PUBLISHED ON : அக் 22, 2026 12:00 AM

மனம் புகைவது ஏன்?
பொ.ருக்மணி, கூடங்குளம், நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த தி.மு.க., ஆட்சியில், கோவையில், 'பெரியார் அறிவுலகம்' என்ற பெயரில் நுாலகம் அமைக்க திட்டமிடப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கின.
இந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்ததால், வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக முதல்வர் விஜய், அந்நுாலகத்தை தற் போது திறந்து வைத்துள்ளார்.
உடனே, 'திறந்து வைப்பதிலா பெருமை; திட்டமிட்டு உருவாக்குவது தானே பெருமை...' என்றும், 'மூடர் கூட்டத்தின் ஆட்டம் வெகு விரைவில் முடிவுக்கு வரும்' என்றும் வசை பாடியுள்ளார், தி.மு.க., தலைவர், ஸ்டாலின்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி யில் கட்டப்பட்டது என்பதற்காக, புதிய சட்டசபை கட்டடத்தை, ஓமந்துாரார் மருத்துவமனையாக மாற்றினார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அதுபோன்று மாற்றாமல், முறையாக அக்கட்டட பணிகளை முடித்து, அதை திறந்தும் வைத்துள்ளார், முதல்வர். இதற்காக, பெருமைப்படுவதற்கு பதில், திறப்பு விழா கல்வெட்டில், நம் பெயர் இருக்க வேண்டிய இடத்தில், விஜய் பெயர் இடம் பெற்றுள்ளதே என்ற பொறாமையில் ஸ்டாலின் வசைபாடலாமா?
முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட சென்னை கோயம்பேடு மேம்பாலம், வேளச்சேரி - - விஜயநகர் சந்திப்பு மேம்பாலம், மேடவாக்கம், கோவை கவுண்டம்பாளையம், உக்கடம் மேம்பாலங்கள், அத்திக்கடவு - -அவினாசி நீர்நிலை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக, ஸ்டாலின் தானே திறந்து வைத்தார்?
அதுமட்டுமா... அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிட்டு துவங்கப்பட்ட, 11 மருத்துவ கல்லுாரிகளை ஸ்டாலின் முன்னிலையில் தான், பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போதெல்லாம், 'திறந்து வைப்பதிலா பெருமை; திட்டமிட்டு உருவாக்குவது தானே பெருமை...' என்று, ஸ்டாலின் வசனம் பேசவில்லையே!
மாறாக, அவற்றையும், தி.மு.க., அரசின் சாதனைகளாக நினைத்து, மகிழ்ச்சியுடன் தானே இருந்தார் ஸ்டாலின்? இப்போது மட்டும் மனம் புகைவது ஏன்?

ஆசை இருக்கு தாசில் செய்ய!
எம்.சுப்பையா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு சீர்திருத்தப் பணியில் முறைகேடு நடந்ததாக கூறி, தேர்தல் கமிஷனுக்கு எதிராக, 'இண்டி' கூட்டணி கட்சியினர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனுவில், 14 பிழைகள் இருப்பதாக கூறி, 'அவற்றை திருத்தி தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு விசாரணைக்கு ஏற்கப் படும்' என்று கூறி, அதை ஏற்க மறுத்து விட்டார், நீதிமன்ற பதிவாளர்.
நாடு விடுதலை அடைந்த பின், கிட்டத்தட்ட, 55 ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்தும், ஒரு மனுவை எப்படி சரியாக சமர்ப்பிப்பது என்பது கூட தெரியாத இக்கூட்டம், இந்நாட்டின் தலைமை பீடத்தில் அமர்ந்து ஆட்சி புரிய ஆசைப்படுகிறது.
காங்., கட்சியின் உண்மை யான நோக்கம், வாக்காளர் பட்டியல் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதோ, தேர்தல் கமிஷனரை ராஜினாமா செய்ய வைத்து, மீண்டும் தேர்தல் நடத்த சொல்வதோ அல்ல.
எத்தனை முறை தேர்தல் நடத்தினாலும், காங்., கட்சியால் மக்களின் ஆதரவை பெற்று, தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட முடியாது என்பது ராகுலுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனாலும், கரப்பான் பூச்சிகளை வைத்து வித்தை காட்டி, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசை, 'டிஸ்மிஸ்' செய்து, குறுக்கு வழியில் ஆட்சி பீடத்தில் ஏற துடிக்கிறார். அதற்காகத் தான் இத்தனை அக்கப்போர்களும்!
'ஆசை இருக்கு தாசில் செய்ய; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க' என்பது போல், எத்தனை குட்டிக் கரணம் அடித்தாலும், ராகுலின் கனவு நிறைவேறாது!
