PUBLISHED ON : மே 20, 2024 12:00 AM

குருபங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு, சில காலமாய், ஓராண்டு காலம், பிணை கூட இல்லாத குண்டர் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை ஏவப்பட்டு வருகிறது.
சட்ட விரோத மது தயாரிப்பாளர், போதை பொருள் கடத்தல்காரர், வன்முறையாளர், நில அபகரிப்பாளர், திருட்டு 'சிடி' பதிப்பாளர் என, பல பிரிவும் இதில் அடங்கும்.
நகர்ப்புறங்களில் காவல்துறை ஆணையரும், கிராமப்புறங்களில் மாவட்ட கலெக்டரும், குண்டர் சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரம் படைத்தவர் என, குண்டர் சட்டம் சொல்கிறது.
சமீபகாலமாக, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில், சிப்காட் அமைப்பதை எதிர்த்து போராடிய அருள் என்ற விவசாயி மீதும், அரசையும், காவல்துறையையும், கடுமையாக விமர்சித்து வந்த 'யு டியூபர்' சவுக்கு சங்கர் மீதும், குண்டர் சட்டமானது புலி பாய்ச்சலாக பாய்ந்துள்ளது.
இந்த குண்டர் சட்டம் தொடர்பாக, மக்கள் அரசை கேட்க விரும்புவதெல்லாம் இது தான்...
கடந்த 10 ஆண்டுகளாக, போதை மருந்து கடத்தலை செவ்வனே நடத்தி வந்த, ஜாபர் சாதிக் மீது குண்டர் சட்டம் பாயாதது ஏன்?
மக்கள் வரிப்பணம் மற்றும் இயற்கை கனிம வளங்களை சுரண்டும், ஆட்சி அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் அருகில் நெருங்கக் கூட, குண்டர் சட்டம் அஞ்சுவது ஏன்?
அரசு அலுவலகங்களில், அன்றாடம் சாமானியர்களை கசக்கி பிழியும் லஞ்ச லாவண்ய செயல்களை சிரமேற்கொண்டு செயல்படுத்துவோரை, குண்டர் சட்டம், கண்டு கொள்வதே இல்லையே ஏன்?
காவல்துறையில், காக்கி உடை தரித்து சமூக விரோத செயல்கள் புரியும், கருப்பு ஆடுகளை பார்த்து, குண்டர் சட்டம் பம்முவது ஏன்?
மேற்கூறிய, சமூக விரோதிகள் மற்றும் அரசியல் அதிகார பலம் கொண்ட கொள்ளையர்கள் மீது, குண்டர் சட்டத்தை பாய்ச்சி விட்டு, பிறகு மற்றவர் மீது குண்டர் சட்டத்தை ஏவினால், இந்த ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று கருதலாம்; செய்யுமா அரசு?

