தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/நதி நீர் நல்லுறவு தேவை!

நதி நீர் நல்லுறவு தேவை!

நதி நீர் நல்லுறவு தேவை!


PUBLISHED ON : அக் 22, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:

ஆந்திராவின் கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்திற்கு வர வேண்டிய, 12 டி.எம்.சி., கிருஷ்ணா நதி நீர், தடையின்றி கிடைப்பது குறித்து, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசியுள்ளார், தமிழக முதல்வர் விஜய்.

கடந்த 1983-ல், அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும், ஆந்திர பிரதேச முதல்வர் என்.டி.ராமராவும் இணைந்து, சென்னை மக்களின் குடிநீர் தேவையை தீர்க்க எடுத்த முயற்சி தான், வரலாற்று சிறப்புமிக்க, ‘தெலுங்கு – கங்கா’ திட்டமாக உருபெற்றது.

இந்த ஒப்பந்தத்தின்படி, கிருஷ்ணா நதியிலிருந்து ஸ்ரீசைலம், சோமசீலா மற்றும் கண்டலேறு நீர்த்தேக்கங்கள் வழியாக, தமிழக எல்லையான பூண்டி ஏரியை நீர் வந்தடைய வேண்டும்.

இதற்காக, கிருஷ்ணா நதி இணைந்துள்ள மாநிலங்களான மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகம் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டன. அதன்படி, சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டுக்கு, 12 டி.எம்.சி., நீரை வழங்க வழிவகை செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலம் வரை இத்திட்டம் நல்லபடியாகத் தான் செயல்பட்டது. அவரது காலத்திற்கு பின், முறையான பராமரிப்பு இல்லாமல், கால்வாய்களில் மண் அரிப்பு ஏற்பட்டும், நீர்த்தேக்கங்கள் துார்வாரப்படாத காரணத்தாலும், நீர்வரத்து முற்றிலும் குறைந்து போனது.

இந்நிலையில் தான், புட்டபர்த்தி சத்ய சாய் பாபா அறக்கட்டளை தாமாக முன்வந்து, பல கோடி ரூபாய் செலவில் கால்வாய்களை சீரமைத்து, புனரமைத்து கொடுத்தது.

இதனால், ‘சாய் கங்கா’ என்று அழைக்கப்பட்ட இக்கால்வாய் வாயிலாக, மீண்டும் சென்னைக்கு தண்ணீர் வரத் துவங்கியது.

இருப்பினும், அடுத்து வந்த அரசுகள் கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை துார்வாருவதில் காட்டிய அலட்சியத்தால், இத்திட்டம் மீண்டும் பலவீனமடைந்தது.

இதனால், இப்போது வரை வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம், ‘சென்னைக்கு தண்ணீர் வேண்டும்’ என, தமிழக அரசு, ஆந்திராவிடம் கையேந்துகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய், முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து, சென்னைக்கு கிருஷ்ணா நதிநீரை தடையின்றி வழங்குவது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.

மேலும், நீண்டகாலத் தீர்வாகக் கருதப்படும் கோதாவரி – - காவிரி – கிருஷ்ணா நதிநீர் இணைப்பு திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் நட்பு மற்றும் ஆந்திர அரசின் ஒத்துழைப்புடன், நதிநீர் இணைப்பை செயல்படுத்தினால், கடலில் வீணாகக் கலக்கும் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் பல நுாறு டி.எம்.சி., நீரைத் தடுத்து, சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கும், நீர் வழித்தடத்தில் உள்ள திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பாசன வசதிக்கும் முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

எம்.ஜி.ஆர்., – என்.டி.ஆர்., காலத்தில் விதைக்கப்பட்ட நதிநீர் நல்லுறவை, முதல்வர் விஜய், ஆந்திர முதல்வருடன் இணைந்து முன்னெடுத்துச் சென்றால், தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையேயான நீர் கூட்டாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us