PUBLISHED ON : ஜூன் 15, 2024 12:00 AM

மரகதம் சிம்மன், கலிபோர்னியா, அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகம், புதுச்சேரியில், 40க்கு 40 இடங்களையும் தி.மு.க., ஜெயித்து என்ன பிரயோஜனம்? மத்தியில் ஒரு அமைச்சர் பதவி கூட பெற முடியவில்லையே... பா.ஜ.,வின் முருகன் மட்டுமே, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.
தமிழக மக்கள் இன்னும் கொஞ்சம் சிந்தித்து, அதிக ஓட்டுகளை பா.ஜ.,வுக்கு வழங்கியிருந்தால், அண்ணாமலை, தமிழிசை போன்றவர்கள் ஜெயித்திருந்தால், அவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் கிடைத்திருக்கும்; தமிழகத்துக்கும் பல நல்ல திட்டங்கள் கிடைத்திருக்கும்.
எப்போது பார்த்தாலும் தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராகவே நின்று சண்டை இடுவதால் என்ன பயன்? ராஜதந்திரமிக்க கருணாநிதி, 1970 மற்றும் 1980களில் மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா மற்றும் 2000வது ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த வாஜ்பாயுடன், தன் கொள்கை பேதங்களை ஒதுக்கி வைத்து, கூட்டணி அமைத்துள்ள வரலாறு ஸ்டாலினுக்கு தெரியாதா?
'அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது; நிரந்தர நண்பர்களும் கிடையாது' என்பதை, தமிழக முதல்வர் ஸ்டாலினும் புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் மோதல் தேர்தலுடன் முடிந்து விட்டதாக கருதி, இனியாவது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற வேண்டும். அப்போது தான், அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், மக்களை சந்தித்து ஓட்டு கேட்க வசதியாக இருக்கும்.
பழனிசாமி புத்திசாலி தான்!
டி.ஈஸ்வரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முன்னாள்
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை பகைத்தால் தான், லோக்சபா தேர்தலில்,
அ.தி.மு.க., மோசமான தோல்வியை அடைந்துள்ளது என்றும், வரும் சட்டசபை
தேர்தலில் கூட்டணியில் பா.ஜ.,வை சேர்க்க பழனிசாமி புத்திசாலிதனமான முடிவை
எடுக்க வேண்டும் என்றும், இதே பகுதியில் ஒரு வாசகர் கடிதம்
எழுதியிருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வின் தலைமை
ஒருங்கிணைப்பாளராக இருந்த போது தான் 2019- லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,
கூட்டணி, 39 இடங்களில் தோல்வி அடைந்தது. தேனியில் தன் மகன் ரவீந்திரநாத்தை
மட்டும் குறைந்த பட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.
பன்னீரின் ஊரான தேனியில் மட்டும் தான், அவருக்கு சொந்தமாக குறைந்த பட்ச
செல்வாக்கு இருந்தது. இந்த முறை தேர்தலில், அதுவும் அவரை விட்டு
போய்விட்டது; அதனால் தான் தேர்தலில் நின்று தோல்வி அடைந்தார். இதை,
அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
மத்தியில் இந்திர
பிரதமராவதற்கும், மாநிலத்தில் எம்.ஜி.ஆர்., முதல்வர் ஆவதற்கும் ஏற்றபடி,
ஒப்பந்தம் போட்டு, அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி அமைத்தனர்.
இதை போலத்தான் வாஜ்பாயை பிரதமராவதற்கும், ஜெயலலிதா மாநில முதல்வர்
ஆவதற்கும், அப்போதைய பா.ஜ., மாநில தலைவர்கள் ஒப்பந்தம் போட்டனர்.
அந்த
அடிப்படையில் தான் மத்தியில் மோடி பிரதமர் ஆவதற்கும், மாநிலத்தில்
அ.தி.மு.க., ஆட்சி அமைக்கவும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க பழனிசாமி
புத்திசாலிதனமாக செயல்பட்டார். அதனால் தான் முதல்வராக இருந்தபோது தமிழக
அரசின் முக்கிய நிகழ்ச்சிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில்
நடத்தினார். அதற்காக டில்லியில் இருந்து சென்னை வந்த அவரை வரவேற்க, தன்
மூத்த அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடன் விமான நிலையத்திற்கு சென்று
வரவேற்றார். இதே அரசு மரியாதையுடன் டில்லிக்கு வழி அனுப்பியும் வைத்தார்.
'முதல்வராக
உள்ள பழனிசாமி ஒரு மத்திய அமைச்சரை வரவேற்க விமான நிலையம் செல்வதா? அரசின்
மரபை மீறி விட்டார்' என, தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின், 'பா.ஜ.,வின்
அடிமை பழனிசாமி' என்று கடுமையாக விமர்சித்தார். பா.ஜ., வுடன் கூட்டணிக்காக
பழனிசாமி, அத்தனை விமர்சனங்களையும் தாங்கிக் கொண்டார்.
அ.தி.மு.க.,
மோடி தான் பிரதமர் என்றது. மத்திய அமைச்சரவையில் இடம் கேட்போம்
என்றெல்லாம், அ.தி.மு.க., சொல்லவில்லை. ஆனால் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை
மட்டும், பழனிசாமியை முதல்வராக பா.ஜ., இப்போது சொல்லாது என்றும், மேலும்
பா.ஜ., தான் 2026ல் ஆட்சி அமைக்கும் என்றும், ஊடகங்களின் கேள்விக்கு பதில்
சொன்னார். இது கூட்டணிக்கு உகந்த பேச்சாக அமையவில்லைஅப்போதிலிருந்து
தான்அ.தி.மு.க.,வினர், அண்ணா மலைக்கு பதில் சொல்லி ஒருவருக்கொருவர்
விமர்சித்து கூட்டணியை முறித்துக் கொண்டனர்.
அ.தி.மு.க.,வுடன்
கூட்டணி அமைக்க முதலில் அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை. அவருக்கு, 'பா.ஜ.,
தனித்து நின்று பலத்தைக் காட்ட வேண்டும்; இல்லை என்றால் அ.தி.மு.க.,வை
மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திற்கு பா.ஜ.,வை கொண்டு வர
வேண்டும்' என்பது தான் அண்ணாமலையின் வியூகம். அந்த வியூகம் இப்போது,
தி.மு.க., வெற்றிக்கு வழிவகுத்து விட்டது. எனவே பா.ஜ.,வுடன் அ.தி.மு.க.,
கூட்டணி குறித்து பழனிசாமி புத்திசாலிதனமாக தான் செயல்பட்டார். அதற்கு
பா.ஜ., மாநில தலைவர் அண்ணா மலை மட்டும் ஒத்துழைக்க வில்லை என்பதே,
நிதர்சனமான உண்மை.
சூரபத்மனை போற்றுவீர்களா!
குரு
பங்கஜி, சென்னை-யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்மையில்
கிருஷ்ணகிரி அருகே, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை படத்தை, ஆட்டின் தலையில்
மாட்டி, அமைச்சர் எஸ்.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட தி.மு.க.,வினர், ஆட்டின் தலையை
பொது இடத்தில் துண்டித்து கோரத்தாண்டவம் ஆடியுள்ளனர். இந்த சம்பவம்,
தமிழகத்தில் திராவிட மாடல் அரசியல், எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து, கேடு
கெட்டுள்ளது என்பதை பறைசாற்றுகிறது.
இதில் என்ன ஒரு வினோதம்
என்றால், 'வாடிய பயிரை கண்டதும் வாடினேன்' என்று, ஆன்மிகத்தின் உச்சம்
தொட்ட வள்ளலார் மீது, திராவிட மாடல்கள் காட்டும் திடீர் பாசம் தான்!
வாயில்லா ஜீவன் தலையை பொது இடத்தில் துண்டிப்பது தான், அகிம்சையின் உருவாக
திகழும் அருட்பெருஞ்ஜோதி வள்ளலாருக்கு, திராவிட மாடல்கள் செலுத்தும்
காணிக்கையா?
மேலும், பழனியில் முருகப் பெருமானுக்கு மாநாடு என்றும்
திராவிட மாடல்கள் கிளம்பியுள்ளது, உள்ளபடியே சிரிப்பைதான் வர வைக்கிறது!
இதற்கு பதில், முருகப்பெருமான் வதம் செய்த, அதர்மத்தின் வடிவான அசுரன்
சூரபத்மனை, திராவிட மாடல்கள் போற்றுவதுதான் சாலச் சிறந்தது!
இவர்களின் உண்மை சொரூபத்தோடு, அது ஒன்றே மிகவும் பொருந்தும்!