உயரம் நமக்கு பாடம்!
ஜி.ராமநாதன்,
திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இப்பகுதியில்,
மதுரை வாசகி முனைவர் மீனாட்சி பட்டாபிராமன் என்பவர், 'கர்வம்
பிடித்தவருக்கு கிடைத்த அடி' என, பிரதமர் மோடியை கடுமையாக சாடி உள்ளார்.
அரசியல்வாதியாக மோடி, 400 தொகுதிக்கு இலக்கு நிர்ணயித்ததில் என்ன தவறு?
ஸ்டாலின், 'இந்தியாவை காக்க 40 தொகுதி வெற்றி இலக்கு' என கூறினால் தவறு
இல்லை; ஆனால், மோடி 400 இலக்கு என்பது ஆணவம் என்றால், அது என்ன மாதிரி
புரிதல்?
மோடி தன்னை கடவுளின் குழந்தை என்று தான் கூறினார்.
கடவுளின் அவதாரம் என்று எங்கும் கூறவில்லை. ஆன்மிக ஈடுபாடு உள்ளோர், தங்களை
இறைவனின் குழந்தை என கூறுவது இயல்பு தானே. இதில், குற்றம் காணலாமா?
ராமர்
கோவில் எழுப்பியது மோடிக்கு பெருமையே. அதேபோல, காஷ்மீருக்கு சிறப்பு
அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கம் போன்ற நல்ல
நடவடிக்கையில் இதுவும் ஒன்று. மோடி என்றுமே தன் செயலால் இறுமாப்பு கொண்டவர்
அல்ல.
அதெல்லாம் போகட்டும்... 'இண்டியா' கூட்டணிக்கு தற்போது
கிடைத்திருப்பது பெருமைமிகு வெற்றியா... சில மாநிலங்களில் செல்வாக்காக
இருக்கும் கட்சிகளால் கிடைத்த வெற்றி தான் அது. உதாரணமாக,
தமிழகத்தில்தி.மு.க.,வுக்கு மக்கள் அளித்த ஓட்டுகள், கூட்டணி கட்சியான
காங்கிரசுக்கும் விழுந்துள்ளன.
காங்கிரஸ் போன்ற பாரம்பரியமான தேசிய
கட்சி 100 தொகுதிகளில் கூட வெல்ல முடியாமல், மோடிக்கு கிடைத்திருப்பது
தோல்வி என கூறுவது, இருட்டில் பேய் பயம் தெரியாமல் இருக்க உரக்கக் கத்துவது
போல் தான். இந்திய ஜனநாயகத்தின் பெருமையான சாதாரண குடிமகனும் நாடாள
முடியும் என்ற சாதனை புரிந்தவர் மோடி.
ரயில் நிலையத்தில் டீ
விற்றவராக இருந்து, இன்று 140 கோடி மக்களை ஆளும் தலைவராக உயர்ந்திருக்கும்
மோடியின் உயரம், ஒவ்வொரு சாதாரண இந்தியக் குடிமகனுக்கும் எழுச்சி தரும்
பாடம்.
மோடி இனி சாதிக்க எதுவும் இல்லை. அவர், தன் குணத்தாலும்,
செயலாலும் உயர்ந்த மனிதராக இருக்கிறார். அவரை குறை சொல்வது, நம் அறியாமை
என்று தான் சொல்ல வேண்டும்.
'ரிசர்வ்' பெட்டியில் ஆக்கிரமிப்பை தடுப்பது எப்போது?
ஏ.ஸ்ரீவாஸ்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 17 ம்தேதி,
கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு, உழவன் எக்ஸ்பிரஸ், 'ஏசி' முதல் வகுப்பில்
பயணம் செய்தேன். அதிகாலை, 3:00 மணி அளவில், கேபினை விட்டு வெளியில்
வந்தேன். அப்போது, ஒரு பெண், மூட்டை முடிச்சுகளுடன் திறந்திருந்த கதவருகில்
உட்கார்ந்து இருந்தார்.
சொல்லப் போனால், எல்லா கதவுகளும், திறந்தே
இருந்தன. 'எதற்கு மா இங்கே உட்கார்ந்திருக்கீங்க?' எனக் கேட்டேன்.
'பாத்ரூம் போவதற்கு வந்தேன்' என்றார்.
ரயில்வே போலீசார் இருவர்
இருந்ததை நான் பார்த்ததால், அவர்களிடம் புகார் செய்ய, அவர்கள் அறைக்குச்
சென்றேன். இருவரும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
வேறு வழி
தெரியாமல், டாய்லெட் சென்று திரும்பினேன். அப்போது அந்தப் பெண், உட்பக்கம்
நன்றாய் நகர்ந்து, கேபின் வாயிலிலேயே அமர்ந்திருந்தார்.
ஏற்கனவே
வடகிழக்கு மாநிலங்கள் செல்லும் வண்டிகளில், இம்மாதிரி ஆக்கிரமிப்புகள்
நடந்து வந்த நிலையில், தற்போது முன்னேற்றமாய், தமிழ் நாட்டுக்குள்
செல்லும் ரயில்களிலும் இந்த அட்டூழியம் ஆரம்பித்து விட்டது.
பயணியரின்
உடைமை களுக்கு, ரயில்வே பொறுப்பில்லை என்று தட்டிக் கழிக்காமல், உடனடியாக
காவலர்களை நியமனம் செய்ய வேண்டும். அதுவும், 'ஷிப்ட்' முறையில் அவர்கள்
பணியாற்றினால், வேலை நேரத்தில் துாங்காமல் இருப்பர்.