PUBLISHED ON : ஜூலை 09, 2026 12:34 AM

கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'நீங்கள் லஞ்சம் கொடுப்பதால் தான் அவர்கள் வாங்குகின்றனர்; அதனால், லஞ்சம் கொடுப்பதை நிறுத்துங்கள்' என்று, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார், ராஜ்யசபா எம்.பி., கமல்ஹாசன்.
மக்கள் கொடுப்பதால் தான் லஞ்சம் பெருகுகிறது என்றால், பணம் கொடுக்கா விட்டால், ஜாதி, வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, பட்டா, பட்டா பெயர் மாற்றம் போன்றவை வீடு தேடி வந்து விடுமா?
'முன்னபின்ன செத்திருந்தால் தான் சுடுகாடு தெரியும்' என்று கிராமங்களில் சொலவடை சொல்வர்.
கமல்ஹாசன் தன் அடையாளத்தை மறைத்து, ஓர் அரசு அலுவலகத்திற்கு சென்றிருந்தால், இப்படி அறிவுப்பூர்வமாக பேசி இருக்க மாட்டார்.
இந்தியன் திரைப்படத்தில் சேனாதிபதி என்ற கதாபாத்திரத்தில், இந்தியன் தாத்தாவாக வந்து, ஊழலை தடுத்தார், கமல்ஹாசன்; அதேநேரம், சந்துரு கதாபாத்திரத்தில், லஞ்சம் கொடுத்து, ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டராக மாறி, மக்களிடம் பணத்தை கறப்பார்!
இங்கு, ஊழலை எதிர்த்து போராடும் சேனாதிபதி போன்றோர் மிக குறைவு; சந்துரு போன்றவர்கள் தான் அதிகம்!
இப்படத்தில், 'இந்த அரசாங்கத்தில், கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது' என்று எழுத்தாளர் சுஜாதாவின் வசனம் இடம் பெறும்.
அதுதான், 60 ஆண்டு காலமாக திராவிட ஆட்சியாளர்களின் நிர்வாக லட்சணம்!
தற்போது, புதிதாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி வந்துள்ளது. கல்வி நிறுவனங்கள், 'ரின்யூவல்' செய்யவும்; புதியதாக அனுமதி பெறவும் லஞ்சம் கேட்கவோ, தரவோ கூடாது என்று தெரிவித்துள்ளது.
இதை ஏன், கமல்ஹாசனின், 'கொள்கை கூட்டணி' தலைவரான ஸ்டாலின், தன் ஆட்சியில் செய்யவில்லை?
கொள்ளை அடிக்க தடைவிதித்தால், கட்சி நிதி என்ற பெயரில் கோடிக்கணக்கில் வாங்கி தன் வீட்டு கல்லாப்பெட்டியை நிரப்ப முடியாது என்று எண்ணித் தானே, ஊழல் செய்வதற்கான அத்தனை கதவுகளையும் திறந்து வைத்திருந்தார்?
சாதாரண அரசு ஊழியர்கள் முதல் அமைச்சர்கள் வரை, அனைவரும் மக்கள் ரத்தத்தை உறிஞ்சக் காத்திருக்கும் போது, லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று மக்கள் நின்றால், அவர்கள் காரியம் நடந்து விடுமா?
ஊழலை ஒழிக்கப் போவதாக கூறிய கமல்ஹாசனால், திரையில் தெரிந்த, 'டிவி' பெட்டியை தான் உடைக்க முடிந்ததே தவிர, நிதர்சனத்தில், ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தானே, எம்.பி., சீட் பெற முடிந்தது!
தமிழகம் கடன் சுமையில் இருந்து மீளும்!
த.யாபேத் தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: 'மக்கள் பணத்தை தொட மாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம். 100 சதவீத துாய்மையான ஆட்சி என்பதையே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று, சட்டசபையில் முதல்வர் விஜய் பேசி உள்ளார்.
பல்வேறு துறைகளில், பணிகளுக்கான ஒப்பந்தங்களில் அரசியல்வாதிகள், இடைத்தரகர்கள், அரசு அதிகாரிகள் வாயிலாக, பொதுப்பணம் சூறையாடப்படுகிறது.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது போல், இது, ஒரு வெளிப்படையான உண்மை. ஆனாலும் சட்ட நடைமுறைகளால், பொதுப்பணத்தை சூறையாடுவோரை எளிதில் தண்டிக்க முடிவதில்லை.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே, ஊழல் குற்றச்சாட்டிற்காக தண்டிக்கப்பட்டவர்கள் மிக சிலரே!
அதனாலேயே, 'தேனெடுத்தவன் புறங்கை நக்காமலா இருப்பான்' என்று தங்களை தாங்களே மக்கள் சமாதானப்படுத்திக் கொண்டு நகர்ந்து விடுகின்றனர்.
மக்களின் இந்த மனநிலையை ஊழல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்து, பொதுப் பணத்தை மேலும் சுரண்டி கொழுக்கின்றனர்.
இத்தகைய ஊழல், பொருளாதாரத்தை செயலிழக்க செய்யக்கூடிய ஒரு பெருநோய் என்றே கூறலாம். ஏனெனில், பொதுப்பணம் முறையாக பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்படவில்லை எனில், நாட்டின் கடன் சுமை உயர்ந்து விடும்; கடன் உயரும்போது, வட்டி உயரும்!
கடந்த 2005 - 2006ல் தமிழகத்தின் மொத்த வருவாயில் வட்டிக்காக கொடுக்கப்பட்ட தொகை, 18,000 கோடி ரூபாய்; தற்போது அது, 60,000 கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது.
இப்படி வட்டி தொகையை, ஓர் அரசு உயர்த்திக் கொண்டே போனால், மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் திட்டம் சாரா செலவுகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இன்றைய சூழ்நிலையில் செலவினங்களை குறைப்பது சாத்தியமல்ல. ஏனெனில், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, கடன் - வட்டி என்ற சுழற்சிக்குள் சிக்குவது தவிர்க்க முடியாது.
இதிலிருந்து மாநிலம் விடுபட வேண்டுமாயின், ஊழல் தடுக்கப்பட வேண்டும். அதற்கு, ஆட்சியாளர்கள் ஊழல் அற்றவர்களாக இருக்க வேண்டும்; அப்போது தான், அவர்களுக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளுக்கு, கை சுத்தமாக இருக்கும்.
மேலிடத்தில், ஊழல் இல்லையெனில், பல ஆயிரம் கோடி ரூபாய் அரசு கஜானாவிற்கு வந்து சேரும்; கடன் வாங்குவது மெல்ல குறையும்; வட்டியும் குறையும்; மக்கள் நல திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த முடியும்!
எனவே, முதல்வர் விஜய், தன் அமைச்சரவை சகாக்களையும், அதிகாரிகளையும் ஊழல் செய்ய விடாமல், கண்டிப்புடன் நிர்வாகம் செய்தால், தமிழகம் கடன் சுமையில் இருந்து மீளும்; த.வெ.க., ஆட்சி, பொற்கால ஆட்சி என்று வரலாற்றில் பதியப்படும்!
தீர்வு கிடைக்குமா?
பா.பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை, புதுச்சேரியில் இருந்து எழுதுகிறார்: 'வறுமை எப்போது ஒழியும்' எனும் தலைப்பில், இப்பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்.
அவர் கூறியுள்ளது போல், தனியார் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு தற்போது, இ.பி.எப்., வாயிலாக வழங்கப்படும் மாதாந்திர, 'பென்ஷன்' தொகை, ஒரு நாளைக்கு, 100 ரூபாயை விட குறைவு.
இதற்கு அகவிலை கிடையாது!
இதுகுறித்த வழக்கில், 'வயதானவர்களுக்கு மருத்துவ செலவு அதிகம் என்பதால், இதை நியாயமான அளவுக்கு உயர்த்த வேண்டும்' என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, பல ஆண்டுகள் ஓடி விட்டன.
ஆனாலும், இந்த தீர்ப்பை மத்திய அரசு இன்று வரை அமல் படுத்தவில்லை.
இதற்கு பொருளாதார மேதைகள், பல்வேறு புள்ளி விபரங்களை கொடுக்கலாம். ஆனால், அவையெல்லாம் பசித்தவன் வயிற்றுக்கு, ஈரத் துணியாகவே இருக்கும்.
எங்களின் இந்த அவல நிலை குறித்து, இதுவரை எந்த ஒரு எதிர்க்கட்சியும், பார்லிமென்ட்டில் கேள்வி எழுப்பவில்லை.
உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இதை எடுத்தால் அன்றி, இதற்கு தீர்வு கிடைக்காது!
