PUBLISHED ON : ஜூலை 10, 2026 12:00 AM

அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை பெரியார் திடலில், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி' என்ற தலைப்பில், சமீபத்தில் ஒரு கருத்தரங்கம் நடத்தியது, விடுதலை சிறுத்தைகள் கட்சி.
இதில் பங்கேற்ற மனிதநேய மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், 'ஒற்றை கட்சி ஆட்சி என்பது தான்தோன்றித்தனமாக, மேலாதிக்கப் போக்கிற்கு இட்டுச் செல்லும் சர்வாதிகாரத்தனம்' என்று சொல்லி, கூட்டணி ஆட்சியை வலியுறுத்தினர்.
அதேநேரம், 2016ல் காங்., கட்சியை தவிர்த்து, இக்கட்சிகள் இணைந்து, 'மக்கள் நல கூட்டணி'யாக நின்று, தோற்று, மீண்டும் ஆதிக்க கட்சிகளுக்கே அடிமையாகி போனதை மறந்து விட்டனர்.
தேர்தல் கூட்டணி, ஆட்சியிலும் தொடர வேண்டும் என்ற தங்கள் கொள்கையில் நிலைத்து நிற்க முடியாமல், கிடைத்தவரை லாபம் எனும் கணக்கில், ஓரிரு எம்.எல்.ஏ., - எம்.பி., சீட்டுகளுக்காக ஆதிக்க கட்சிகளுக்கு மண்டியிட்டு விட்டு, இன்று, 'ஒற்றை கட்சி ஆட்சி, சர்வாதிகாரத்தனத்தின் அடையாளம்' என்று முழங்குகின்றனர்.
கூட்டணி ஆட்சியை முன்னிறுத்தும் கட்சிக்கு தான் தங்கள் ஆதரவு என்ற நிலைப்பாட்டில், இக்கட்சிகள் உறுதியாக இருந்திருந்தால், சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 'கூட்டணி ஆட்சி அமைப்போம்; ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறோம் வாருங்கள்...' என் ற போது, ஆதரவு கரம் நீட்டியிருப்பர்!
விஜய் ஜெயிக்க மாட்டார் என்று தப்பு கணக்கு போட்டு, ஒற்றை கட்சி ஆட்சிக்கு ஜால்ரா அடித்து விட்டு, த.வெ.க., ஜெயித்த பின் ஓடோடி வந்து ஆதரவு கரம் நீட்டி, அதற்கும், கவர்னர் ஆட்சி வாயிலாக, பா.ஜ., தமிழகத்திற்குள் நுழைந்து விடும் என்று சப்பைக் கட்டு கட்டும் இவர்களின் சந்தர்ப்பவாதம் புரியாதவர்கள் அல்ல தமிழக மக்கள்!
இப்போது கூட்டணி ஆட்சி குறித்து கூட்டம் போடுவது கூட, வாரிய பதவிகளை பங்கு போடுவதற்கான தந்திரமே!
எனவே, கொள்கையாளர் வேடம் பூணாமல் இருப்பதை வைத்து திருப்தி காணுங்கள்!
-----
எங்கும் நிறைந்துள்ள சனாதனம்!
ஏ.ஸ்ரீவாஸ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட இயக்கங்களும், அதன் கொள்கையை கடைப்பிடிக்கும் கட்சிகளும், 'சனாதனத்தை ஒழிப்போம்' என்று கூக்குரல் இடுகின்றன. ஆனால், நிதர்சனத்தில் மாற்று மதத்தினர் கூட ஹிந்து மதத்தின் சனாதன சடங்கை கடைப்பிடித்து மகிழ்கின்றனர்.
நான் வசிக்கும் பகுதியில் ஒரு சர்ச் உள்ளது. சமீபத்தில், அந்த சர்ச்சின் முன் இருந்த அறிவிப்பு பலகையில், 'ததீயாராதனை அழைப்பு' என்று எழுதப்பட்டு இருந்தது.
இதை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது; காரணம், ததீயாராதனை என்பது ஹிந்து மதத்தில், வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான ஒரு வழிபாடு!
சமஸ்கிருதத்தில், 'தத்' என்றால் இறைவன் என்று அர்த்தம்; இறை அடிகளாருக்கு செய்யப்படும் ஆராதனையையே, ததீயாராதனம் என்கின்றனர், வைணவர்கள்.
கோவில்களிலும், மடங்களிலும் பெருமாளுக்கு ஆராதனை செய்து, அடியார்களுக்கு உணவளிக்கும் இந்த அன்னதான முறையை, இறைவனுக்கு செய்யும் பூஜைகள், ேஹாமங்களுக்கு இணையானதாக கருதுகின்றனர், வைணவர்கள்.
இப்படி வைணவ சம்பிரதாயத்தில் மிக முக்கிய வழிபாடாக கருதப்படும் இவ்விருந்து குறித்த அழைப்பை, ஒரு சர்ச்சில் பார்த்த போது வியப்பு தான் ஏற்பட்டது.
உலகம் உருண்டை என்பது போல், என்ன தான் மதம் மாறினாலும், அவர்கள் மரபணுவில் இருப்பது இந்நாட்டின் சனாதனமே என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது, இதுபோன்ற சடங்குகள்!
அதுமட்டுமல்ல... கிறிஸ்துவர்களின் ஒரு பிரிவினர் விக்கிரக ஆராதனையுடன், கொடிக்கம்பம் நடுதல், பூக்குழி இறங்குதல், முளைப்பாரி எடுத்தல், தேங்காய் உடைத்தல், மாலை சாற்றுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மொட்டை அடித்தல் என்று ஹிந்து மதத்தின் சனாதன சடங்குகளை செய்கின்றனர்.
சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறும் கூட்டம் இதிலிருந்தாவது தெரிந்து கொள்ளட்டும்... ஹிந்துக்களின் சனாதன தர்மம் மட்டுமல்ல; அதன் சடங்குகள் கூட அழிவில்லாதவை என்று!
--------
பாடம் கற்பிக்க வேண்டும்!
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு நடத்திய பல்வேறு தேர்வுகளில் மெகா முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்து, அவை ரத்து செய்யப்பட்டன.
அவ்வரிசையில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில், தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீட்டின் கீழ் பணியில் சேர்ந்த சில அதிகாரிகள், போலியான கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்திருந்தது, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வரவே, அவர்களது பணி நியமனத்தை ரத்து செய்தது, தமிழ்நாடு தேர்வாணையம்.
இதை எதிர்த்து, சம்பந்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இம்மனு மீதான விசாரணையில், மனுதாரர்களுக்கு வழங்கிய பட்டங்கள் உண்மையானவை அல்ல என்று, சம்பந்தப்பட்ட பல்கலையே, டி.என்.பி.எஸ்.சி.,க்கு தெரிவித்துள்ள நிலையில், தமிழ் வழியில் படித்தோருக்கான இடஒதுக்கீட்டு பலனை கோர முடியாது என்றும், சான்றிதழின் உண்மை தன்மையில் எழுந்த சந்தேகம் காரணமாக, அவர்களது பணி நியமனத்தை தேர்வாணையம் ரத்து செய்தது சரியே என்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேபோன்று நீதிபதி உதவியாளருக்கான திறன் தேர்வில், பூஜ்ஜிய மதிப்பெண் எடுத்தவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகளுக்கு உதவியாளர்களாக நியமனம் செய்யப்படும் தேர்வுகளிலேயே முறைகேடுகள் என்றால், மற்ற தேர்வுகள் எந்த அளவு நேர்மையாக நடந்திருக்கும்?
தேர்வாளர்களை வடிகட்ட, அவர்களுக்கு நேரடி திறன் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் அதிலும் முறைகேடு நடந்துள்ளது.
பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றிருந்தும், அவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு பின் மிகப் பெரிய பணப்பரிமாற்றம் நடக்காமல், தகுதியில்லாதவர்கள் தேர்வாகி இருக்க முடியாது.
அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில், இரவு - பகல் பாராது அயராமல் படித்து, தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வுகளில் நடைபெறும் இதுபோன்ற முறைகேடுகளை பார்த்து, மனம் வெறுத்து விடுகின்றனர்.
எனவே, முறைகேட்டில் ஈடுபட்டோரின் பணி நியமனங்களை ரத்து செய்வதோடு, அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்ய வேண்டும்.
குறுக்கு வழியில் வெற்றி பெற நினைப்போருக்கு, நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்!
